பிரதமர் அலுவலகம்

பிரதமர் தலைமையில் மெய்நிகர் உலக முதலீட்டாளர் வட்டமேஜை

முதலீட்டாளர்களுக்கு ஜனநாயகம், மக்கள் தொகை, தேவை, பன்முகத்தன்மை ஆகியவற்றை இந்தியா வழங்குகிறது : பிரதமர்
பெரு நகரங்களில் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களிலும் முதலீடு செய்யுமாறு அழைப்பு
நம்பகத்தன்மையுடன் கூடிய வருமானம், ஜனநாயகத்துடன் கூடிய தேவை, நீடித்த நிலைத் தன்மை, பசுமை அணுகுமுறையுடன் கூடிய வளர்ச்சி ஆகியவற்றை இந்தியா உறுதி செய்கிறது : பிரதமர்
உலக வளர்ச்சி மீட்டுருவாக்க முன்னோடியாக இந்தியாவை உருவாக்க, அரசு எதையும் செய்யும் : பிரதமர்
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 5 மாதங்களில் எப்டிஐ வரத்து 13% உயர்வு : பிரதமர்
தற்சார்பு இந்தியா வெறும் இலக்கு அல்ல, அது நன்கு திட்டமிடப்பட்ட பொருளாதார உத்தி : பிரதமர்

Posted On: 05 NOV 2020 8:50PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மெய்நிகர் உலக வட்டமேஜை மாநாட்டுக்கு தலைமை வகித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இந்த ஆண்டு முழுவதும், உலக பெருந்தொற்றை எதிர்த்து இந்தியா துணிச்சலுடன் போராடியதால், இந்தியாவின் தேசியப் பண்பையும், அதன் உண்மையான வலிமையையும் உலகம் கண்டுள்ளது என்றார்.  இந்தியர்களிடம் இயல்பாக உள்ள பொறுப்புணர்வு, கருணையுடனான எழுச்சி, தேசிய ஒற்றுமை, புதுமையான பொறி போன்ற குணநலன்களை தொற்று வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளது என அவர் கூறினார்.

இந்தப் பெருந்தொற்று காலத்தில், அதனை எதிர்த்துப் போராடிய அதே வேளையில் பொருளாதார நிலைத்தன்மையையும் உறுதி செய்து இந்தியா தனது மகத்தான விரிதிறனைக் காட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிலைக்கு இந்தியாவில் உள்ள நடைமுறையின் வலிமை, மக்களின் ஒத்துழைப்பு, அரசின் கொள்கைகளில் உள்ள நிலைத்தன்மை ஆகியவை காரணம் என அவர் கூறினார்.

பழைய நடைமுறைகள் இல்லாத புதிய இந்தியா கட்டமைக்கப்பட்டு வருவதாகக் கூறிய பிரதமர், இன்று இந்தியா சிறப்பான இடத்துக்காக மாறி வருகிறது என்றார். இந்தியா தற்சார்பு நிலையை எட்ட வேண்டும் என்ற தாகம் வெறும் இலக்கு மட்டுமல்ல என்று கூறிய அவர், அது நன்கு திட்டமிடப்பட்ட பொருளாதார உத்தி என்று தெரிவித்தார். இந்தியாவின் தொழில்களில் உள்ள திறமைகள் மற்றும் தொழிலாளர்களின் திறமைகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அந்த உத்தி, இந்தியாவை உலக உற்பத்தி ஆற்றல் மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது என்று அவர் கூறினார். நாட்டின் தொழில்நுட்ப வலிமையைப் பயன்படுத்தி புதுமையான கண்டுபிடிப்புக்களுக்கான உலக மையமாக மாற்றுவதை அது நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் திரு. மோடி கூறினார். மகத்தான மனித ஆற்றல் மற்றும் அவர்களது திறன்களைப் பயன்படுத்தி உலக வளர்ச்சிக்கு பங்களிப்பதும் அந்த நோக்கத்தில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று முதலீட்டாளர்கள் உயரிய சூழல், சமூக, நிர்வாகத் திறன் கொண்ட நிறுவனங்களை நோக்கி நகர்ந்து வருவதாக பிரதமர் கூறினார். இந்த இஎஸ்ஜி தரம் கொண்ட நடைமுறைகள் மற்றும் சிறந்த நிறுவனங்களை இந்தியா கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சமமான இஎஸ்ஜி தரத்துடன் கூடிய வளர்ச்சிப“ பாதையை பின்பற்றுவதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

