பிரதமர் அலுவலகம்

ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு எதிர்காலத் தேவைக்கு இரண்டு ஆயுர்வேத மையங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்


பாரம்பரிய மருத்துவ சிகிச்சை மையத்தை உருவாக்க இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததற்கு உலக சுகாதார அமைப்பிற்கு நன்றி

சர்வதேச தரத்திலான ஆயுர்வேத பாடத் திட்டங்களை உருவாக்க வலியுறுத்தல்

ஆயுர்வேதம் ஒரு மாற்று சிகிச்சை மட்டுமல்ல, நாட்டின் சுகாதார கொள்கையின் முக்கிய அஸ்திவாரம்: பிரதமர்

கொரோனா காலத்தில் ஆயுர்வேத பொருட்களின் பயன்பாடு மற்றும் ஆராய்ச்சிகள் அதிகரிப்பு

Posted On: 13 NOV 2020 12:19PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐந்தாவது ஆயுர்வேத தினமான இன்றுஎதிர்காலத் தேவைக்கு இரண்டு ஆயுர்வேத மையங்களை காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தார். இவை ஜாம் நகரில் உள்ள ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (ஐடிஆர்ஏ)ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத மையம் (என்ஐஏ) ஆகியவையாகும். இரண்டும், நாட்டின் முன்னணி ஆயுர்வேத மையங்கள். ஐடிஆர்ஏ-வுக்கு   நாடாளுமன்ற சட்டம் மூலம் தேசிய முக்கியத்துவ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. என்ஐஏ-வுக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வழங்கியுள்ளது. ஆயுஷ் அமைச்சகம், கடந்த 2016ம் ஆண்டிலிருந்து தன்வந்தரி பிறந்த தினத்தில் ஆயுர்வேத தினத்தை கடைபிடித்து வருகிறது.

மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு ஸ்ரீபாத் நாயக், குஜராத் முதலமைச்சர் திரு விஜய் ரூபானி, ராஜஸ்தான் முதலமைச்சர் திரு அசோக்  கெலாட், ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா மற்றும் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ராஸ்   அதனாம் கெப்ரெயஸஸ் காணொலிக் காட்சியில் தமது வாழ்த்துச் செய்தியை வழங்கினார். அப்போது அவர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை உலகெங்கும் கொண்டு செல்லவும் சுகாதார துறையில் பாரம்பரிய சிகிச்சை முறைகளை  ஆதாரப்பூர்வமாக ஊக்குவிப்பதில் உறுதியுடனும் செயல்படும் பிரதமருக்கு தமது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். பாரம்பரிய மருத்துவ சிகிச்சை மையத்தை உருவாக்க இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததற்கு உலக சுகாதார அமைப்பு மற்றும் அதன் தலைவருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். ஆயுர்வேதம் ஒரு இந்திய கலாச்சாரம் என்றும் இது போன்ற நாட்டின் பாரம்பரியம் பிற நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் பிரதமர் கூறினார்.

நூல்கள், வேதங்கள் மற்றும் வீட்டு மருத்துவ முறைகளில் பின்பற்றப்படும் ஆயுர்வேதம் குறித்த விஷயங்களை வெளிக்கொணர்ந்து நவீன தேவைகளுக்கு ஏற்ப இந்த பாரம்பரிய முறையை மேம்படுத்த வேண்டும் என்று திரு மோடி வலியுறுத்தினார். 21 ஆம் நூற்றாண்டில் நவீன அறிவியலுடன் நமது பாரம்பரிய மருத்துவ அறிவையும் இணைத்து புதிய ஆராய்ச்சிகள் தற்போது நாட்டில் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் இங்கு தொடங்கப்பட்டது. ஆயுர்வேதம் ஒரு மாற்று சிகிச்சை மட்டுமல்ல, நாட்டின் சுகாதார கொள்கையில் ஓர் முக்கிய அஸ்திவாரம் என்று பிரதமர் கூறினார்.

