பிரதமர் அலுவலகம்

கோவிட் - 19 தடுப்பு மருந்து அளித்தல், விநியோகம் மற்றும் நிர்வாகத்தின் ஆயத்தநிலை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார்


தகவல் தொகுப்பு, குளிர்பதன சேமிப்பு வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் தயார்படுத்தப்படுகின்றன

தடுப்பு மருந்தை அளிப்பது மற்றும் கண்காணிப்புக்கு தொடர்புடைய அனைத்துத் துறையினரின் ஆலோசனையுடன் டிஜிட்டல் வசதியுடன் கூடிய திட்டம் தயாரித்து பரிசோதிக்கப்பட்டது

கோவிட்-19 தடுப்பூசி அளிப்பதில் முன்னுரிமை காட்ட வேண்டிய சுகாதார அலுவலர்கள், முன்கள அலுவலர்கள் மற்றும் எளிதில் பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்புள்ள குழுவினரை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது

Posted On: 20 NOV 2020 10:59PM by PIB Chennai

கோவிட் - 19 தடுப்பு மருந்து அளித்தல், விநியோகம் மற்றும் நிர்வாகத்தின் ஆயத்தநிலை குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆய்வு செய்தார். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள  புதுமை சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், மருந்து நிறுவனங்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். தடுப்பூசி குறித்த ஆராய்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும், உற்பத்திக்கும் தேவையான வசதிகளை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

தற்போது இந்தியாவில் 5 தடுப்பு மருந்துகள், முன்னேறிய நிலையில் பல கட்டப் பரிசோதனைகளில் இருக்கின்றன. 4 மருந்துகள் இரண்டாம், மூன்றாம் ஆம் கட்ட நிலைகளிலும், ஒரு மருந்து, முதல், இரண்டாம் நிலையிலும் பரிசோதனையில் உள்ளன. இந்திய தடுப்பு மருந்துகளை உருவாக்குவதிலும், பிறகு அவற்றைப் பயன்படுத்துவதிலும் வங்கதேசம், மியான்மர், கத்தார், பூட்டான், சுவிட்சர்லாந்து, பஹ்ரைன், ஆஸ்திரியா, தென்கொரியா போன்ற நாடுகள் பங்காளர்களாக இணைய ஆர்வம் காட்டியுள்ளன.

மிக விரைவில் தடுப்பூசியை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கும் வகையில், சுகாதார அலுவலர்கள், முன்களப் பணியாளர்களின் தகவல் தொகுப்புகள் தயாரிப்பதும், குளிர்பதன சேமிப்பு வசதிகளையும், சிரிஞ்சுகள், ஊசிகள் போன்றவற்றைக் கொள்முதல் செய்யும் திட்டங்களும் தயார் நிலையில் இருக்கின்றன.

தடுப்பூசி வழங்கல் தொடர்பு மேம்படுத்தப்படுகிறது. தடுப்பூசி அல்லாத பொருட்களின் வழங்கலும் அதிகரிக்கப்படுகிறது. தடுப்பூசி போடும் திட்டத்தை அமல் செய்வதிலும், பயிற்சியிலும், மருத்துவ, நர்சிங் மாணவர்களும், ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள். முன்னுரிமை பட்டியல் வரிசையின்படி, எல்லா இடங்களுக்கும் தடுப்பூசி மருந்துகள் சென்று சேருவதை உறுதி செய்ய, தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்திய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் உலக அளவிலான தரத்தையும், விதிகள் பின்பற்றப்படுவதையும் உறுதி செய்ய, பெயர்பெற்ற அனைத்து தேசிய, சர்வதேச அமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

கோவிட்-19 நோய்க்கு தடுப்பூசி போடும் தேசிய நிபுணர் குழு (NEGVAC), மாநில அரசுகளுடனும், தொடர்புடைய மற்றவர்களுடனும் கலந்தாலோசித்து, முதல்கட்டத்தில் முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை அமல் செய்யும் பணிகளை வேகப்படுத்தியுள்ளது.

தடுப்பூசி போடுதல் மற்றும் விநியோகத்துக்கு டிஜிட்டல் தள வசதி செய்யப்பட்டுள்ளது. மாநில மற்றும் மாவட்ட அளவில் தொடர்புடையவர்களின் பங்களிப்புடன் இதற்கான மாதிரி முயற்சிகளும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

மருந்துகளை உற்பத்தி செய்தல் மற்றும் கொள்முதல் செய்ய அவசர கால பயன்பாட்டு அனுமதிக்கான அம்சங்கள் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். மூன்றாம் கட்டப் பரிசோதனையில் இருக்கும் மருந்துகள் குறித்த தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஆராய்ச்சி முடிவுகள் கிடைத்ததும், வேகமாக செயல்படும், சுதந்திரமாகச் செயல்படும் ஒழுங்குமுறை அமைப்புகள், பயன்பாட்டு அனுமதி வழங்குவதற்காக தீவிர பரிசோதனைகளை விரைவாக நடத்தும்.

கோவிட் சுரக்சா மிஷன் திட்டத்தின் கீழ், கோவிட்-19 தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி, மேம்பாட்டுக்காக அரசு ரூ.900 கோடி உதவி அளித்துள்ளது.

ஒழுங்குமுறை அனுமதிகளை விரைவாக வழங்குதல், தடுப்பூசி போடும் முயற்சியை விரைவில் தொடங்கும் நோக்கில், உரிய காலத்தில் கொள்முதல் செய்வதற்கு, காலக்கெடுவுடன் கூடிய திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

தடுப்பூசி உருவாக்குவதில் விரிவான, ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். பெருந்தொற்று நோய் பாதிப்பு அபாயம் நீடிக்கும் நிலையில், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், தூய்மையை உறுதி செய்தல் போன்ற நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் எந்த வகையிலும் அலட்சியம் காட்டிவிடக் கூடாது என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த ஆலோசனையில் பிரதமரின் முதன்மைச் செயலாளர், அமைச்சரவைச் செயலாளர், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்), முதன்மை அறிவியல் ஆலோசகர், சுகாதாரத் துறை செயலாளர், ஐ.சி.எம்.ஆர். தலைமை இயக்குநர், பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் தொடர்புடைய துறைகளின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

                                                    -------

 



(Release ID: 1674649) Visitor Counter : 165