பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஓய்வூதியதாரர்கள் தன்னிறைவு அடைய அரசு துணை நிற்கும்: மத்திய அமைச்சர்

Posted On: 10 NOV 2020 5:28PM by PIB Chennai

ஓய்வூதியதாரர்கள் தன்னிறைவான வாழ்க்கையை வாழ்வதற்காக  டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் செயல்படும் ஓய்வூதியங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மேற்கொண்டு வருவதாக மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள் துறைகளுக்கான இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

கொவிட்-19 பெருந்தொற்றின் போது எண்ணங்கள் மற்றும் தியானத்தின் சக்தி குறித்து பிரம்ம குமாரி அமைப்பின் சகோதரி திருமிகு சிவானியுடன் ஓய்வூதியங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் பேசிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கொவிட்-19 பெருந்தொற்றினால் ஓய்வூதியதாரர்கள் போன்ற மூத்த குடிமக்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வரும் இந்த வேளையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து ஆறுதல் அளிப்பதுடன் உடல் உபாதைகளில் இருந்தும் அவர்களைப் பாதுகாக்கின்றது என்று தெரிவித்தார்.

மூத்த குடிமக்களின்  அனுபவங்களால் சமூகத்தில் பெரும் மாற்றம் ஏற்படக்கூடும் என்று கூறிய அவர், நம்மிடையே இருப்பதை வைத்துக்கொண்டு நாம் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றும் இதுகுறித்து பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும்தெரிவித்தார். தற்போதைய பெருந்தொற்றுக் காலத்தில் வாழ்க்கை முறை மாற்றம் அவசியம் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மனநலம் குறித்து மூத்த ஓய்வூதியதாரர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் :https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671733

-------



(Release ID: 1671767) Visitor Counter : 190