பிரதமர் அலுவலகம்

உத்தரப் பிரதேசம், வாரணாசியில் தேவ் தீபாவளி மகோத்சவத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 30 NOV 2020 9:50PM by PIB Chennai

ஹர ஹர மகாதேவ்! ஹர ஹர மகாதேவ்! ஹர ஹர மகாதேவ்!

காசி கொத்வால், மாதா அன்னபூர்ணா, கங்கை அன்னை போற்றி!

ஜோ போலே நிஹல், சத் ஶ்ரீ அகல்! நமோ புத்தாயா!

காசி வாழ் மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள். கார்த்திக் பூர்ணிமா தேவ் தீபாவளிப் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகள். குருநானக் தேவின் பிரகாஷ் விழாவை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது நாடாளுமன்றத் தோழர் ராதா மோகன் சிங் அவர்களே, .பி. மாநில அமைச்சர்கள் பாய் அசுதோஷ், ரவீந்திர ஜெய்ஸ்வால், நீலகந்த் திவாரி அவர்களே, .பி. மாநில பிஜேபி தலைவர் பாய் சுதந்திர தேவ் சிங் அவர்களே மற்றும் இங்கு திரண்டுள்ள அன்புக்குரியவர்களே, காசி நகரத்து சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

காசி மக்களாகிய நாம், கடவுள்களின் சிறப்பு மாதமாகக் கருதப்படும் புனிதமான கார்த்திகை மாதத்தை, கடிக்கி புன்வாசி என அழைக்கிறோம். இந்தப் புனித நாளில், கங்கை நதியில் தீர்த்தமாடுவது யுகம், யுகமாக அனுசரித்து வரும் பாரம்பரியமாகும். ஆண்டாண்டு காலமாக பக்தர்கள் இங்கு வந்து கங்கையின் பல்வேறு துறைகளில் நீராடி, தர்ம காரியங்களைச் செய்வது ஐதீகமாகும். பண்டிட் ராம் கிங்கர் மகாராஜ், பாபா விஸ்வநாதரின் ராம கதையை கார்த்திகை மாதம் முழுவதும் பாடுவது வழக்கம். நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள், இந்தக் கதையைக் கேட்க வருவது வாடிக்கை. கொரோனா பல விஷயங்களை மாற்றியிருக்கலாம், ஆனால், காசியின் பக்தியையும், தர்ம காரியங்களையும், ஆற்றலையும் யாராலும் மாற்ற இயலாது. காசி எப்போதும் எழுச்சியுடன் உள்ளது. காசியின் தெருக்கள் எப்போதும் ஆற்றலை உள்ளடக்கியவையாக உள்ளன. காசியின் கரைகள் எப்போதும் புனிதமானவை. இதுதான் எனது நித்தியமான காசி.

நண்பர்களே, கங்கா மாதாவின் கரைகளில் விளக்குகளின் பண்டிகையை காசி கொண்டாடிக் கொண்டிருக்கிறது. மகாதேவரின் அருளால், நான் இந்த விழாவில் கலந்து கொள்ளும் பாக்கியத்தைப் பெற்றுள்ளேன். இன்று, காசியில் ஆறுவழிச் சாலையைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பை நான் பெற்றேன். மாலையில், தேவ் தீபாவளி விழாவைக் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.இங்கு வருவதற்கு முன்பு காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்துக்கு செல்லும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது. சாரநாத்தில் லேசர் காட்சியையும் நான் காணவுள்ளேன். மகாதேவரின் அருளாகவும், காசி மக்கள் என் மீது காட்டும் சிறப்பு கவனமாகவும் நான் இதனைக் கருதுகிறேன்.

நண்பர்களே, காசிக்கு மற்றொரு சிறப்பு நிகழ்வும் நடந்துள்ளது. நேற்று மன்கி பாத் நிகழ்ச்சியில் நான் கூறியதை நீங்கள் கேட்டிருக்கலாம். அதனை யோகி அவர்கள் முழு வேகத்துடன் இங்கே கூறினார். 100 ஆண்டுகளுக்கு முன்பு திருடிச் செல்லப்பட்ட மாதா அன்னபூர்ணாவின்  சிலை இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளது. மாதா அன்னபூர்ணா மீண்டும் தனது இருப்பிடத்துக்கு வந்து விட்டார். காசிக்கு இது அதிர்ஷ்டமான தருணமாகும். பழமை வாய்ந்த கடவுள்களின் சிலைகள் நமது மதிப்பிட முடியாத தொன்மை மற்றும் நம்பிக்கையின் அடையாளங்களாகும். இந்த முயற்சியை முன்பே செய்திருந்தால், இது போன்ற ஏராளமான சிலைகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். சிலரது சிந்தனைகள் மாறுபாடானவை. நமக்கு நாட்டின் பாரம்பரியம் முக்கியமானதாகும்.