சோவா-ரிக்பா குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் இதர ஆய்வுகளை மேற்கொள்வதற்காக லே பகுதியில் தேசிய சோவா-ரிக்பா நிறுவனத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக திரு மோடி தெரிவித்தார். இந்த வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இன்று இரு நிறுவனங்களும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

தரம் உயர்த்தப்பட்ட இரு நிறுவனங்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், இந்த நிறுவனங்களுக்கு இனி கூடுதல் பொறுப்பு இருப்பதாகவும், சர்வதேச தரத்திலான ஆயுர்வேதம் குறித்த பாடத்திட்டங்களை இந்த நிறுவனங்கள் தயார் செய்யும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார். ஆயுர்வேத இயற்பியல் மற்றும் ஆயுர்வேத வேதியியல் போன்ற பிரிவுகளில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு கல்வி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவை அவர் கேட்டுக்கொண்டார். மேலும் இந்தத் துறையில் சர்வதேச போக்கு மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு புது நிறுவனங்களும் (ஸ்டார்ட் அப்) தனியார் துறையும் பங்கேற்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இந்திய மருத்துவ சிகிச்சை முறைக்கான தேசிய ஆணையம் மற்றும் ஹோமியோபதிக்கான தேசிய ஆணையம் ஆகியவை கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உருவாக்கப்பட்டதோடு, ஒருங்கிணைந்த செயல் முறையை ஊக்குவிப்பதற்காக தேசிய கல்விக் கொள்கையும் கொண்டுவரப்பட்டது. ஆயுர்வேத கல்வியில் அலோபதி சிகிச்சை முறை குறித்த அறிவும் கட்டாயம் என்பதே இந்தக் கொள்கையின் அடிப்படை நோக்கம்.

கொரோனா தொற்று பரவல் காலத்தில் உலக அளவில் ஆயுர்வேதப் பொருட்களின் தேவை அபரிமிதமாக உயர்ந்திருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். ஆயுர்வேதப் பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 45 சதவீதம் உயர்ந்து இருந்தது என்று அவர் கூறினார்.  மஞ்சள், இஞ்சி போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து இருப்பது இந்திய வாசனைப் பொருட்கள் மற்றும் ஆயுர்வேத தீர்வுகள் மீது உலக அளவில் நம்பிக்கை ஏற்பட்டு இருப்பதைக் காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார். தற்போது பல்வேறு நாடுகளில் மஞ்சள் சேர்க்கப்பட்ட பானங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், உலகின் தலைசிறந்த மருத்துவ இதழ்கள் ஆயுர்வேதத்தில் புதிய நம்பிக்கையைக் கண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த கொரோனா தொற்று பரவல் காலத்தில் ஆயுர்வேதப் பொருட்களின் பயன்பாட்டில் மட்டுமல்லாமல், நாட்டில் மற்றும் உலக அளவில் ஆய்வு தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

 

கொரோனா நோய் தொற்றுக்கு தடுப்பு மருந்துகளை இந்தியா  சோதித்து வரும் அதேவேளையில், தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஆயுர்வேத ஆராய்ச்சிகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பையும் அதிகரித்து வருவதாக பிரதமர் கூறினார். 80,000 தில்லி காவல் வீரர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்ட அகில இந்திய ஆயுர்வேத மையம் உட்பட 100 இடங்களில் தற்போது ஆராய்ச்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். உலகின் மிகப்பெரும் குழு ஆய்வாக  இருக்கக்கூடிய இந்த ஆராய்ச்சி, பல்வேறு ஊக்கமளிக்கும் முடிவுகளை அளித்து வருகின்றது. வரும் நாட்களில் மேலும் சில சர்வதேச சோதனை முயற்சிகள் நடைபெற இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சத்தான உணவுகள், ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மூலிகைகளுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். கங்கை கரை மற்றும் ஹிமாலயன் பகுதிகளில் தானியங்கள் மற்றும் ஆர்கானிக் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் ஊக்கப்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். உலகளவில் சுகாதாரத்தில் இந்தியா கூடுதல் பங்கு வகிக்கும் வகையில் விரிவான திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் செயல்படுத்தி வருவதாகவும், நமது ஏற்றுமதியும் அதிகரிப்பதுடன் விவசாயிகளின் வருமானமும் உயர வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.  கொவிட் பெருந் தொற்றுக்குப் பிறகு அஸ்வகந்தா, கிலாய், துளசி போன்ற ஆயுர்வேத மூலிகைகளின் விலைகள் பெருமளவு அதிகரித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டை விட அஸ்வகந்தாவின் விலை இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது, மேலும் இதன் நேரடி பலன்களை இந்த மூலிகை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள நமது விவசாயிகள் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 

