பிரதமர் அலுவலகம்

கோவிட்-19 குறித்த முதலமைச்சர்கள் மெய்நிகர் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய நிறைவுரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 24 NOV 2020 6:54PM by PIB Chennai

அனைத்து மாண்புமிகு முதலமைச்சர்களும், தீவிரத் தன்மையை உணர்ந்து, விளக்கம் அளித்ததற்காக நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை, நடந்த அனைத்து ஆலோசனை கூட்டங்களும்,அதிகாரிகள் மட்டத்திலானவையாக இருந்துள்ளன. இந்த விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் அனுபவங்கள் உள்ளன. முதலமைச்சர்களுக்கு சிறப்பு அனுபவங்கள் இருக்கும்.

பொது வாழ்க்கையில் பணியாற்றுவோருக்கு சிறப்பான கண்ணோட்டம் உள்ளது. நீங்கள் அனைவரும் சில முக்கியமான விஷயங்கள் பற்றி தெரிவித்தீர்கள். அவற்றை எழுத்து மூலம், விரைவாக எங்களுக்கு அனுப்பினால், நமது உத்தி குறித்து முடிவு செய்ய எளிதாக இருக்கும். இது யார் மீதும் திணிப்பாக இருக்காது. மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், மத்திய அரசு மட்டும் முடிவெடுப்பதாக அது இருக்காது. நாம் அனைவரும் சேர்ந்து முடிவெடுப்பதால், ஒவ்வொருவரின் ஆலோசனையும் மிகவும் முக்கியமானதாகும்.

கொரோனா தொற்று தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, இன்று நிலைமை மோசமடைந்துள்ள சில மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் நான் பேசினேன். தடுப்பூசியைப் பொறுத்தவரை, அதனை விநியோகிப்பது பற்றி பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், ஊடகங்கள் கூறுவது முற்றிலும் மாறானது. நாம் நடைமுறையில் தொடர்புள்ளவர்களாக இருப்பதால், நாம் அதிகாரப்பூர்வமாக முன்னேறிச் செல்ல வேண்டியுள்ளது. தற்போது, நிலைமை ஓரளவுக்கு தெளிவாகவே உள்ளது.

முகம் தெரியாத சக்தியுடன் போராடும் சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை, நம் அனைவரின் முன்பாக இருந்த நேரமும் உண்டு. ஆனால், நாட்டின் ஒன்றுபட்ட முயற்சிகள் காரணமாக சவாலை நாம் எதிர்கொண்டு, இழப்புகளைக் குறைத்தோம்.

நோயிலிருந்து குணமடையும் விகிதத்தையும், இறப்பு விகிதத்தையும் பொறுத்தவரை, உலகின் மற்ற நாடுகளை விட இந்தியா நல்ல  நிலைமையில் உள்ளது. பரிசோதனை முதல் சிகிச்சை வரை மிகப் பெரிய கட்டமைப்பு நமது கூட்டு முயற்சிகளால், நடைபெற்று வருகிறது. இந்தக் கட்டமைப்பு தொடர்ந்து விரிவாக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் கேர்ஸ் மூலம், ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள் விநியோகத்தை உறுதி செய்ய சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் உற்பத்தியைப் பொறுத்தவரை, நாட்டிலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும், மாவட்ட மருத்துவமனைகளும் தன்னிறைவு பெற்றவையாகப் பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, 160-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் நிலையங்களை உருவாக்கும் நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. பிரதமர் கேர்ஸ் நிதி மூலம் ஆயிரக்கணக்கான புதிய வென்டிலேட்டர்கள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் கேர்ஸ் நிதி மூலம் வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கு ஏற்கனவே, இரண்டு ஆயிரம் கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே, கொரோனா பரவத் துவங்கியதில் இருந்து, கடந்த 8-10 மாதங்களில் பெறப்பட்ட அனுபவங்கள் பற்றிய போதுமான தரவுகளை நாடு பெற்றுள்ளது. கொரோனாவைப் பராமரிப்பதில், ஒருங்கிணைந்த அனுபவம் பெறப்பட்டுள்ளது. வருங்கால உத்தியை வகுக்கும் போது, கடந்த சில மாதங்களில் சமுதாயமும், மக்களும் எவ்வாறு செயல்வினையாற்றினார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என நான் எண்ணுகிறேன். கொரோனா காலத்தின் பல்வேறு மட்டங்களில், வெவ்வேறு இடங்களில் உள்ள இந்திய மக்களின் செயல்பாடுகள் மாறுபாடாக இருந்ததைக் காணலாம்.