சிலருக்கு பரம்பரை என்பது அவர்களது குடும்பம் மட்டுமே. நமக்கு பரம்பரை என்பது நமது கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் மதிப்புகளைக் கொண்டது. பரம்பரை என்பது அவர்களுக்கு குடும்பத்தினரின் சிலைகள், புகைப்படங்கள் ஆகியவையாகும். எனவே, அவர்கள் தங்களது குடும்பத்தின் பரம்பரையை பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவார்கள்.  நமது நாட்டின் பரம்பரையைப் பாதுகாத்து, சிறப்பிப்பதே நமக்கு முக்கியமாகும். நான் சரியான பாதையில் செல்கிறேனா என்பதை காசி மக்கள்தான் கூற வேண்டும். உங்களது வாழ்த்துகளால் மட்டுமே இவை அனைத்தும் நடந்துள்ளன. இன்று காசியின் பெருமை திரும்பியுள்ளது. மாதா அன்னபூர்ணா திரும்பிய செய்தி கேட்டு காசி கிளர்ந்தெழுந்துள்ளது.

நண்பர்களே, காசியின் 84 துறைகளும் லட்சக்கணக்கான விளக்குகளால் பிரகாசிப்பதைப் பார்க்க பரவசமாக உள்ளது. கங்கையின் அலைகளுக்கு இடையே இந்த விளக்குகளில் இருந்து பரவும் ஒளி மேலும் புனிதமானதாக மாறியுள்ளது. இந்த பவுர்ணமி தினத்தில், காசி மகாதேவரின் நெற்றியில் திகழும் நிலவின் ஒளியைப் போல, தேவ் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதுவே காசியின் புகழாகும். காசி அறிவொளியால் பிரகாசிக்கிறது. எனவே, காசி உலகம் முழுவதற்கும் ஒளி வழங்குகிறது என்று நமது புராணங்களில் கூறப்படுகிறது. ஆதி சங்கரரை முதலில் ஈர்த்த இந்தப் பண்டிகை கோலாகலத்தை இன்று நாம் காண்கிறோம். பின்னர், அகில்யாபாய் கோல்கர் இந்தப் பராம்பரியத்தைக் கொண்டு வந்தார். ஆயிரம் விளக்கு தூண், பஞ்சகங்காவில் அவரால் நிறுவப்பட்டது.

நண்பர்களே, இந்த நேரத்தில், நாட்டுக்காக உயிர்த் தியாகம் புரிந்த வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். எல்லைகளில் ஊடுருவ முயற்சிப்பவர்களுக்கும், ஆக்கிரமிப்பு சக்திகளுக்கும், நாட்டுக்கு உள்ளேயே இருந்து கொண்டு சதி மூலம் துண்டாட நினைப்பவர்களுக்கும் இந்த நாடு சரியான பதிலடி கொடுத்து வருகிறது. அதே நேரம், வறுமை, அநீதி, பாகுபாடு என்னும் இருட்டை அகற்ற விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. இன்று, பிரதமர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு அவர்களது மாவட்டம் மற்றும் உள்ளூரிலேயே வேலை வழங்குவதற்கான பிரச்சாரம் நடந்து வருகிறது. ஸ்வமிதா திட்டத்தின் கீழ், சாதாரண மக்களுக்கு வீடுகள் தொடர்பான சட்ட உரிமைகள் வழங்கப்படுகின்றன. இன்று விவசாயிகள் தங்களைச் சுரண்டிக் கொண்டிருந்த இடைத் தரகர்களிடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று, வங்கிகள் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க முன்வந்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு, காசியில் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களிடம் கலந்துரையாடினேன். தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் நாடு மாறி வருகிறது. தீபாவளி போன்ற பண்டிகைகள் உள்ளூர் தயாரிப்புகளால் கொண்டாடப்படுகின்றன. இதேபோல, பண்டிகை காலத்தில் மட்டுமல்லாமல் உள்ளூர் பொருட்களுக்கு எப்போதும் ஆதவளிக்க வேண்டும். இது நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற வேண்டும்.

