கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
மிதக்கும் படகுத்துறைக்கான தொழில்நுட்ப விவரக்குறிப்புகளின் வரைவு விதிகள் : பொது ஆலோசனைக்காக அமைச்சகம் வெளியீடு
Posted On:
07 DEC 2020 2:34PM by PIB Chennai
கடலோரப் பகுதிகளில் உலகத் தரம் வாய்ந்த மிதவை படகுத்துறைகளை அமைக்கும் நோக்கில், மிதவை கட்டமைப்புகளின் தொழில்நுட்ப விவரங்களின் வரைவு வழிகாட்டுதல்களைத் தொகுத்து, அதை பொது மக்களின் ஆலோசனைக்காக, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மிதக்கும் கட்டமைப்புகளில் உள்ள நல்ல அம்சங்கள், பல பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக இருப்பதால், அதை அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது.
கான்கிரீட் படகுத்துறையைவிட, மிதக்கும் படகுத்துறையின் பயன்கள் பின்வருமாறு:
* மிதக்கும் படகுத்துறை சிக்கனமான தீர்வு, வழக்கமான படகுத்துறையைவிட மிகக் குறைந்த செலவில் ஏற்படுத்தலாம்.
* கான்கிரீட் படகுத்துறையுடன் ஒப்பிடுகையில், மிதக்கும் படகுத்துறையை மிக வேகமாக அமைக்க முடியும். மிதக்கும் படகுத்துறை அமைக்க, 6 முதல் 8 மாதங்கள் ஆகும். கான்கிரீட் படகுத்துறை அமைக்க 2 ஆண்டுகள் ஆகும்.
* மிதக்கும் படகுத்துறையால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவு.
* நவீன கட்டுமான தொழில் நுட்பங்களால் விரிவாக்கம் செய்வது மிகவும் எளிது.
* துறைமுகத்தை மறுசீரமைக்கும்போது, இதை எளிதாக வேறு இடத்துக்கு கொண்டு செல்ல முடியும்.
* படகுகளுக்கும், படகுத்துறைக்கும் இடையே நிலையான ஏறும் வசதியை இது அளிக்கிறது.
அலை அதிகமுள்ள இடங்களில் மிதவை படகுத்துறையை அமைப்பதுதான் சிறந்தது. அலை குறைவாக இருக்கும் காலங்களில் வழக்கமான கான்கிரீட் படகுத்துறைகள் பிரச்னைகளை ஏற்படுத்தும். இது போன்ற இடங்களில் மிதவை படகுத்துறைகள் அமைப்பது, மீனவர்கள் மீன்களை இறக்குவதற்கும் வசதியாக இருக்கும். இது உற்பத்தியை அதிகரிப்பதற்கும், மீனவர்களின் பாதுகாப்புக்கும் வழிவகுக்கும்.
சர்வதேச வழிகாட்டுதல் விதிமுறைகளைப் பின்பற்றி, சில முன்மாதிரி மிதவை கட்டமைப்புத் திட்டங்களை மத்திய துறைமுக, கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் வெற்றிகரமாக அமைத்துள்ளது. கோவாவில் மிதவை படகுத்துறை, சமர்மதி ஆற்றில் நீர்வழி விமான நிலையம் ஆகியவை மிதவை கட்டமைப்புகள் மூலம்தான் அமைக்கப்பட்டது. இதேபோன்று 80-க்கும் மேற்பட்ட மிதவை கட்டமைப்புகளை, கடலோர பகுதிகளில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக சென்னை ஐஐடி உட்பட பல தரப்பினருடன் ஆலோசித்து, வரைவு விதிகளை மத்திய அரசு உருவாக்கி, பொது மக்களின் ஆலோசனைகளைப் பெற வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு வழிகாட்டுதல்களை கீழ்கண்ட இணைப்பில் பார்த்து, பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை sagar.mala[at]nic[dot]in என்ற இ-மெயிலில் டிசம்பர் 11ம் தேதிக்குள் அனுப்பலாம்.
http://shipmin.gov.in/sites/default/files/proforma_guidelines.pdf
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678806
(Release ID: 1678863)
Visitor Counter : 202