சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

2021 ஹஜ் பயணத்துக்கான புதிய வழிமுறைகள்; திரு.முக்தர் அப்பாஸ் நக்வி அறிவிப்பு

Posted On: 07 NOV 2020 3:57PM by PIB Chennai

2021-ம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்துக்கு விண்ணப்பம் செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பயணத்தில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மும்பையில் உள்ள ஹஜ் இல்லத்தில் திரு நக்வி வெளியிட்ட அறிவிப்பில், 2021-ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்தின்போது, கொரோனா பெருந்தொற்றுக்கான தேச-சர்வதேச வழிகாட்டும் நடைமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று கூறினார். 2021-ஆம் ஆண்டு ஹஜ் பயணத்துக்கு ஆன்லைன் வழியாகவும், தபால் வாயிலாகவும், ஹஜ் கைபேசி செயலி வழியாகவும் இன்று முதல் வரும் டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டார்.

2021-ஆம் ஆண்டு ஹஜ் பயணம், அடுத்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களில் நடைபெறும் என்று கூறிய அவர், கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டு  இருநாட்டு மக்களின் உடல் நலனை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசும், சவூதி அரேபிய அரசும் ஒட்டுமொத்த ஹஜ் பயண நடைமுறைகளிலும் போதுமான மற்றும் தேவையான வழிகாட்டும் முறைகளை வெளியிடும் என்று தெரிவித்தார். மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகம், வெளியுறவுத்துறைவிமானப் போக்குவரத்து அமைச்சகம், ஹஜ் கமிட்டி, சவூதியில் உள்ள இந்திய தூதரகம், ஜெட்டாவில் உள்ள  இந்திய தூதரகம் மற்றும் இதர முகமைகளுடன் பெருந்தொற்று சவால்களின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

சவூதி அரேபிய அரசால் விதிக்கப்படும்  நடைமுறைகளுக்கு ஏற்ப ஹஜ் 2021 புனிதப் பயணதுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். சர்வதேச விமானப்பயண நெறிமுறைகளின்படி  ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு பயணம் செய்பவர்கள் கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்படுவார்கள் என்று கூறிய அவர், ஒவ்வொரு ஹஜ் பயணியும், அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் இருந்து பிசிஆர் சோதனை சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.

2021-ஆம் ஆண்டு ஹஜ் பயணத்துக்கான விமானங்கள் புறப்படுவதற்கான இடங்கள் 21-இல் இருந்து 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கொரோனா தொற்று காரணமாக ஏர் இந்தியா மற்றும் இதர முகமைகளிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அடுத்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கான விமானங்கள் அகமதாபாத், பெங்களூரு, கொச்சின், தில்லி, கவுகாத்தி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் ஸ்ரீநகர் ஆகிய விமான நிலையங்களில் இருந்து புறப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் பெங்களூருவில் இருந்து செல்லும் விமானங்களில் பயணிக்க வேண்டும் என்றும் திரு நக்வி குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670956

**********************


(Release ID: 1671023) Visitor Counter : 263