சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
2020-ஆம் ஆண்டில் நீதித்துறை- ஒரு பார்வை
Posted On:
31 DEC 2020 9:45AM by PIB Chennai
2020-ஆம் ஆண்டில் சட்டம் மற்றும் நீதித் துறையில் பல்வேறு குறிப்பிடத்தக்க முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உயர் நீதிமன்றங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டதோடு, உரிய காலத்தில் நீதி வழங்கும் வகையில், குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட நெருக்கடி தருணத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு சவால்களின் இடையேயும் மின் நீதிமன்றங்கள், காணொலிக் காட்சி வாயிலாக மக்கள் நீதிமன்றங்கள் மூலமாகச் சிறப்பான சேவைகள் வழங்கப்பட்டன.
நீதிபதிகளின் நியமனங்கள் மற்றும் இட மாற்றங்கள்:
• சென்னை, மும்பை, அலகாபாத், குஜராத், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா, மணிப்பூர், கொல்கத்தா, ஒடிசா, திரிபுரா மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்றங்களில் புதிதாக 66 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.
• சென்னை, அலகாபாத், கர்நாடகா, கொல்கத்தா, சட்டீஸ்கர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா, மும்பை, கேரளா, ஜார்க்கண்ட் மற்றும் குவஹாத்தி நீதிமன்றங்களில் 90 கூடுதல் நீதிபதிகள் நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டனர்.
• மும்பை மற்றும் மேகாலயா உயர் நீதி மன்றங்களுக்கு மொத்தம் 3 தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.
மின் நீதிமன்றங்கள் திட்டமும் டிஜிட்டல் மயமாக்கல் முன்முயற்சிகளும்:
• தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் தொழில்நுட்பத்தின் மூலம் நீதி வழங்குதலை மேம்படுத்தும் நோக்கத்தோடு ஒருங்கிணைக்கப்பட்ட மின் நீதிமன்றங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 16,745 நீதிமன்றங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.
• மின் நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மொத்தம் உள்ள 2,992 வளாகங்களில் 2931 நீதிமன்ற வளாகங்கள் (98%) அதிவேக அகன்ற நெட்வொர்க்(வேன்) மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
• மின் நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள தேசிய நீதி தரவு தொகுப்பின் மூலம் சுமார் 17.55 கோடி வழக்குகள் மற்றும் 13.16 கோடிக்கும் அதிகமான ஆணைகள்/ தீர்ப்புகளை வழக்கறிஞர்களும், வழக்குரைஞர்களும் தெரிந்துகொள்ளலாம்.
• போக்குவரத்து குற்றங்களை தடுப்பதற்காக சென்னை, தில்லி, பரிதாபாத், புனே, நாக்பூர், கொச்சி, குவஹாத்தி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் மொத்தம் ஒன்பது காணொலி நீதிமன்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 24 மணி நேரம் சம்பந்தப்பட்ட நகரம் உள்ள மாநிலம் முழுவதும் எண்ணக்கூடிய இந்த நீதிமன்றங்களின் வாயிலாக கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி வரை 35,02,896 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, ரூ. 130.72 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
• கோவிட் பொது முடக்கத்தால் நேரடியான வழக்குகளுக்கு தடங்கல் ஏற்பட்டபோது, காணொலிக் காட்சி மூலம் வழக்குகள் நடைபெற்றன. பொது முடக்கம் தொடங்கியதிலிருந்து மாவட்ட நீதிமன்றங்களில் 35,93,831 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 13,74,048 வழக்குகளுமாக மொத்தம் 49.67 லட்சம் வழக்குகள் கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி வரை காணொலி வாயிலாக மட்டும் நடைபெற்றன. உச்சநீதிமன்றத்தில் சுமார் 30000 வழக்குகள் பொதுமுடக்கக் காலத்தில் நடைபெற்றன.
• சட்ட ஆவணங்கள், அபராதங்கள், நீதிமன்ற கட்டணங்கள் போன்றவை இணையதளம் வாயிலாக செலுத்தும் வசதியும் ஊக்கப் படுத்தப்பட்டது.
• மின் நீதிமன்ற திட்டத்தின்கீழ் வழக்குகளின் தற்போதைய நிலை, நீதிமன்ற உத்தரவு முதலியவற்றை வழக்கறிஞர்களுக்கும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல், இணையதளம், தகவல் மையம் போன்றவற்றின் வாயிலாக வழங்கும் நீதிமன்ற சேவைகளுக்கும் பெரும் வரவேற்பு இருந்தது.
தொலைதொடர்பு சட்ட சேவை:
• நாடெங்கிலும் 29 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் 285 மாவட்டங்களில் உள்ள 29,860 பொது சேவை மையங்களில் காணொலி காட்சி/ தொலைபேசி ஆகிய வசதிகள் மூலம் இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
• இந்த ஆண்டு 2,66,089 வழக்குகளுக்கு தொலைத்தொடர்பு சட்ட சேவை வாயிலாக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவை தவிர எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளும் வகையில் உச்சநீதிமன்றம், டெல்லி மற்றும் மும்பை உயர்நீதி மன்றங்களின் மின் குழுவுடன் இணைந்து நீதித்துறை பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684945
********
(Release ID: 1684945)
(Release ID: 1685064)
Visitor Counter : 398