பிரதமர் அலுவலகம்

தேசிய அளவியல் மாநாட்டில் பிரதமர் துவக்க உரையாற்றினார்


தேசிய அணு கால அளவு மற்றும் பாரதிய நிர்தேஷக் திரவியா ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

தேசிய சுற்றுச்சூழல் தரநிர்ணய ஆய்வுக்கான அடிக்கல்லை நாட்டினார்

எதிர்கால விஞ்ஞானிகளாவதற்கு மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிஎஸ்ஐஆர்-ஐ, அவர்களுடன் கலந்துரையாட வலியுறுத்தினார்


பாரதிய நிர்தேஷக் திரவியா-வின் சான்றளிக்கப்பட்ட தர அளவீட்டு முறை இந்தியப் பொருட்களின் தரத்தை மேம்படுத்த உதவும்

அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறையின் ‘மதிப்பு உருவாக்கல் சுழற்சி’யை ஊக்கப்படுத்த விஞ்ஞானிகளுக்கு அறிவுரை

வலிமையான ஆராய்ச்சி, வலுவான இந்திய அடையாளத்திற்கு வழிவகுக்கும்: பிரதமர்

Posted On: 04 JAN 2021 1:49PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தேசிய அளவியல் மாநாட்டு 2021-இல் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு துவக்க உரை ஆற்றினார். தேசிய அணு கால அளவு மற்றும் பாரதிய நிர்தேஷக் திரவியா பிரணாலி ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், தேசிய சுற்றுச்சூழல் தரநிர்ணய ஆய்வுக்கான அடிக்கல்லையும் காணொலி வாயிலாக அவர் நாட்டினார். தனது 75 ஆவது ஆண்டுக்குள் நுழையும் புதுதில்லியின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மையம்- தேசிய இயற்பியல் ஆய்வகம் (சிஎஸ்ஐஆர்-என்பிஎல்) இந்த மாநாட்டை நடத்தியது. நாட்டின் உள்ளார்ந்த வளர்ச்சிக்கு அளவியல்' என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் விஜய் ராகவன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கோவிட் நோய்க்கு எதிரான இந்திய தடுப்பு மருந்துகளை புதிய ஆண்டில் வெற்றிகரமாகத் தயாரித்துள்ள இந்திய விஞ்ஞானிகளை வெகுவாகப் பாராட்டினார். உலகளவில் மிகப்பெரிய தடுப்பு மருந்து வினியோகிக்கும் திட்டம் இந்தியாவில் விரைவில் தொடங்கப்படவிருப்பதாக அவர் கூறினார்.  நாடு எதிர் கொண்ட ஒவ்வொரு சவாலுக்கும் தீர்வு காண்பதற்காக சிஎஸ்ஐஆர் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டதை அவர் பாராட்டினார்.

