சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 தடுப்புமருந்து ஒத்திகை நாடு முழுவதும் நடைபெற்றது

Posted On: 02 JAN 2021 3:52PM by PIB Chennai

கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கும் பணிகளை ஆய்வு செய்வதற்காக தில்லியில் தடுப்பு மருந்து ஒத்திகை நடைபெறும்  இரண்டு மையங்களுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று நேரில் சென்றார்.

தடுப்பு மருந்துகளை முறைப்படி வழங்குவதற்கு முன்பாக நாடெங்கிலும் அனைத்து மாநிலங்களிலும் 125 மாவட்டங்களிலுள்ள 285 மையங்களில் இதுகுறித்த ஒத்திகையை சுகாதார அமைச்சகம் இன்று நடத்தியது. கோவிட்-19 தடுப்பு மருந்து விரைவில் வழங்கப்பட உள்ள நிலையில், அந்த பணிகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.

இது குறித்து பேசிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், “தடுப்பு மருந்தை செலுத்துவோருக்கு அளிக்கப்படும் பயிற்சி உட்பட விநியோகிக்கும் பணிகள் அனைத்தும் முறையாக மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு விஷயத்திற்கும் முக்கியத்துவம் அளித்து விரிவான ஆலோசனைக்குப் பின்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு  வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன”, என்று கூறினார்.

தடுப்பு மருந்துகளின் கையிருப்பு, அவற்றை சேமிக்கும் வெப்பநிலை, பயனாளிகளை கண்காணிக்கும் முறை போன்றவற்றை கோ- வின் (Co-WIN) என்னும் மின்னணு தளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்த அமைச்சர், இதுவரை 75 இலட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் இந்தத் தளத்தில் விண்ணப்பித்துள்ளதாகக் கூறினார்.

நாட்டின் கடைசி மைல் வரை தடுப்பு மருந்தின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக குளிர் பதன உள்கட்டமைப்பு வசதிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஊசிகள் போன்ற இதர அடிப்படை வசதிகளும் போதிய அளவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், பொது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தடுப்பு மருந்தினால் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களை மறுத்தார். எந்த ஒரு செய்தியையும் வெளியிடுவதற்கோ அல்லது ஒளிபரப்புவதற்கோ முன்னர் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து, ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685611

------



(Release ID: 1685670) Visitor Counter : 200