முதல் கட்டத்தில், மிகப்பெரிய அச்சம் நிலவியது. யாருக்கும் என்ன நடக்கிறது எனப் புரியவில்லை. உலகம் முழுவதும் அதே நிலை நிலவியது. ஒவ்வொருவரும் பீதியடைந்து அதற்கு ஏற்றபடி நடந்து கொண்டனர். முதல் கட்டத்தில் தற்கொலை சம்பவங்களும் நடந்தன. சிலருக்கு கொரோனா தாக்கியது தெரிந்ததும், தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டனர்.

அதன் பின்னர் இரண்டாவது கட்டம் வந்தது. இரண்டாவது கட்டத்தில், மக்கள் மற்றவர்கள் மீது சந்தேகம் கொள்ளத் துவங்கினர். அச்சம் அப்போதும் நிலவியது. யாருக்காவது கொரோனா பாதிக்கப்பட்டால், அவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று உணரத் தொடங்கி விட்டனர். வீட்டுக்குளேயே, ஒரு வித வெறுப்புணர்வு நிலவியது. சமுதாயத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுவோமோ என்ற அச்சமும் ஏற்பட்டது. இந்த அச்சம் காரணமாக, தொற்று பாதிப்பை சிலர் மறைக்கத் தொடங்கினர். அடுத்தவர்களுக்கு இது தெரிந்தால், நம்மை அவர்கள் விலக்கி விடுவார்கள் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது. படிப்படியாக மக்கள் இதனை உணரத் தொடங்கி, அதிலிருந்து வெளியே வந்தனர்.

பின்னர் மூன்றாவது கட்டம் வந்தது. மக்கள் மிகவும் கவனமாக இருக்க ஆரம்பித்தனர். இதைப்பற்றி தெரிந்து கொண்டு, பாதிப்பை வெளிப்படுத்தி, அதிலிருந்து குணமாகி வந்தனர். தாங்களாகவே, தனிமைப்படுத்திக் கொண்டதுடன், மற்றவர்களுக்கும் அறிவுறுத்தினர். ஒரு வகையில், மக்கள் தாங்களாகவே, இதைப்பற்றி புரிந்து கொண்டனர்.

மக்கள் விழிப்புடன் நடந்து கொள்வதை இப்போது நாம் கவனித்திருக்கலாம். மூன்றாவது கட்டத்திற்கு பின்னர், நாம் இப்போது நான்காவது கட்டத்தில் உள்ளோம். குணமடைபவர்கள் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், இந்த தொற்று பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடியது இல்லை, தற்போது அது பலவீனமடைந்துள்ளது என்று மக்கள் உணர்ந்துள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டாலும், பலர் அதிலிருந்து மீளுகின்ற தெம்பு மக்களுக்கு வந்துள்ளது.

இதன் காரணமாக, தற்போது ஒருவித அலட்சிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், பண்டிகைகள் வரும் போது, நான் ஒவ்வொருவரிடமும் பிரத்யேகமாக கைகூப்பி கேட்டுக் கொண்டேன். தடுப்பூசி இன்னும் கிடைக்கவில்லை, மருந்துகள் இல்லை என்ற நிலையில், யாரும் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்ளவேண்டாம் என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நான் கேட்டுக் கொண்டேன். நம்மை நாமே காத்துக் கொள்வது ஒன்றுதான் ஒரே வழி. நாம் தவறு செய்தோமானால், அந்த சிறு மெத்தனமே அச்சுறுத்தலாக மாறிவிடும்.

இந்த நான்காவது கட்டத்தில், கொரோனாவின் தீவிரத்தன்மை குறித்து மக்களுக்கு நாம் அறிவுறுத்த வேண்டும். தடுப்பூசி கண்டு பிடிப்பதில் பலர் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவைப் பற்றி மட்டுமே நாம் கவனம் செலுத்த வேண்டும். இதிலிருந்து எந்த சூழ்நிலையிலும் நாம் பின்வாங்கக்கூடாது. ஆரம்பத்தில், நாம் சில கட்டுப்பாடுகளை விதித்தோம். ஏனெனில், நாம் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி இருந்தது. இப்போது, நம்மிடம் குழுக்கள் உள்ளன. மக்களும் தயாராக உள்ளனர்.அவர்கள் கட்டுப்பபாட்டுடன் நடந்து கொண்டால், நிலைமை முன்னேறும். திட்டமிட்டபடி நாம் முன்னேறி சென்றால், இது மேலும் பரவாதவாறு நம்மால் தடுக்க முடியும். புதிதாக எந்தப் பிரச்சினையும் இருக்காது.

