பிரதமர் அலுவலகம்

தற்சார்பு இந்தியா என்பது தரம் மற்றும் அளவு ஆகிய இரண்டையுமே சார்ந்ததாகும்: பிரதமர்


உலகில் நாம் எங்கு நிற்கிறோம் என்பதை காட்டுவதற்கான கண்ணாடி, அளவியல் ஆகும்: பிரதமர்

Posted On: 04 JAN 2021 5:10PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா என்பது தரம் மற்றும் அளவு ஆகிய இரண்டையுமே சார்ந்ததாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். தேசிய அளவியல் மாநாட்டில் (2021) பேசிய அவர் இவ்வாறு கூறினார். தேசிய அணு கால அளவு மற்றும் பாரதிய நிர்தேஷக் திரவியா பிரணாலி ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், தேசிய சுற்றுச்சூழல் தரநிர்ணய ஆய்வகத்துக்கும் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். "சர்வதேச சந்தைகளை இந்தியப் பொருட்களால் நிரப்புவது மட்டுமே நமது நோக்கமல்ல. மக்களின் மனங்களை வெல்ல நாம் விரும்புகிறோம். இந்திய பொருட்களுக்கு அதிகபட்ச சர்வதேச தேவையும், ஏற்றுக் கொள்ளுதலும் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்," என்று பிரதமர் கூறினார்.

 

தரம் மற்றும் அளவுக்காக சர்வதேச தர நிலைகளையே, தசாப்தங்களாக, இந்தியா சார்ந்து இருந்ததாக அவர் கூறினார். ஆனால் தற்போது, இந்தியாவின் வேகம், வளர்ச்சி, முன்னேற்றம், மதிப்பு மற்றும் வலிமையை நமது சொந்த தரநிலைகள் மூலம் அளவிடுகிறோம். அளவிடுதலுக்கான அறிவியலான அளவியல், எந்த ஒரு அறிவியல் சாதனைக்கும் அடிப்படையாக அமைகிறது என்று அவர் கூறினார். சிறப்பான அளவிடுதல் இல்லாமல் எந்த ஒரு ஆராய்ச்சியும் முன்னேற முடியாது. நமது சாதனைகளும் அளவிடப்பட வேண்டும். சர்வதேச மேடையில் நாட்டின் நம்பகத்தன்மை அதன் அளவிடுதலின் நம்பகத் தன்மையைப் பொறுத்தே இருக்கிறது என்று அவர் கூறினார். உலகில் நாம் எங்கு நிற்கிறோம் என்பதை காட்டுவதற்கான கண்ணாடி அளவியல் ஆகும் என்று பிரதமர் கூறினார்.

 

தற்சார்பு இந்தியா என்னும் லட்சியத்தை அடைவது என்பது தரம் மற்றும் அளவு ஆகிய இரண்டையுமே சார்ந்ததாகும் என்று பிரதமர் கூறினார். இந்தியப் பொருட்களால் உலக சந்தைகளை நிரப்புவதோடு மட்டுமில்லாமல், இந்தியப் பொருட்களை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் மனதையும் வெல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் உலகின் தேவையைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமில்லாமல் உலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். "தரம் மற்றும் நம்பகத்தன்மை ஆகிய தூண்களின் மீது இந்திய வணிகத்தை நாம் வலுப்படுத்த  வேண்டும்," என்று அவர் கூறினார்.

 

நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கப்பட்ட பாரதிய நிர்தேஷக் திரவியா, சான்றளிக்கப்பட்ட பொருள் முறை ஒன்றை வடிவமைப்பதன் மூலம் கடின உலோகங்கள், பூச்சிக்கொல்லிகள், மருந்துகள் மற்றும் ஜவுளி ஆகிய துறைகளில் தரமான பொருட்கள் தயாரிக்கப்படுவதற்கு உதவி புரியும் என்று அவர் கூறினார். ஒழுங்குமுறை சார்ந்த அணுகலில் இருந்து வாடிக்கையாளர் சந்தை அணுகுமுறைக்கு தொழில்துறை மாறிக்கொண்டிருக்கிறது. இந்த புதிய தரநிலைகளின் மூலம், நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் உள்ளூர் பொருட்களுக்கு சர்வதேச அடையாளத்தை வழங்குவதற்கான பிரச்சாரம் செய்யப்படுகிறது. குறிப்பாக, நமது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு இது பலனளிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

 

உள்ளூர் வணிக சங்கிலியை கண்டறிவதற்காக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பெரிய உற்பத்தி நிறுவனங்களுக்கு சர்வதேச தரநிலைகளைப் பின்பற்றுவது உதவும் என்று அவர் கூறினார். புதிய தரநிலைகள் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவற்றின் தரம் உறுதி செய்யப்படும். இந்தியாவில் உள்ள நுகர்வோர்களுக்கு தரமான பொருட்களை இது வழங்குவதோடு, ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் குறைக்கும் என்று பிரதமர் கூறினார்.

 

**********



(Release ID: 1686033) Visitor Counter : 203