வேளாண் அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இதர துறைகள் ஆகியவை இணைந்து இந்தியாவில் விளையக்கூடிய பல்வேறு மூலிகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். ஆயுர்வேதம் தொடர்பான சுற்றுச்சூழலின் வளர்ச்சியின் மூலம் சுற்றுலா தொடர்பான சுகாதாரம் மற்றும் நாட்டின் நலன் ஊக்குவிக்கப்படும் என்று அவர் கூறினார். இந்த முயற்சியில் ஜாம்நகர் மற்றும் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கப்பட்டுள்ள இரு நிறுவனங்கள் ஈடுபடும் என்ற தமது நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.

ஐடிஆர்ஏ, ஜாம்நகர் : இது  நாடாளுமன்ற சட்டம் மூலம் சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த மையம் உலகத்தரம் வாய்ந்த சுகாதார நிறுவனமாக உருவாகவுள்ளது. ஐடிஆர்ஏ மையத்தில் 12 துறைகள், 3 பரிசோதனைக் கூடங்கள் மற்றும் 3 ஆராய்ச்சிக் கூடங்கள்  உள்ளன. பாரம்பரிய மருந்து ஆராய்ச்சியில் இது முன்னணி நிறுவனம். இங்கு தற்போது 33 ஆராய்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜாம்நகரில் உள்ள குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த நான்கு ஆயுர்வேத மையங்களின் தொகுப்பை இணைத்து ஐடிஆர்ஏ உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆயர்வேத துறையில் தேசிய முக்கியத்துவ அந்தஸ்து பெற்ற முதல் மையம் ஆகும்.  இந்த தரம் உயர்த்தலின் மூலம், ஆயுர்வேத கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் ஐடிஆர்ஏவுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைக்கும். நவீன சர்வதேச தரத்துக்கு ஏற்ற வகையில் இது ஆயுர்வேதக் கல்வியை அளிக்கும். மேலும், இது, ஆயுர்வேதத்துக்கு சமகால உந்துதலை அளிக்க, ஆயுர்வேத மையங்களுக்கு இடையே ஒழுங்குமுறை ஒத்துழைப்பை உருவாக்கும்.

 

என்ஐஏ, ஜெய்ப்பூர்: நாட்டின் புகழ்பெற்ற ஆயுர்வேத மையமான என்ஐஏவுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.  175 ஆண்டு பாரம்பரியத்தின் வாரிசாக, கடந்த சில தசாப்தங்களாக ஆயுர்வேதத்தைப் பாதுகாக்கவும், முன்னேற்றவும், என்ஐஏ-வின் பங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது, என்ஐஏ மையத்தில் 14 துறைகள் உள்ளன. இந்த மையத்தில் ஆசிரியர்-மாணவர் விகிதம் நன்றாக உள்ளது. 2019-20ம் ஆண்டில் 955 மாணவர்களும்,75 பேராசிரியர்களும் உள்ளனர். ஆயுர்வேதாவில் சான்றிதழ் படிப்பு முதல் டாக்டர் பட்டப்படிப்பு வரை இந்த மையம் கற்பிக்கிறது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வுக் கூடங்கள் இங்கு உள்ளன. ஆராய்ச்சி நடவடிக்கையில் என்ஐஏ முன்னணி நிறுவனமாக உள்ளது.  தற்போது, இது 54 ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து அளிக்கப்பட்டதன் மூலம், இந்த தேசிய மையம், சுகாதாரம், கல்வி, ஆராய்ச்சியில் புதிய உச்சத்தைத் தொடவுள்ளது.

**********************

 

 



(Release ID: 1672639) Visitor Counter : 338