பிரதமர் அலுவலகம்

லக்னோ பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் உரை


உள்ளூர் பொருட்களுக்கு பல்கலைக்கழகம் ஆதரவளிக்க வேண்டும்: பிரதமர்

நேர்மறை சிந்தனையையும், அணுகலுக்கான சாத்தியக்கூறுகளையும் எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்: பிரதமர்

நெகிழ்வுத்தன்மையையும், தன்னம்பிக்கையையும் தேசிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கும்: பிரதமர்

கடந்த ஆறு ஆண்டுகளில், அதற்கு முந்தைய 20 ஆண்டுகளில் விற்கப்பட்டதை விட அதிக காதி விற்பனை: பிரதமர்

Posted On: 25 NOV 2020 7:14PM by PIB Chennai

லக்னோ பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறுவன விழாவில் பிரதமர்  திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார். நூற்றாண்டு நினைவு நாணயத்தையும், இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்ட பல்கலைக்கழக நூற்றாண்டு சிறப்பு தபால் தலை மற்றும் உரையையும் அவர் வெளியிட்டார். பாதுகாப்பு அமைச்சர் மற்றும் லக்னோ நாடாளுமன்ற உறுப்பினர் திரு ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

உள்ளூர் கலைகள் மற்றும் பொருட்களைப் பற்றிய படிப்புகளை வழங்குமாறு பல்கலைக்கழகத்தைக் கேட்டுக் கொண்ட பிரதமர், இந்தப் பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தினார். லக்னோ 'சிகன்காரி', மொராதாபாத்தின் பித்தளை பாத்திரங்கள், அலிகார் பூட்டுகள், பதோஹி கம்பளங்கள் ஆகியவற்றை சர்வதேச அளவில் போட்டியிட செய்வதற்கான மேலாண்மை, சந்தைப்படுத்துதல் மற்றும் உத்தியைப் பற்றிய படிப்புகள் பல்கலைகழகத்தால் வழங்கப்பட வேண்டும். 'ஒரு மாவட்டம், ஒரு பொருள்' என்னும் சிந்தனை வெற்றி பெற இது உதவும். கலைகள், கலாச்சாரம், ஆன்மிகம் ஆகிய தலைப்புகளோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பது அவை சர்வதேச அளவில் சென்றடைய உதவும் என்று பிரதமர் கூறினார்.

 

ஒருவரின் திறனை முழுமையாகப் பயன்படுத்துவது குறித்து பேசிய திரு மோடி, ரே பரேலி ரயில் பெட்டி தொழிற்சாலையை உதாரணமாகக் கூறினார். பல்லாண்டுகளாக, சிறு பொருட்கள் மற்றும் கபுர்தலாவில் தயாரிக்கப்பட்ட பெட்டிகளுக்குத் தேவையான சில இணைப்புகளைத் தவிர, இந்த தொழிற்சாலைக்காக செய்யப்பட்ட முதலீடு பெரிதாக பயன்படுத்தப்படவில்லை. ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான திறன் இந்த தொழிற்சாலையில் இருந்தாலும், அதை முழுமையாகப் பயன்படுத்தியதே இல்லை. 2014-இல் இது மாறியது, தொழிற்சாலையின் முழு திறனும் தற்போது பயன்படுத்தப்பட்டு, நூற்றுக்கணக்கான பெட்டிகளை இன்றைக்கு இது தயாரிக்கிறது. திறமைகளைப் போன்றே, நம்பிக்கையும், எண்ணமும் முக்கியம் என்று பிரதமர் கூறினார். மேலும் பல எடுத்துக்காட்டுகளை குறிப்பிட்ட திரு மோடி, " நேர்மறை சிந்தனையையும், அணுகலுக்கான சாத்தியக்கூறுகளையும் எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்," என்றார்.

 

போர்பந்தரில் காந்தி ஜெயந்தி அன்று, நாகரீக அணிவகுப்பை மாணவர்களின் உதவியுடன் நடத்தி காதியை பிரபலப்படுத்திய தனது அனுபவத்தை திரு மோடி பகிர்ந்து கொண்டார். காதியை 'நவீனமானதாக' இது ஆக்கியது. கடந்த ஆறு ஆண்டுகளில், அதற்கு முந்தைய 20 ஆண்டுகளில் விற்கப்பட்டதை விட அதிக காதி விற்பனையாகி உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

 

நவீனகால வாழ்க்கையின் கவனச்சிதறல்களையும், சாதனங்கள் எவ்வாறு நமது  கவனத்தை கவர்கின்றன என்பதை பற்றியும் பேசிய பிரதமர்சிந்தித்தல் திறன் மற்றும் சுய பரிசோதனை ஆகியவை இளைஞர்களிடையே குறைந்து வருவதாக பிரதமர் கூறினார். இந்த அனைத்து கவனச் சிதறல்களுக்கிடையே தங்களுக்காக நேரத்தை ஒதுக்குமாறு இளைஞர்களை அவர் கேட்டுக் கொண்டார். அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க இது உதவும் என்று அவர் மேலும் கூறினார்.

 

மாணவர்கள் தங்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்வதற்கான கருவியாக தேசிய கல்விக் கொள்கை விளங்கும் என்று பிரதமர் கூறினார். மாணவர்களிடையே தன்னம்பிக்கை மற்றும் நெகிழ்வுத் தன்மை ஆகியவற்றை இந்த புதிய கொள்கை வழங்கும். மரபுகளை உடைத்து, மாற்றத்தைப் பற்றி கவலைப்படாமல் புதிதாக சிந்திக்குமாறு மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார். புதிய கொள்கையைப் பற்றி விவாதித்து அதை செயல்படுத்த உதவுமாறும் மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

*******************



(Release ID: 1675831) Visitor Counter : 206