பிரதமர் அலுவலகம்

மத்தியப்பிரதேச மாநிலம் முழுவதும் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை

Posted On: 18 DEC 2020 6:25PM by PIB Chennai

வணக்கம்,

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த கடுமையாக உழைக்கும் எனது சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்தியப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த விவசாய நண்பர்கள் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளீர்கள். ஆயிரக்கணக்கான விவசாயிகள் காணொலியில் கலந்து கொண்டுள்ளீர்கள். உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். கடந்த காலங்களில் மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள், ஆலங்கட்டி மழை மற்றும் இயற்கைப் பேரிடர்களால் இழப்பைச் சந்தித்துள்ளீர்கள். இந்த விழாவில், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 35 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.1,600 கோடி நிதி வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவொரு இடைத்தரகரும் இல்லை. எந்தவொரு தரகும் இல்லை. தொழில்நுட்பத்தின் மூலம் இது சாத்தியமானது.

நண்பர்களே,

இந்த விழாவில் பல்வேறு விவசாயிகளுக்கு விவசாயக் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விவசாயிக்கும் விவசாயிகள் கடன் அட்டை கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்துவதற்காக விதிகளில் திருத்தங்களை எங்களது அரசு செய்துள்ளது. விவசாயம் தொடர்பான பணிகளுக்கு தற்போது விவசாயிகள் எளிதில் பணம் பெற முடிகிறது.

நண்பர்களே,

இன்றைய இந்த நிகழ்ச்சியில், குளிர்சாதன வசதி கொண்ட பல்வேறு சேமிப்புக் கட்டமைப்பு மற்றும் பிற வசதிகள் தொடங்கப்பட்டுள்ளன அல்லது கட்டமைப்புப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் என்ன தான் முயற்சி மேற்கொண்டாலும், பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களுக்கு உரிய சேமிப்புக் கிடங்கு வசதி இல்லாவிட்டால், பெரும் இழப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் சேதமடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, குளிரூட்டி வசதி கொண்ட சேமிப்புக் கிடங்குகளை அமைப்பதற்கான பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். நவீன சேமிப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்த தொழில்துறையினர் முன்வர வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன்.

நண்பர்களே,

வளர்ந்த நாடுகளில் உள்ள விவசாயிகளுக்குக் கிடைக்கும் நவீன வசதிகள், இந்திய விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும். இதில் எந்தவொரு தாமதமும் இருக்கக் கூடாது. 25-30 ஆண்டுகளுக்கு முன்பு செய்திருக்க வேண்டிய பணிகளை தற்போது செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். ஒவ்வொரு விவசாயியின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நமது அரசு கடந்த ஆறு ஆண்டுகளாக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விவசாயிகளுக்காக தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டங்கள் குறித்த செய்தி, சில காலங்களாகப் பரவிவருகிறது. இந்த வேளாண் சீர்திருத்தங்கள் ஒரே இரவில் வந்து விடவில்லை. இந்த நாட்டில் கடந்த 20-22 ஆண்டுகளில் ஒவ்வொரு அரசும் மாநில அரசுகளுடன் விரிவான விவாதம் நடத்தியுள்ளன. பெரும்பாலும் ஒவ்வொரு அமைப்பும் இந்தச் சட்டங்கள் குறித்து விவாதித்துள்ளன.

