பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

ஜம்மு காஷ்மீரில் தொழில்துறை மேம்பாட்டுக்கான நிதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

Posted On: 07 JAN 2021 12:51PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ஜம்மு காஷ்மீரில் தொழில்துறை மேம்பாட்டுக்கான நிதித் திட்டத்தை, தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை,  மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2037-ஆம் ஆண்டு வரை ரூ.28,400 கோடி மதிப்பில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தொழில்துறை மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கான புதிய தொழில் துறை மேம்பாட்டு திட்டத்தை மத்திய நிதித் திட்டமாக வடிவமைத்துள்ளது. வேலை வாய்ப்பை அதிகரித்து அதன் வாயிலாக சமூகப் பொருளாதாரத்தை நேரடியாக வளர்ச்சி அடையச்செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019-ன் கீழ் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதை அடுத்து, தொழில்துறை மற்றும் சேவை சார்ந்த வளர்ச்சிக்கு ஜம்மு காஷ்மீரில் புதிய உத்வேகம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் புதிய முதலீடுகளை ஈர்ப்பதுதற்போதைய முதலீடுகளை வளர்ப்பது ஆகியவற்றின் வாயிலாக புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, திறன் மேம்பாடு, நிலையான வளர்ச்சி ஆகியவற்றை உருவாக்குவது தற்போதைய திட்டத்தின் தொலைநோக்குப் பார்வை ஆகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஜம்மு காஷ்மீரின் தற்போதைய தொழில்துறை சூழலியலில் பெரும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு அதன் வாயிலாக அந்த யூனியன் பிரதேசத்தை தொழில் துறையில் வளர்ச்சி அடைந்துள்ள இதர மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுடன் தேசிய அளவில் போட்டியிடச் செய்யமுடியும்.

 தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 4.5 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூலதன வட்டி உதவித்தொகையின் வாயிலாக மறைமுகமாக சுமார் 35,000 பேருக்கு கூடுதலாக ஆதரவு வழங்கப்படும்.

2020-21 முதல் 2036-37-ஆம் ஆண்டு வரையில் இந்தத் திட்டத்திற்கு ரூ. 28,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புத் தொகுப்புத் திட்டங்களின் கீழ் இதுவரை ரூ. 1,123.84 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686743

*****

 

(Release ID: 1686743)(Release ID: 1686760) Visitor Counter : 234