பள்ளி மாணவர்களுடன் சிஎஸ்ஐஆர் நிறுவனத்தினர் கலந்துரையாடி அதன்மூலம் இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்தினார்.  இதன் மூலம் மாணவர்கள் எதிர்கால விஞ்ஞானிகளாவதற்கு அவர்களை ஊக்குவிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். நாட்டின் பரிணாமம் மற்றும் அளவிடுதல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த சிஎஸ்ஐஆர்-என்பிஎல்-ஐ அவர் பாராட்டினார். கடந்தகால சாதனைகளை விவாதிக்கவும், எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கு நிறுவனத்தைத் தயார்படுத்தவும் இந்த மாநாடு உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்காக புதிய நிலைகள் மற்றும் புதிய திறன் மதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் கால அளவை நிர்ணயிக்கும் சிஎஸ்ஐஆர்-என்பிஎல்-க்கு நாட்டின் எதிர்காலத்தை மாற்றுவதற்கான பொறுப்புணர்ச்சியும் உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். பல தசாப்தங்களாக நிலை மற்றும் அளவிடுதல் அந்நிய தரங்களை இந்தியா சார்ந்து இருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஆனால் தற்போது இந்தியாவின் வேகம், வளர்ச்சி, எழுச்சி பிம்பம், வலிமை ஆகியவை நமது தர மேன்மையால் நிர்ணயிக்கப்படும்.‌ அறிவியலின் அளவீடான அளவியல், எந்த ஒரு அறிவியல் சாதனைக்கும் அடித்தளமாக அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார். அளவீடு இல்லாமல் எந்த ஒரு ஆராய்ச்சியையும் தொடங்க முடியாது. நமது சாதனைகளையும் ஏதேனும் ஒரு அளவுகோலில் தான் அளவீடு செய்ய முடியும். ஒரு நாட்டின் அளவியலின் நம்பகத் தன்மையை அடிப்படையாகக் கொண்டே உலக அளவில் அந்த நாட்டின் மீது மதிப்பு ஏற்படும் என்று அவர் கூறினார். ஓர் நிலைக் கண்ணாடி போல செயல்படும் அளவியல் உலகளவில் நமது நிலையையும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் எடுத்துரைக்கின்றது என்றார் அவர். எண்ணிக்கை மற்றும் தரத்தைச் சார்ந்தே தற்சார்பு இந்தியா இலக்கை அடைய முடியும்  என்று அவர் வலியுறுத்தினார். உலகமெங்கும் இந்திய பொருட்களை நிரப்புவதை விட இந்தியப் பொருட்களை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் மனங்களையும் வென்றிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் தயாரிக்கும் பொருட்கள் சர்வதேசத் தேவையை பூர்த்தி செய்வதை மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அவற்றை ஏற்றுக் கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

கனரக உலோகம், பூச்சி மருந்து, ஜவுளி, மருந்து ஆகிய துறைகளில் தரமான பொருட்கள் தயாரிக்கப்படுவதற்கு இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட பாரதிய நிர்தேஷக் திரவியா தயாரித்துள்ள சான்றளிக்கப்பட்ட தர அளவீட்டு முறை உதவியாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். ஒழுங்குமுறையை மையமாகக் கொண்ட அணுகுமுறையிலிருந்து, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நோக்கி தொழில்துறை தற்போது முன்னேறுவதாக அவர் மேலும் கூறினார். இந்த புதிய தரங்களின் வாயிலாக, நம் நாட்டின் அனைத்து மாவட்டங்களின் பொருட்களுக்கு சர்வதேச அடையாளம் கிடைப்பதற்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாகவும், குறிப்பாக இதன் மூலம் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அதிகப் பயனை அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச தரங்களுக்கு இசைவதுபெரும் அந்நிய உற்பத்தி நிறுவனங்கள் உள்ளூர் விநியோக சங்கிலிக்காக இந்தியாவிற்கு வருவதற்கு உதவியாக இருக்கும் என்று பிரதமர் கூறினார். புதிய தரங்களின் வாயிலாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் நிலை உறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் சாமானிய இந்திய வாடிக்கையாளருக்கு தரமான பொருட்கள் கிடைப்பதுடன், ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் குறையும்.

வரலாற்று ரீதியில், எந்த ஒரு நாடும் அறிவியலை ஊக்குவிக்கும் முயற்சியில் நேரடியாக வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இதனை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையின் மதிப்பு உருவாக்க சுழற்சி என்று அவர் குறிப்பிட்டார். இது குறித்து மேலும் விளக்கிய பிரதமர், ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது என்றும் அந்த தொழில்நுட்பம் தொழில்துறையின் மேம்பாட்டுக்கு வழி வகுக்கிறது என்றும் தெரிவித்தார். புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்காக தொழில்துறை அறிவியலில் கூடுதலாக முதலீடு செய்கின்றது. இந்த சுழற்சி முறை பல்வேறு புதிய வாய்ப்புகளை நோக்கி நம்மை செலுத்திக் கொண்டிருக்கிறது. இந்த மதிப்பு சுழற்சியை முன்னெடுத்து செல்வதில்  சிஎஸ்ஐஆர்- என்பிஎல் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில்  அறிவியல் முதல் பெருந்திரளான உருவாக்கம் வரையிலான இந்த உருவாக்க முயற்சி உலக அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதில் சிஎஸ்ஐஆர் தனது பங்கை அளிக்க வேண்டும்.