வேளாண் துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்று நமது நாட்டில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கங்கள், வேளாண் வல்லுநர்கள், வேளாண் பொருளாதார வல்லுநர்கள், வேளாண் விஞ்ஞானிகள், முற்போக்கு விவசாயிகள் என அனைவரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். உண்மையில், விவசாயிகளின் வாக்குகளைப் பெறுவதற்காக மிகப்பெரும் வாக்குறுதிகளை அளித்ததுடன், தேர்தல் அறிக்கையில் இந்தச் சீர்திருத்தங்களை குறிப்பிட்டு விட்டு, வாக்குறுதியை நிறைவேற்றாதவர்களிடம் நாட்டின் விவசாயிகள் கேள்வி கேட்க வேண்டும். இந்த கோரிக்கைகளை அவர்கள் தொடர்ந்து நிராகரித்து வந்தனர். ஏனெனில், விவசாயிகளுக்கு அவர்கள் முன்னுரிமை அளிக்கவில்லை. இதனால், விவசாயிகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட மற்றும் அவர்கள் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கைகள், வேளாண்துறைக்குப் பொறுப்பு வகித்த போது வெளியிட்ட கடிதங்களிலிருந்து தற்போதைய சீர்திருத்தங்கள் மாறுபட்டது இல்லை. வேளாண் சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதால் அவர்களுக்கு வலி ஏற்படவில்லை. அளித்த வாக்குறுதியை தங்களால் நிறைவேற்ற முடியாத நிலையில், மோடி மட்டும் ஏன் இதைச் செய்தார்? இதற்கான பெயரை மோடி ஏன் பெற வேண்டும்? என்பதே அவர்களுக்கு ஏற்பட்டுள்ள வலி. ஒட்டுமொத்த பெயரையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் கைகூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் முந்தைய வாக்குறுதிகளுக்குப் பெயர் அளிக்கிறேன். எனக்கு எந்தவொரு பெயரும் தேவையில்லை. விவசாயிகள் எளிதாக வாழ வேண்டும் மற்றும் அவர்கள் வளமாக இருப்பதையும், நவீனமயமாக்கப்பட்ட விவசாய முறையையுமே நான் விரும்புகிறேன். தயவுசெய்து, விவசாயிகளைத் தவறாக வழிநடத்தி, அவர்களைக் குழப்பிவிட வேண்டாம்.

நண்பர்களே,

இந்தச் சட்டம் இயற்றப்பட்டு 6-7 மாதங்கள் ஆகியுள்ளன. ஆனால், தற்போது திடீரென, தொடர் குழப்பங்களை ஏற்படுத்தியும், பொய்களை உரைத்தும் அரசியல் விளையாட்டு தொடங்கியுள்ளது. விவசாயிகளின் தோளிலிருந்து தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. சட்டங்களின் எந்தப் பிரிவுகளில் பிரச்சினை உள்ளது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அரசு தொடர்ந்து கூட்டங்களிலும், பொது வெளியிலும் கேட்டு வருகிறது. தொலைக்காட்சியில் நேர்காணல்களை நமது வேளாண்துறை அமைச்சர் அளித்து வருகிறார். நானும் கூட கூறி வருகிறேன். ஆனால், அரசியல் கட்சிகளிடமிருந்தது எந்த உறுதியான பதிலும் இல்லை. இதுவே இந்த அரசியல் கட்சிகளின் உண்மையான நிலை.

நண்பர்களே,

நிலத்தை இழந்து விடுவீர்கள் என்று விவசாயிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இழந்த அரசியல் பலத்தைப் பெற முயற்சி செய்கின்றனர். விவசாயிகள் நலன் விவகாரத்தில் எவ்வாறு முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்? இதற்கு சுவாமிநாதன் குழு அறிக்கையே மிகப்பெரும் ஆதாரம். சுவாமிநாதன் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது, அதன் பரிந்துரைகள் குறித்து எட்டு ஆண்டுகளாக முடிவெடுக்காமல் இருந்தனர். விவசாயிகள் போராட்டம் நடத்திய போதும் கண்டு கொள்ளவில்லை. நாங்கள் கோப்புகளில் உறங்கிக் கொண்டிருந்த சுவாமிநாதன் குழு அறிக்கையைத் தோண்டி எடுத்து, அதன் பரிந்துரைகளை அமல்படுத்தியுள்ளோம். விவசாயிகளுக்கு செலவுத் தொகையில் 1.5 மடங்கு அளவுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்கியுள்ளோம்.

நண்பர்களே,

மத்தியப்பிரதேசத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நடைபெற்ற போது, விவசாயிகளின் அனைத்துக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. எத்தனை விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன? ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள், இன்னும் கடன் தள்ளுபடிக்காக காத்திருக்கின்றனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் கடன் தள்ளுபடி குறித்து அவர்கள் பேசுகின்றனர். ஆனால், அதனை அமல்படுத்துவதில்லை என்பதையே அனுபவங்கள் காட்டுகின்றன. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய விவசாயிகள் சிலரது கடனைத் தள்ளுபடி செய்து விட்டு, அரசியல் நலனை நிறைவேற்றிக் கொள்கின்றனர். அவர்களது வாக்குவங்கி அரசியலை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. கங்கை மற்றும் நர்மதை நதிகளின் நீரைப் போன்று நமது நோக்கம் தூய்மையானது என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கடன் தள்ளுபடிக்காக ரூ.50,000 கோடி செலவிட்டதாக அவர்கள் பேசுகின்றனர். நமது அரசு தொடங்கிய பிரதமரின் விவசாயிகள் நலநிதித் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ரூ.75,000 கோடியை விவசாயிகள் பெறுகின்றனர். இது 10 ஆண்டுகளில் ரூ.7.5 லட்சம் கோடி தொகையாகும். எந்தவொரு தரகும் இல்லாமல் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இதுவே எங்களது கலாச்சாரம்.