பேரிடர் என்னும் ஆழமான கடலில் இருந்து கரையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இன்று, தொற்று குறைந்திருந்த பல நாடுகளில், மீண்டும் அதிகரித்திருப்பதை நாம் காண்கிறோம். இதேபோல, நமது சில மாநிலங்களில் நிலைமை கவலையளிப்பதாக உள்ளது. எனவே, அரசிலும், நிர்வாகத்திலும் உள்ள நாம் அனைவரும் மிகவும் கவனமாகவும், உஷாராகவும் இருக்க வேண்டியது அவசியம். தொற்று பரவுவதைக் குறைக்க முயற்சிகளை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். பரிசோதனைக்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும். தொற்றை உறுதிப்படுத்துதல், தொடர்பைக் கண்டுபிடித்தல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். தொற்று பரவும் விகிதத்தை 5%_க்கும் கீழாக கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும். மாநில அளவில் ஆலோசிப்பதற்கு பதிலாக, உள்ளூர் அளவில் ஆலோசிப்பதே, பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வழியாக இருக்கும்.

இரண்டாவதாக, ஆர்டி பிசிஆர் சோதனையை அதிகரிக்க வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளைக் கண்காணிப்பது அவசியமாகும். நிலைமை மோசமடைந்த பின் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால், அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போகலாம். கிராம அளவில் சுகாதார மையங்கள் சிறப்பான முறையில். நவீன வசதிகளுடன் பராமரிக்கப்பட வேண்டும். கிராமங்களுக்கு அருகில், போதிய ஆக்சிஜன் விநியோகம் மற்றும் முறையான உள்கட்டமைப்பு வசதிகளை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்துக்கும் கீழே கொண்டு வருவதுதான் நமது இலக்காகும். நான் ஏற்கனவே கூறியபடி, தொலை தூரப் பகுதிகளில், ஏன் இறப்புகள் நிகழ்கின்றன என்பதைக் கண்டறிய வேண்டியது அவசியமாகும். அதில் அதிகமாக கவனம் செலுத்துவதன் மூலம், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நம்மால் முடியும். ஒரு முக்கியமான விஷயம், விழிப்புணர்வு பிரச்சாரத்தில் எந்தவிதக் குறைபாடும் இருக்கக் கூடாது. கொரோனாவைத் தடுப்பதற்கான நடைமுறைகளைக் கையாளுவதும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வதும் மிகவும் அவசியமாகும். சில காலத்துக்கு முன்பு எப்படி, செல்வாக்குள்ள, பிரபல நபர்களை இதில் ஈடுபடுத்தினோமோ அவ்வாறு மீண்டும் செய்ய வேண்டும்.

நண்பர்களே, உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகளை நீங்கள் அறிந்திருக்கலாம். தடுப்பூசி பற்றிய ஆராய்ச்சி உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் அநேகமாக, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தடுப்பூசி பற்றிய ஒவ்வொரு கட்டம் குறித்தும் இந்திய அரசு உன்னிப்புடன் கவனித்து வருகிறது. தடுப்பூசி ஒரு முறை போடுவதா, இரண்டு முறை அல்லது மூன்று முறை போடுவதா, அதன் விலை என்ன என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இன்னும் பல வினாக்களுக்கு விடை தெரியவில்லை. உருவாக்கப்படும் தடுப்பூசிகளுக்கு பெரு வணிக மட்டத்தில் பெரும் போட்டி நிலவுகிறது. அதைபோல ராஜீய ரீதியிலும் அதைப் பெறுவதற்கு முயற்சிகள் நடக்கின்றன. நாமும் உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்காக காத்திருக்கிறோம். இந்திய தயாரிப்பாளர்களுடனும், சர்வதேச நிறுவனங்களுடனும் நாம் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்.