நண்பர்களே, குருநானக் தேவ் தமது வாழ்க்கை முழுவதையும் ஏழைகளுக்கும், நலிவடைந்தவர்களுக்கும்  சேவை புரிவதற்கு அர்ப்பணித்தார். குரு நானக்குடன் காசிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர் தமது வாழ்க்கையில் நீண்ட காலத்தை காசியில் கழித்தார். காசி மக்களுக்கு அவர் புதிய பாதையைக் காட்டினார். காசியின் குருபாக் குருத்துவாரா வரலாற்று சின்னமாகத் திகழ்கிறது. இன்று நாம் சீர்திருத்தங்கள் பற்றி பேசுகிறோம். ஆனால், சமுதாயத்தின் சீர்திருத்த அடையாளமாகவே அவர் திகழ்ந்தார். சமுதாய நலனுக்காகவும், நாட்டு நலன் கருதியும் சில சீர்திருத்தங்களை நாம் செய்கின்ற போது, சில எதிர்ப்பு குரல்கள் எழும்புகின்றன. ஆனால், அந்த சீர்திருத்தங்கள் பின்னாளில் நன்மை அளிப்பதை நாம் குருநானக் வாழ்க்கையில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

காசியில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கிய போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே எதிர்த்தனர். ஆனால் இன்று காசியின் வளர்ச்சி அனைவருக்கும் பிரமிப்பூட்டுகிறது. பாபா தர்பாருக்கும், கங்கைக்கும் நூற்றாண்டுக்கும் மேலாக இருந்து வந்த நேரடி இணைப்பு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

உயரிய எண்ணத்துடன் நல்ல காரியங்களைச் செய்யும் போது, எதிர்ப்பும் சேர்ந்தே வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் இதற்கு பெரிய உதாரணமாகும். பல தசாப்தங்களாக நிலவிய அச்ச உணர்வு தற்போது அகற்றப்பட்டுள்ளது. ராமரின் எண்ணப்படி, கோவில் கட்டப்பட்டு வருகிறது.

நண்பர்களே, அயோத்தி, காசி, பிரயாகை ஆகிய பகுதி முழுவதும் இன்று மகத்தான ஆன்மீக மற்றும் சுற்றுலா தளமாக மாறி வருகிறது. அயோத்தியின் வளர்ச்சி, காசி, பிரயாக்ராஜில் கும்ப மேளா சிறப்பாக நடந்த விதம் ஆகியவை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துக்காட்டுகளாகும். இங்கிருந்து புத்தர் பிறந்த இடமான சாராநாத்துக்கு நான் செல்லவுள்ளேன். சாரநாத்தை சுற்றுலாத் தளமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியுள்ளது. லேசர் காட்சி புத்த பகவானின் கருணை இரக்கம், அகிம்சை ஆகிய போதனைகளை விளக்கும். வன்முறை, பயங்கரவாதம், அமைதியின்மை ஆகியவற்றின் அச்சுறுத்தலால் உலகம் உள்ள நிலையில், இன்றும் அந்தப் போதனைகள் பொருத்தமானவையாக உள்ளன. வன்முறையால் ஒருபோதும் வன்முறையை ஒடுக்க முடியாது. நல்லெண்ணம் மட்டுமே அமைதியை நிலைநாட்டும் என பகவான் புத்தர் போதித்தார். இதுதான் காசியின் செய்தியுமாகும். இதிலிருந்துதான் தேவ் தீபாவளி அறிமுகமானது. இந்த விளக்குகளைப் போல நமது மனமும் பிரகாசிக்க வேண்டும். அனைத்திலும் நேர்மறையான விளைவுகள் ஏற்படுவதுண்டு. இன்று காசியில் ஏற்றப்படும் வளர்ச்சி என்ற ஒளி நாடு முழுவதற்கும் பிரகாசத்தை ஏற்படுத்தும். நாட்டின் 130 கோடி மக்களின் உதவியால், தற்போது தொடங்கப்பட்டுள்ள தன்னிறைவு இந்தியா என்னும் பயணத்தை நாம் நிச்சயம் நிறைவு செய்வோம்.

இந்த நல்ல எண்ணங்களுடன், உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். முன்பு நான் அடிக்கடி உங்களை சந்தித்து வந்தேன். ஆனால், கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், எனது பயணம் தாமதப்பட்டது. நீண்டகாலமாக, மக்களைச் சந்திக்காமல் இருந்ததை இழப்பாகக் கருதுகிறேன். இன்று, இங்கு நான் வந்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம் எடுத்த பெரு முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் தாக்கம் ஏற்படாதவாறு, கடந்த 8 மாதங்களாக நாடு முழுவதும் மக்களுக்கு பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இது எனக்கு மகிழச்சியைத் தருகிறது.

இந்தப் பிரகாசமான சூழலில் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். கொரோனாவை முறியடித்த பின்னர், கங்கை நதியின் பிரவாகம் போல, நாம் விரைவான முன்னேற்றத்தை அடைவோம். கங்கை பல தடைகளைத் தாண்டி பயணிப்பதைப் போல, நாட்டின் வளர்ச்சியும் இருக்கும். இந்த நம்பிக்கையுடன் நான் தில்லிக்குத் திரும்புகிறேன். அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெய் காசி, ஜெய் மா பாரதி. ஹர ஹர மகாதேவ்!

***
 



(Release ID: 1678062) Visitor Counter : 168