நண்பர்களே,

யூரியா கிடைப்பதில் 7-8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை என்ன என்பதை சிந்தித்துப் பாருங்கள். யூரியா பெறுவதற்காகக் காத்திருக்கும் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாவது வழக்கமானதாக இருந்தது. ஆனால், இன்று யூரியா தட்டுப்பாடு குறித்த எந்தச் செய்தியும் இல்லை. யூரியாவுக்காக விவசாயிகள் தாக்கப்படவில்லை. கள்ளச்சந்தையைத் தடுத்து, வலுவான நடவடிக்கைகளை எடுத்து, ஊழலை ஒழித்துள்ளோம். விவசாயிகளின் நிலத்துக்கு யூரியா சென்றடைவதை உறுதிப்படுத்தியுள்ளோம். அடுத்த சில ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், பீகாரின் பரானி, ஜார்க்கண்டின் சிண்ட்ரி, ஒடிசாவின் தால்சர், தெலங்கானாவின் ராமகுண்டம் ஆகிய பகுதிகளில் நவீன உரத் தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்க உள்ளன.

முந்தைய அரசுகள் நடவடிக்கை எடுத்திருந்தால், மிகப்பெரும் 100 நீர்ப்பாசனத் திட்டங்கள் பல ஆண்டுகளாக காத்துக் கிடந்திருக்காது. அணைகள் கட்டுவதற்கு 25 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த நீர்ப்பாசனத் திட்டங்களை இலக்கு அடிப்படையில் நிறைவேற்ற நமது அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவிடுகிறது. ஒவ்வொரு விவசாயியின் நிலத்துக்கும் நீர் சென்றுசேர வேண்டும் என்பதே நமது விருப்பம்.

 

நண்பர்களே,

விவசாயிகளுக்கு உள்ளீட்டுச் செலவு குறைவதையும், விவசாயம் தொடர்பான செலவுகள் குறைக்கப்படுவதையும் உறுதிப்படுத்த தொடர் முயற்சிகளை அரசு எடுத்துள்ளது. மிகவும் குறைந்த விலையில் சூரிய சக்தியில் இயங்கும் பம்புகளை வழங்க மிகப்பெரும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. உணவு தானியங்களை விளைவிப்பதுடன் தேனீ வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, மீன்வளம் ஆகியவற்றிலும் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று நமது அரசு ஊக்குவித்து வருகிறது. மீன்வளத்தை ஊக்குவிக்க நீலப்புரட்சியை நமது அரசு நடத்தி வருகிறது. ரூ.20,000 கோடியில் பிரதம மந்திரியின் மீன்வளர்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த 3-4 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மீன்களை ஏற்றுமதி செய்வதை இலக்காகக் கொண்டு நாடு செயல்பட்டு வருகிறது.

சகோதர, சகோதரிகளே,

அண்மையில் அறிமுகப்படுத்திய வேளாண் சீர்திருத்தங்கள் குறித்து தாங்கள் சந்தேகம் கொள்வதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. தவறான கருத்துக்களுக்கு இடமில்லை. நான் ஏற்கனவே கூறியது போல, சுவாமிநாதன் குழு அறிக்கையை நமது அரசு அமல்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலையை திரும்பப் பெறுவதாக இருந்தால், நாங்கள் ஏன் சுவாமிநாதன் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும்? இரண்டாவதாக, குறைந்தபட்ச ஆதார விலை விவகாரத்தில் அரசு உறுதியாக உள்ளது. பயிரிடுவதற்கு முன்னதாகவே குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்கிறோம்.

