பிரதமர் அலுவலகம்

ரீ-இன்வெஸ்ட் 2020-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்


மெகாவாட்டுகளில் இருந்து ஜிகாவாட்டுகளை அடையும் திட்டங்கள் நிஜமாகி வருகின்றன: பிரதமர்

இந்தியாவின் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் கடந்த ஆறு வருடங்களில் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது: பிரதமர்

வலுவான சுற்றுச்சூழல் கொள்கைகள் வலிமையான பொருளாதாரமாகவும் ஆகலாம் என்பதை இந்தியா செய்து காட்டியுள்ளது: பிரதமர்

Posted On: 26 NOV 2020 6:38PM by PIB Chennai

மூன்றாவது சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு மாநாடு மற்றும் கண்காட்சியை (ரீ-இன்வெஸ்ட் 2020), காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் நடத்தப்படும் இந்த மாநாடு, இன்று முதல் 28 நவம்பர் வரை நடக்கிறது. 'நீடித்த எரிசக்தி மாற்றத்துக்கான புதுமைகள்' என்பது ரீ-இன்வெஸ்ட் 2020-இன் மையக்கருவாகும்.

இம்மாநாட்டின் முந்தைய பதிப்புகளில் விவாதிக்கப்பட்ட விஷயங்களான உற்பத்தித் திறனில் மெகாவாட்டில் இருந்து ஜிகாவாட்டுக்கு மாறுவது, 'ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்சார தொகுப்பு' ஆகியவை குறுகிய காலத்துக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் நிஜமாகி வருவதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். கடந்த ஆறு வருடங்களாக இணையில்லா பயணம் ஒன்றை இந்தியா மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். ஒவ்வொரு இந்தியரும் அவரது திறமையை முழுவதுமாக வெளிக்கொண்டு வரும் வகையில் அவருக்கு மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்தியாவின் மின்சார உற்பத்தி திறனும், விநியோகத் திறனும் விரிவாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில் சர்வதேச அளவில் நான்காவது இடத்தில் தற்போதுள்ள இந்தியா, முக்கிய நாடுகளுடன் ஒப்பிடும் போது அதிக வேகத்தில் வளர்ந்து வருவதாக அவர் கூறினார். நம்முடைய மொத்த உற்பத்தி திறனில் 36 சதவீதமாக, அதாவது 136 ஜிகாவாட்டுகளாக இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன் தற்போது உள்ளது.

2017 முதல் நிலக்கரி சார்ந்த மின்சாரத்தை விட இந்தியாவின் வருடாந்திர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் அதிகரித்து வருவதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்இந்தியாவின் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் கடந்த ஆறு வருடங்களில் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். புதுப்பிக்க எரிசக்தி துறையில் முன்னதாகவே முதலீடு செய்ததன் மூலம் இதை அடைய முடிந்ததென்றும், இதன் மூலம், அப்போது அதிகமாக இருந்த விலைகள் தற்போது குறைந்து வருவதாகவும் திரு மோடி கூறினார்வலுவான சுற்றுச்சூழல் கொள்கைகள் வலிமையான பொருளாதாரமாகவும் ஆகலாம் என்பதை உலகத்திற்கு இந்தியா செய்து காட்டியுள்ளது என்று அவர் கூறினார். எரிசக்தி செயல்திறன் என்பது ஏதோ ஒரு அமைச்சகம் அல்லது துறைக்கு மாத்திரமானது என்றில்லாமல், ஒட்டுமொத்த அரசுக்கும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எரிசக்தி திறனை அதிகரிக்கும் வகையிலேயே நமது கொள்கைகளும் உள்ளன.

மின்னணு பொருட்கள் தயாரிப்பு துறையில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகைகளின் வெற்றியைத் தொடர்ந்து, அதே போன்ற ஊக்கத்தொகைகளை உயர்திறன் சூரிய சக்திப் பொருட்களுக்கும் தர நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என்று பிரதமர் கூறினார். "தொழில் செய்வதை எளிதாக்குவது" எங்களது முக்கிய முன்னுரிமை என்றும், முதலீட்டாளர்களுக்கு வசதிகளை வழங்குவதற்காக பிரத்யேக திட்ட மேம்பாட்டு மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அடுத்த தசாப்தத்திற்கான மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் தயாராக உள்ளதாகவும், வருடத்திற்கு 20 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் வர்த்தக வாய்ப்புகளை இவை உருவாக்கும் என்றும் அவர் அறிவித்தார். இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயணத்தில் இணையுமாறு முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

------

 



(Release ID: 1676253) Visitor Counter : 239