சிஎஸ்ஐஆர்- என்பிஎல் தேசிய அணு கால அளவை மனித சமூகத்திற்காக இன்று அர்ப்பணித்தது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். நேனோ நொடிகளுக்குள் நேரத்தைக் கணக்கிடுவதில் இந்தியா தன்னிறைவு அடைந்து இருப்பதாக அவர் கூறினார். 2.8 நேனோ நொடிகள் என்று துல்லியமாகக் கணித்திருப்பது அதன் உயர்ந்த திறனை எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச நிலையான நேரத்துடன் 3 நேனோ நொடிகள் குறைவாக இந்திய நிலையான நேரம் துல்லியமாகக் கணிக்கப்படுகிறது. இஸ்ரோ போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு இது மிகப் பெரும் உதவியாக இருக்கும். இந்த சாதனையின் வாயிலாக வங்கிகள், ரயில்வே, பாதுகாப்பு, சுகாதாரம், தொலைத்தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை போன்று நவீன தொழில்நுட்பங்கள் சார்ந்த துறைகள் பயனடையும்.

நான்காம் தொழில் புரட்சியில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்துவதில் கால அளவின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். சுற்றுச்சூழல் துறையில் இந்தியா முன்னணி நிலையை நோக்கிப் பயணிக்கிறது. இருந்தபோதும் தொழில்நுட்பம் மற்றும் காற்றின் தரம், வெளியீடு ஆகியவற்றை அளவீடு செய்யும் கருவிகளுக்கு இந்தியா பிறரை சார்ந்து உள்ளது. இந்தச் சாதனை, குறிப்பிட்ட இந்தத் துறையில் தன்னிறைவு அடையவும் மாசைக் கட்டுப்படுத்தும் திறன் வாய்ந்த மற்றும் குறைந்த விலையிலான கருவிகளை உருவாக்கவும் ஏதுவாக அமையும். காற்றின் தரம் மற்றும் வெளியீடு சம்பந்தமான தொழில்நுட்பத்தில் உலகளவில் இந்தியாவின் பங்களிப்பை மேம்படுத்தவும் இது உறுதுணையாக இருக்கும். நமது விஞ்ஞானிகளின் தொடர் முயற்சியால் இந்தச் சாதனையை நாம் புரிந்துள்ளோம் என்று திரு மோடி கூறினார்.

பல்வேறு அறிவு சார்ந்த துறைகளில் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் விரிவாகப் பேசினார். எந்த ஒரு வளரும் சமூகத்திலும் இயற்கையான ஆராய்ச்சியானது, பழக்கமாக மட்டுமல்லாமல், இயற்கையான முறையாகவும் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார். ஆராய்ச்சியின் தாக்கம் வணிக ரீதியாகவோ அல்லது சமூக ரீதியாகவோ இருக்கலாம் என்றும் அறிவு மற்றும் புரிதலை வளர்ப்பதிலும் ஆராய்ச்சி உதவுவதாக அவர் தெரிவித்தார். ஆராய்ச்சியின் நிர்ணயிக்கப்பட்ட இறுதி இலக்கைத் தவிர எதிர்காலப் போக்கு மற்றும் பயன்களை முன்கூட்டியே எப்போதும் கணிக்க இயலாது. அறிவின் புதிய அத்தியாயத்தை நோக்கி ஆராய்ச்சி செல்கிறது என்பதும் அது எப்போதும் வீணாவதில்லை என்பது மட்டும் நிதர்சனம். மரபியலின் தந்தை திரு மென்டெல் மற்றும் நிக்கோலஸ் டெஸ்லா ஆகியோரை உதாரணமாக பிரதமர் சுட்டிக்காட்டினார். பல நேரங்களில் உடனடி இலக்கை ஆராய்ச்சியால் எட்ட முடியாமல் போகலாம், ஆனால் அதே ஆராய்ச்சி வேறு ஒரு துறையில் பெரும் சாதனையை ஏற்படுத்தலாம். திரு ஜெகதீஷ் சந்திர போசை உதாரணமாகக் குறிப்பிட்ட பிரதமர், திரு போசின் மைக்ரோவேவ் கோட்பாடு  தற்போது வணிக ரீதியாக முன்னெடுத்துச் செல்லப்படாத போதும், ரேடியோ தொலை தொடர்பு தொழில்நுட்பம் முழுவதும் அதை சார்ந்தே அமைந்துள்ளது.  உலகப் போர்களின் போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் பிறகு பல்வேறு துறைகளில் புரட்சிகரமாக வளர்ச்சி அடைந்ததையும் அவர் எடுத்துக்காட்டினார். உதாரணத்திற்கு போர்களுக்காக உருவாக்கப்பட்ட ட்ரோன்கள் தற்போது புகைப்படம் எடுக்கவும் பொருட்களை விநியோகிக்கவும் பயன்படுகின்றது. அதனால்தான் நமது விஞ்ஞானிகள் குறிப்பாக இளம் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியின் மாறுபட்ட கருவுறுதலின் வாய்ப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். தங்கள் துறையைத் தவிர்த்து பலதுறைகளில் ஆராய்ச்சியின் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும்.