நண்பர்களே,

குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்பட்ட அதே மண்டிகளிலேயே புதிய சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகும், கொள்முதல்கள் செய்யப்படுகின்றன. சட்டம் இயற்றப்பட்ட பிறகு குறைந்தபட்ச ஆதாரவிலை அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதே மண்டிகளில் தான் கொள்முதல்கள் செய்யப்படுகின்றன. எனவே, குறைந்தபட்ச ஆதாரவிலை ஏற்கனவே இருந்ததைப் போன்றே தொடரும் என்று ஒவ்வொரு விவசாயியிக்கும் நான் உறுதியளிக்கிறேன்.

ஒவ்வொரு பொருளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியுள்ளோம். அதோடு, குறைந்தபட்ச ஆதார விலையில் அதிக அளவில் கொள்முதல் செய்யவும் அரசு வலியுறுத்தி வருகிறது. முந்தைய அரசு 5 ஆண்டுகாலத்தில் 1700 லட்சம் மெட்ரிக் டன் நெல்மணிகளையே கொள்முதல் செய்தது. நமது அரசு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில் 3000 லட்சம் மெட்ரிக் டன் நெல்மணிகளை கொள்முதல் செய்துள்ளது. முந்தைய ஆட்சியின் போது, 5 ஆண்டுகளில் விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்த நெல் மற்றும் கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.3,74,000 கோடியைப் பெற்றனர். நமது அரசு 5 ஆண்டுகளில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கோதுமை மற்றும் நெல்மணிகளுக்கு ரூ.8,00,000 கோடிக்கும் அதிகமாக வழங்கியுள்ளது.

2014-ஆம் ஆண்டில் பருப்பு வகைகளுக்கு மிகப்பெரும் பற்றாக்குறை இருந்தது. அப்போது, பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டன. தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், கொள்கைகளை மாற்றியமைத்து மிகப்பெரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. பருப்பு வகைகளை உற்பத்தி செய்ய விவசாயிகளை ஊக்குவித்தோம். முந்தைய ஆட்சியில் 1.5 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் எங்களது ஆட்சியில் 112 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டன. பருப்பு விளைவித்த விவசாயிகளுக்கு ரூ.50,000 கோடியை வழங்கினோம். முந்தைய அரசு 5 ஆண்டுகளில் ரூ.650 கோடி மட்டுமே வழங்கியது. இன்று, விவசாயிகளுக்கு அதிகப் பணம் கிடைப்பதுடன், பருப்பு விலையும் குறைந்துள்ளது.

நண்பர்களே,

வேளாண் சீர்திருத்தங்கள் விவகாரத்தில் அரசு கொள்முதல் செய்யும் மண்டிகளான வேளாண் உற்பத்திச் சந்தைக் குழுக்கள் குறித்து மற்றொரு பொய் பரப்பப்படுகிறது. இந்தச் சட்டங்களில் விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகளும், சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை குறிப்பிட்ட மண்டிகளில் மட்டுமே விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். புதிய சட்டத்தின்படி, விவசாயிகள் லாபமாக இருக்கும் என்று கருதினால், அதே மண்டியில் விற்பனை செய்யலாம். வெளிச் சந்தைகளில் சிறந்த விலை கிடைக்கும் என்று கருதினால், அங்கேயும் விற்றுக் கொள்ளலாம். மண்டிகள் முறையும் தொடரும். விவசாயிகள் தங்கள் விருப்பமான இடங்களில் விற்றுக் கொள்ளலாம். உண்மையில், புதிய சட்டங்கள் அமலுக்கு வந்தபிறகு, விவசாயிகள் தங்களது விளைபொருள்களை மண்டிக்கு வெளியே விற்கத் தொடங்கியுள்ளனர். இந்தச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு 6 மாதங்களைக் கடந்த நிலையிலும், இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் ஒரு மண்டி கூட மூடப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது, இந்தப் பொய் பரப்பப்படுவது ஏன்? உண்மையில், மண்டிகளை நவீனப்படுத்தவும், கணினிமயமாக்கவும் ரூ.500 கோடிக்கும் மேல் அரசு செலவிட்டுள்ளது.

மூன்றாவதாக, பண்ணைய ஒப்பந்தம் குறித்து மிகப்பெரும் பொய் பரப்பப்படுகிறது. நமது நாட்டுக்கு பண்ணைய ஒப்பந்தம் என்பது புதிதல்ல. பல்வேறு மாநிலங்களில் இந்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசு, சர்வதேச நிறுவனத்துடன் ரூ.800 கோடிக்கு பண்ணைய ஒப்பந்தம் செய்ததைக் கொண்டாடியது குறித்த செய்தி மார்ச் 8, 2019-இல் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது.