முதலீட்டாளர்களுக்கு ஜனநாயகம், மக்கள் தொகை, தேவை ஆகியவற்றுடன் பன்முகத்தன்மையையும் இந்தியா வழங்குகிறது என பிரதமர் கூறினார். ‘’ இத்தகைய பன்முகத் தன்மையால்தான், ஒரு சந்தைக்குள் பல சந்தைகளை நீங்கள் பெற முடிகிறது. பல அளவுகள், பல முன்னுரிமைகள் ஆகியவற்றுடன் அவை உள்ளன. பல தட்ப, வெப்பங்கள், வளர்ச்சியின் பல அளவுகளுடன் அவை வந்துள்ளன’’, என்று அவர் கூறினார்.

பிரச்சினைகளுக்கு நீண்ட கால, நீடித்த தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் அணுகுமுறை, முதலீட்டாளர்களின் நம்பிக்கை உணர்வுக்கு ஏற்ற தேவையான  நிதி வழங்கல் , பாதுகாப்பான, சிறந்த நீண்டகால வருமானம் பெறுதல் ஆகியவற்றை அரசு எவ்வாறு கடைப்பிடிக்கிறது என பிரதமர் விளக்கினார். உற்பத்தி ஆற்றல் மற்றும் எளிதாக தொழில் நடத்துதல் ஆகியவற்றை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு, அரசு மேற்கொண்டுள்ள  பல்வேறு முன்முயற்சிகளை அவர் பட்டியலிட்டார்.

‘’நமது உற்பத்தி ஆற்றலை மேம்படுத்த பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி வரி வடிவத்தில் நாம் ஒரு நாடு ஒரே வரி என்ற முறையைப் பின்பற்றி வருகிறோம். மிகக் குறைந்த கார்பரேட் வரி விகிதங்கள், புதிய உற்பத்திக்கு கூடுதல் ஊக்கம், சிறந்த வருமான வரி மதிப்பீடு மற்றும் மேல்முறையீடு, தொழிலாளர்கள் நலன்களை உள்ளடக்கிய சமன்பாடான புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழில் நடத்துபவர்களுக்கான எளிதான வழிமுறைகள் ஆகியவையும் கடைப்பிடிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில துறைகளில், உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்பு, முதலீட்டாளர்களுடன் கை கோர்க்கும் வகையிலான அதிகாரமளிக்கப்பட்ட நிறுவன ஏற்பாடுகளும் பின்பற்றப்படுகின்றன’’, என்று அவர் கூறினார்.

தேசிய கட்டமைப்பு பைப்லைன் திட்டத்தின் கீழ், 1.5 டிரில்லியன் டாலர் முதலீடு செய்யும் லட்சியத் திட்டத்தை இந்தியா கொண்டுள்ளதாக பிரதமர் கூறினார். இத்திட்டத்தின் கீழ், இந்தியாவில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு சமூக, பொருளாதார உள்கட்டமைப்பு திட்டங்களை அவர் பட்டியலிட்டார். நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு ஆகியவை இவற்றின் நோக்கம் என்றார் அவர். நாடு முழுவதும் தடங்கல் இல்லாத நெடுஞ்சாலைகள், ரயில்வே, மெட்ரோ ரயில் திட்டங்கள், நீர் வழிகள், விமான நிலையங்கள் ஆகியவற்றைக் கொண்ட பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு உருவாக்கத்தை இந்தியா மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். புதிய நடுத்தர பிரிவினருக்கு கட்டுபடியான விலையில் லட்சக்கணக்கான வீடுகள் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பெரு நகரங்களில் மட்டும் முதலீடு செய்ய முன்வராமல், சிறு நகரங்களிலும் முதலீடு செய்யுமாறு முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.  இத்தகைய நகரங்களை உருவாக்க, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நிதித்துறையின் வளர்ச்சிக்கான முழுமையான உத்திகளை பிரதமர் விளக்கினார். ஒருங்கிணைந்த வங்கித் துறை சீர்திருத்தங்கள், நிதிச்சந்தைகளை வலுப்படுத்துதல், சர்வதேச நிதி சேவை மையத்துக்கான ஒருங்கிணைந்த ஆணையம், தாராளமான எப்டிஐ நடைமுறைகள், வெளிநாட்டு மூலதனத்துக்கு தீங்கற்ற வரி நடைமுறை, உள்கட்டமைப்பு முதலீட்டு டிரஸ்ட், நில வணிக முதலீட்டு டிரஸ்ட் போன்ற முதலீட்டுக்குப் பொருத்தமான கொள்கை முறைகள், திவால் நடைமுறை சட்ட அமலாக்கம், நேரடி பணப்பரிவர்த்தனை மூலம் நிதி அதிகாரமாக்கல், ரூபே அட்டைகள், பீம் செயலி போன்ற நிதி-தொழில்நுட்ப பரிவர்த்தனை முறைகள் என நிதித்துறை வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட முக்கிய முன்முயற்சிகளை அவர் பட்டியலிட்டார்.

