பிரதமர் அலுவலகம்
80வது அகில இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற, பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
சட்டத்தின் மொழி எளிமையானதாகவும் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலும் அமைய வேண்டும்: பிரதமர்
ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்த விவாதம் தேவை: பிரதமர்
உங்கள் தொகுதியைத் தெரிந்து கொள்ளுங்கள்- ஒரு மிகப்பெரும் பாதுகாப்புக் கவசம்: பிரதமர்
Posted On:
26 NOV 2020 2:58PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் கெவாடியாவில் நடைபெற்ற 80வது அகில இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற, பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மகாத்மா காந்தியின் உத்வேகத்தையும் திரு சர்தார் வல்லபாய் பட்டேலின் அர்ப்பணிப்பையும் நினைவு கூரும் நாள் இது என்று கூறினார். கடந்த 2008ஆம் ஆண்டு இதே நாளில் மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரையும் அவர் நினைவு கூர்ந்தார். வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையினருக்கு மரியாதை செலுத்திய அவர், இன்று தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா புதிய வடிவில் போராடி வருவதாகக் கூறினார்.
அவசரநிலைப் பிரகடனம் குறித்து பேசிய திரு மோடி கடந்த 1970களில், அதிகாரப் பிரிவினைக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, எனினும் நல்லொழுக்கம் மற்றும் அதிகாரப் பிரிவினை குறித்து அரசியலமைப்பில் தெரிவித்துள்ளது போலவே, அரசியலமைப்பின் வாயிலாக அதற்கு விடை அளிக்கப்பட்டது. அவசரநிலைக்குப் பிறகு அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, சட்டமன்றம் நிர்வாகம் மற்றும் நீதித்துறையில், கட்டுப்பாடுகளும், இருப்புகளும் மேலும் கடுமையாக்கப்பட்டன. அரசின் 3 கிளைகளின் மீது 130 கோடி இந்தியர்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இது சாத்தியமாக்கப்பட்டது, இந்த நம்பிக்கை காலப்போக்கில் மேலும் வலுவடைந்துள்ளது என்று பிரதமர் கூறினார்.
நமது அரசியலமைப்பின் வலிமை, நெருக்கடியான தருணங்களில் நமக்கு உதவிகரமாக இருக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்திய தேர்தல் முறையின் நெகிழ்வுத் தன்மையும் கொரோனா பெருந்தொற்றில் நமது எதிர்வினையும் இதனை நிரூபித்துள்ளது. அண்மைக்காலங்களில் சிறந்த வெளிப்பாடுகளை வழங்கி, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஊதியக் குறைப்பை ஏற்றுக்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை அவர் பாராட்டினார்.
திட்டங்களை நிலுவையில் வைக்கும் போக்கை எதிர்த்து பிரதமர் எச்சரித்தார். சர்தார் சரோவர் அணை திட்டத்தை உதாரணமாகக் கூறிய அவர், இந்தத் திட்டம் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்ததால் குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் மக்களுக்கு அதன் பயன்கள் தடைபட்டு இருந்ததாகவும் அணை கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பின்னர், இந்தப் பலன்கள் அவர்களை எட்டியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
கடமைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, உரிமைகள், கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கையின் அடிப்படையாக இந்த கடமைகளைக் கருத வேண்டும் என்று கூறினார். “நமது அரசியலமைப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன, எனினும் கடமைகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் ஒரு சிறப்பு அம்சமாகும். மகாத்மா காந்தி இதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு இடையே ஓர் நெருக்கத்தை அவர் கண்டார். நமது கடமையை நாம் நிறைவேற்றும்போது நமது உரிமைகள் தாமாகவே பாதுகாக்கப்படுவதாக அவர் கருதினார்”, என்று பிரதமர் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் மாண்புகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் என்பது டிஜிட்டல் பாதுகாப்பிற்கு எப்படி ஓர் சிறப்பு அம்சமோ அதேபோல் உங்கள் தொகுதியைத் தெரிந்து கொள்ளுங்கள் என்பதும் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் கேடயமாக விளங்கும். அனைத்து சட்டங்களுடன் மக்கள் நேரடித் தொடர்பை உணரும் வகையில் சட்டத்தின் மொழி எளிமையானதாகவும் அவர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலும் அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வழக்கொழிந்த சட்டங்களை நீக்கும் முறைகள் எளிமையானதாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், சட்டத் திருத்தம் மேற்கொள்ளும் போது பழைய சட்டங்கள் தாமாகவே ரத்து செய்யப்பட்டுவிடும் முறையை உருவாக்கலாம் என்று யோசனை தெரிவித்தார்.
ஒரே தேசம், ஒரே தேர்தல் குறித்த விவாதத்திற்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார். நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவது குறித்து அவர் பேசினார். பொதுவான வாக்காளர் பட்டியலை இதற்குப் பயன்படுத்தலாம். இதை செயல்படுத்துவதில், சட்டமன்றங்களில் டிஜிட்டல் புதுமைகள் அறிமுகப் படுத்தப்பட வேண்டும்.
மாணவர்கள் பாராளுமன்றத்தை நடத்துவது குறித்து யோசனை தெரிவித்த பிரதமர், இதனை, பேரவைத் தலைவர்களே வழிகாட்டி நடத்தலாம் என்று கூறினார்.
--------
(Release ID: 1676076)
Visitor Counter : 247
Read this release in:
Odia
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Malayalam