நண்பர்களே, ஆரம்பத்தில் இருந்து, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், நாட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு நாம் உயர் முன்னுரிமை அளித்து வந்தோம். தடுப்பூசி வந்த பின்னர், அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும் என்பதே நமது முன்னுரிமையாகும். இதில் எந்த மாறுபாடும் கிடையாது. தடுப்பூசி அளிப்பது மிகப்பெரிய நடைமுறையாக இருக்கும் என்பதால், அது சுமுகமாகவும், முறையாகவும், நீடித்த தன்மையுடனும் இருக்க வேண்டும். எனவே, இதில் ஒவ்வொரு அரசும், ஒவ்வொரு அமைப்பும் கூட்டாகச் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

தடுப்பூசி விஷயத்தில் இந்தியாவுக்கு உள்ளது போன்ற அனுபவம் பல முக்கிய நாடுகளுக்கு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. வேகம் இருப்பதுடன், பாதுகாப்பும் அதே அளவுக்கு அவசியமாகும். இந்திய மக்களுக்கு அளிக்கப்படும் தடுப்பூசி, அறிவியலின் ஒவ்வொரு அம்சத்தையும் கொண்டதாக இருக்கும். தடுப்பூசி வழங்கும் நடைமுறை குறித்து மாநில அரசுகளுடன் திட்டமிடப்பட்டு வருகிறது. மாநில அரசுகளுக்குத் தான் தடுப்பூசிகளை எப்படி வழங்குவது, சேமிப்பு வசதிகளை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றி நன்கு தெரியும். தேவைப்பட்டால், இதற்கென விரிவான திட்டடத்தை விரைவில் நாம் இறுதி செய்வோம்.

எந்த தடுப்பூசி எவ்வளவு விலை என்று உங்களில் சிலர் கேட்டீர்கள். அதைப்பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் இரண்டு தடுப்பூசிகள் முன்னணியில் உள்ளன. நமது ஆராய்ச்சியாளர்கள் உலகம் முழுவதும் உள்ளவர்களுடன் தொடர்ந்து தடுப்பூசி உருவாக்குவதில் ஒத்துழைத்து வருகின்றனர். தடுப்பூசிகளை உருவாக்கும் உலக நிறுவனங்கள் சில இந்தியாவில் அவற்றை உற்பத்தி செய்வது பற்றியும் பேசி வருகின்றன. அதே சமயம் பக்க விளைவுகள் ஏற்படாத வண்ணம் இருப்பதற்கான சான்றிதழ்களும் அவசியம்.

நாம் விஞ்ஞானிகள் அல்ல. நமக்கு அதில் நிபுணத்துவம் இல்லை. எனவே, உலக விதிமுறைகளை நாம் பின்பற்றி, அதன்படி முன்னேறி செல்ல வேண்டும். தடுப்பூசியை மக்களுக்கு எவ்வாறு கொண்டு சேர்ப்பீர்கள் என்பது பற்றிய விரிவான திட்டம் குறித்து  எழுத்து மூலம் விரைவில் சமர்ப்பிக்க வேண்டும். முடிவு எடுப்பதற்கு உங்களது ஆலோசனைகள் மிகவும் முக்கியம் ஆகும். மாநிலங்களின் அனுபவம் இதில் மிகவும் அவசியமாகும். எனவே, இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

தடுப்பூசி விஷயத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும். அதே நேரம், கொரோனாவுக்கு எதிரான போரில் எந்தவித மெத்தனமும் கூடாது. இதுவே எனது வேண்டுகோளாகும்.

இன்று, நான் தமிழகம் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களுடன் பேசும் வாய்ப்பை நான் பெற்றேன்.  காலையில், ஆந்திர முதலமைச்சருடன் தொலைபேசியில் என்னால் பேச இயலவில்லை. இந்தக் கூட்டத்திற்கு பின்னால் அவருடன் பேசுவேன். தீவிரப்புயல் நமது கடற்கரைப் பரப்பில் உருவாகியுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் சில ஆந்திரப் பகுதிகளை  நோக்கி அது நகர்ந்து வருகிறது. மத்திய அரசின் அனைத்து குழுக்களும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் முதல் முன்னுரிமை மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதுதான்.

உங்களது பணிகளுக்கு நான் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்  கொள்கிறேன். அதேசமயம், தகவல்களை உடனுக்குடன் எனக்கு தெரிவிக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி!

பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழி பெயர்ப்பு. மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.



(Release ID: 1675716) Visitor Counter : 144