தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

கொரோனாவைப் பற்றி 108 நாடுகளில் இருந்து 2,800 குறும்படங்கள் - மக்களின் அபரிமிதமான திறமைக்கு எடுத்துக்காட்டு: திரு பிரகாஷ் ஜவடேகர் பாராட்டு

Posted On: 14 DEC 2020 12:58PM by PIB Chennai

‘‘கொரோனாவைப் பற்றி, 108 நாடுகளில் இருந்து 2,800 குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது மக்களின் அபரிமிதமான திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர்  பாராட்டு தெரிவித்துள்ளார்

சர்வதேச கொரோனா வைரஸ் குறும்பட விழாவில், திரு பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டு பேசியதாவது:

`கொரோனா வைரஸ் பற்றி குறும்பட விழா நடத்துவது அருமையான  விஷயம். ஒரே  தலைப்பில், 108 நாடுகளில் இருந்து 2,800 குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது  மக்களின் அபரிமிதமான திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களைப் பாராட்டுகிறேன்.

இந்த கொரோனா பெருந்தொற்று, உலகம் முழுவதும் பாதிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த நெருக்கடியை இந்தியா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் திறம்பட கையாண்டது. அவர் நெருக்கடியை முன்கூட்டியே உணர்ந்து, இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலும் விரைவில் கொரோனா தடுப்பூசி கிடைக்கவுள்ளது. இரண்டாவது தடுப்பூசி ஊசி போடப்பட்டு, உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றவேண்டும்.

51வது சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் நடத்தப்படவுள்ளது. இதன் தொடக்க நிகழ்வும், நிறைவு நிகழ்ச்சியும் குறைந்தளவு பார்வையாளர்களுடன் நடத்தப்படும். திரைப்பட விழாவை மக்கள் ஆன்லைன் மூலம் காணலாம்இந்த சர்வதேச திரைப்பட விழாவில், 21 ஆவணப் படங்களும் இடம் பெறும்.’

இவ்வாறு  அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி பேசுகையில், ‘‘நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக  அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகரையும், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தையும் பாராட்டுகிறேன். மிக அதிக அளவிலான குறும்படங்களை, ஒரே இடத்துக்கு கொண்டு வந்ததற்காக, இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வர்களுக்கும் பாராட்டுக்கள்’’ என்றார்.

********

(Release ID: 1680513)



(Release ID: 1680549) Visitor Counter : 101