சிறிய அளவிலான ஆராய்ச்சிகளும் உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதை மின்சாரத்தை உதாரணமாக கூறி பிரதமர் விளக்கினார். போக்குவரத்து, தொலைத்தொடர்பு, தொழில் துறை, அத்தியாவசியத் தேவைகள் என அனைத்தும் இன்று மின்சாரத்தில் இயங்குகின்றன. அதேபோல் குறைகடத்தி போன்ற தயாரிப்புகள் மின்னணுப் புரட்சியால் நமது வாழ்வை வளமாக்கி உள்ளன. இது போன்ற ஏராளமான வாய்ப்புகள் நமது இளம் ஆராய்ச்சியாளர்கள் முன் இருக்கின்றன. தங்களது ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் வாயிலாக அவற்றிற்கு முற்றிலும் வேறுபட்ட எதிர்காலத்தை அவர்கள் வழங்குவார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் உள்ள சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை பிரதமர் பட்டியலிட்டார். சர்வதேச புதுமைப் பட்டியலில் இந்தியா முதல் 50 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது. அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வு வெளியீடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இவற்றின் வாயிலாக அடிப்படை ஆராய்ச்சியின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. தொழில்துறை மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சி வலுவடைந்து வருகின்றது. உலகின் அனைத்து பெரும் நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது ஆராய்ச்சி நிலையங்களை அமைத்து வருகின்றன. அண்மைக் காலங்களில் இது போன்ற நிலையங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருக்கிறது.

ஆராய்ச்சி மற்றும் புதுமையில்  எண்ணிலடங்கா வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் கூறினார். எனவே புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு இணையாக அவற்றை நெறிபடுத்தலும் மிகவும் முக்கியம். அறிவுசார் சொத்துக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி நமது இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். காப்புரிமைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவற்றின் பயன்பாடும் அதிகரிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எந்தத் துறையில் நமது ஆராய்ச்சி வலுவாகவும் முன்னோடியாகவும் திகழ்கிறதோ, அந்தத் துறையில் நமது அடையாளம் மேலும் வலுவடையும். வலுவான இந்திய  அடையாளத்திற்கு இது வழிவகுக்கும் என்ற பிரதமர் கூறினார்.

விஞ்ஞானிகளை யோகிகள் என்று குறிப்பிட்ட பிரதமர் ஆய்வுக்கூடங்களில் முனிவர்களைப் போன்ற அவர்களது நடவடிக்கைகளின் வாயிலாக 130 கோடி இந்தியர்களின் நம்பிக்கையாக அவர்கள் திகழ்வதாகத் தெரிவித்தார்.

**********(Release ID: 1686034) Visitor Counter : 339