நாட்டில் ஏற்கனவே இருந்த பண்ணைய ஒப்பந்த முறையில் விவசாயிகளுக்கு மிகப்பெரும் அபாயம் இருந்து வந்தது. தற்போது புதிய சட்டங்களின் கீழ், விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் சட்ட வழிமுறைகளை நமது அரசு கொண்டு வந்துள்ளது. பண்ணைய ஒப்பந்தத்தில் விவசாயிகளுக்கு அதிகபட்சப் பலன் கிடைப்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்தவர்கள், தங்களது பொறுப்புகளிலிருந்து வெளியேற முடியாதபடி வழிமுறை செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டம் இயற்றப்பட்ட பிறகு, பல்வேறு பகுதிகளில் சார் ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் அளித்து, தங்களுக்கு வர வேண்டிய தொகையை சில நாட்களில் பெற்றுள்ளனர்.

ஒப்பந்தப் பண்ணைய முறையில், பயிர்கள் அல்லது விளைபொருள்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் போடப்படுகிறது. நிலமானது விவசாயிகளிடமே இருக்கும். இயற்கைப் பேரிடர் ஏற்பட்டாலும் கூட, ஒப்பந்தப்படி முழுத் தொகையையும் விவசாயி பெற முடியும். முதலீடு செய்பவர் திடீரென அதிக வருவாய் பெறும் நிலை ஏற்பட்டால், ஒப்பந்தப்படியான தொகைக்கும் மேலாக லாபத்தில் ஒரு பகுதியை விவசாயிக்கு வழங்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் மேற்கொள்ளலாமா, வேண்டாமா என்பதை விவசாயியே முடிவுசெய்யலாம். புதிய சட்டங்களின் படி, முதலீடு செய்பவருக்கே அபராதம் விதிக்கப்படும். விவசாயியிக்கு விதிக்கப்பட மாட்டாது. முதலீடு செய்பவர் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினால் கடும் அபராதம் செலுத்த வேண்டும். விவசாயி வெளியேற விரும்பினால் எந்தவொரு அபராதமும் விதிக்கப்பட மாட்டாது. ஒப்பந்தப் பண்ணைய முறை குறித்த விவரங்களை மாநில அரசுகள் தெளிவான மொழியில் விவசாயிகளிடையே பரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தால், மீண்டும் சிந்தித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தற்போது நடைபெறாத மற்றும் எதிர்காலத்தில் நடைபெற இயலாத விவரங்களைக் கூறி பொய் பரப்பும் சக்திகளிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள். எனது வார்த்தைகளுக்குப் பிறகும், அரசின் முயற்சிகளுக்குப் பிறகும், யாருக்காவது சந்தேகம் இருந்தால், தங்களது சந்தேகங்களைத் தீர்க்க தயாராக உள்ளோம் என்பதை விவசாய சகோதரர்களிடம் தலைவணங்கி, கைகூப்பித் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று, நாட்டில் நிலவும் பல்வேறு விவகாரங்கள் குறித்த உண்மையை தெளிவாக எடுத்துரைத்தேன். மீண்டும் ஒருமுறை, நாட்டில் உள்ள விவசாயிகள் மத்தியில் அடல்ஜி அவர்களின் பிறந்த தினமான டிசம்பர் 25-ஆம் தேதி விரிவாகப் பேச உள்ளேன். அன்றைய தினம், பிரதமரின் விவசாயிகள் நலநிதித் திட்டத்தின் கீழ், மற்றொரு தவணை நிதியை கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க உள்ளேன். கால மாற்றத்துக்கு ஏற்ப, பணியாற்றி சுயசார்பு இந்தியாவை உருவாக்க நமது நாட்டு விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நம்பிக்கையுடன், மத்தியப்பிரதேச அரசுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகளுடன் இன்று பேசுவதற்கு வாய்ப்பு அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றிகள் பல!

 

விளக்கம்: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழி பெயர்ப்பு. அவரது அசல் உரை, இந்தியில் அமைந்தது.

******************

 



(Release ID: 1683314) Visitor Counter : 167