மத்திய அமைச்சரவை

தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 09 DEC 2020 3:42PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா 3வது தொகுப்புத் திட்டத்தின் கீழ், கொவிட் மீட்பு கால கட்டத்தில் வேலை வாய்ப்பை ஊக்குவிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு (ஏபிஆர்ஒய்) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரூ.1,584 கோடி செலவிடவும், 2020-2023 வரை இத்திட்டத்துக்கு ரூ.22,810 கோடி செலவிடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

1. 2020 அக்டோபர் 1ம் தேதி அன்றும் அதற்கு பின் 2021 ஜூன் 30ம் தேதி வரை நியமிக்கப்படும் புதிய ஊழியர்களுக்கு, 2 ஆண்டு காலத்துக்கு மத்திய அரசு மானியம் வழங்கும்.

2. 1000 பேர் வரை வேலை பார்க்கும் நிறுவனத்தில், புதிய ஊழியர்களுக்கு ஊதியத்தில் ஊழியர்களின் பங்களிப்பில் 12 சதவீதமும், வேலை அளிப்போரின் பங்களிப்பில் 12 சதவீதத்தையும்  சேர்த்து 24 சதவீத பங்களிப்பை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (இபிஎப்), மத்திய அரசு 2 ஆண்டுகளுக்குச் செலுத்தும்.

3. 1000க்கும்  மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில், ஊழியர்களின் ஊதியத்தில் தொழிலாளியின் 12 சதவீதப் பங்களிப்பை மட்டும் இபிஎப்பி-ல் மத்திய அரசு செலுத்தும்

 

4. ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாக மாத ஊதியம் பெறும் ஊழியர், கடந்த அக்டோபர் 1ம் தேதிக்கு முன், இபிஎப் அமைப்பில் பதிவு செய்த நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என்றாலும், அவருக்கு பொது கணக்கு எண் (யுஏஏன்) அல்லது இபிஎப் உறுப்பினர் எண் இல்லை என்றால், அவர் இச்சலுகையைப் பெற தகுதியுண்டு

5. யுஏஎன்  பெற்ற இபிஎப் உறுப்பினர் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாக மாத ஊதியம் பெற்று, கொவிட் தொற்று பாதிப்பு காலமான 1.3.2020 முதல் 30.09.2020 வரை வேலை இழந்து, இபிஎப்பி-ல் பதிவு செய்த நிறுவனத்தில் 30.09.2020 வரை வேலையில் சேராமல் இருந்திருந்தாலும் அவரும் இச்சலுகையைப் பெறலாம்.

6.  இந்த மானிய பங்களிப்பை ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட கணக்கில் எலக்ட்ரானிக் முறையில் இபிஎப்ஓ செலுத்தும்

7. இத்திட்டத்துக்காக இபிஎப்ஓ ஒரு மென்பொருளை உருவாக்கி, வெளிப்படையான மற்றும் நம்பகத்தன்மையான முறையை உருவாக்கும்.

8. தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயன்கள், இபிஎப்ஓ அமல்படுத்தும் மற்ற திட்டங்களுடன் கலக்காமல் இருப்பதை உறுதி செய்யும் முறையை இபிஎப்ஓ உருவாக்கும்.

********

 

(Release ID: 1679336)



(Release ID: 1679375) Visitor Counter : 412