புதுமை மற்றும் டிஜிடல் நடைமுறைகள், அரசின் கொள்கைகள், சீர்திருத்தங்களில் மையப்புள்ளியாக எப்போதும் உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். உலகில் தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும், அந்த எண்ணிக்கை இன்னும் வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அரசு மேற்கொண்டுள்ள முன்முயற்சிகளை அவர் பட்டியலிட்டார். இந்தியாவில், உற்பத்தி, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், வேளாண்மை, நிதி ஆகிய துறைகள், சுகாதாரம், கல்வி போன்ற சமூகத் துறைகள் என ஒவ்வொரு துறையும் இன்று கவனிக்கப்படுவதாக அவர் கூறினார். 

வேளாண்மை துறையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள், இந்திய விவசாயிகளுடன் கூட்டுறவு கொள்ள புதிய வாய்ப்புகளைத் திறந்து விட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். தொழில் நுட்பம் மற்றும் நவீன தீர்வுகளுடன், இந்தியா விரைவில் வேளாண் ஏற்றுமதி மையமாக உருவெடுக்கும் என அவர்  நம்பிக்கை தெரிவித்தார். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கான வளாகங்களை இங்கு அமைப்பதற்கு , தேசிய கல்வி கொள்கை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். உலக முதலீட்டாளர் சமுதாயத்தினர் இந்தியாவின் எதிர்காலத்தில் காட்டியுள்ள நம்பிக்கை மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த 5 மாதங்களில், எப்டிஐ வரத்து, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13% உயர்ந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

நம்பகத்தன்மையுடன் கூடிய வருமானம், ஜனநாயகத்துடன் கூடிய தேவை, நீடித்த நிலைத் தன்மை, பசுமை அணுகுமுறையுடன் கூடிய வளர்ச்சி ஆகியவற்றைப் பெறுவதற்கு ஒருவர் விரும்பினால், அதற்கு ஏற்ற இடம்  இந்தியாதான் என  பிரதமர் உறுதியுடன் தெரிவித்தார். உலகப் பொருளாதார மீட்டுருவாக்கத்துக்கு உந்துசக்தியாக இருக்கும் ஆற்றல் இந்தியாவின் வளர்ச்சிக்கு உள்ளது என அவர் கூறினார். இந்தியா படைக்கின்ற எந்த சாதனைக்கும், உலக மேம்பாடு மற்றும் நலனில் பல தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய வல்லமை உள்ளது என அவர் குறிப்பிட்டார். வலிமையான, துடிப்பான இந்தியாவால் உலகப் பொருளாதார ஒழுங்கு நிலை பெறுவதற்கு பங்களிக்க முடியும் என்று அவர் கூறினார். உலக வளர்ச்சி மீட்டுருவாக்க முன்னோடியாக இந்தியாவை உருவாக்க அரசு தேவையான எதையும் செய்யும் என்று அவர் உறுதியளித்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர், சிபிபி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவர் திரு. மார்க் மச்சின், இந்த வட்டமேஜை, இந்தியப் பொருளாதாரத்தை கட்டமைக்கும் அரசின் தொலைநோக்கில் பொதிந்துள்ள விவரங்களை தெரிந்து கொள்ளவும், இந்தியாவில் சர்வதேச நிறுவன முதலீட்டு வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும் வகையில், மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது எனக் கருத்து தெரிவித்தார். தமது தொலைநோக்கிலான முதலீட்டு உத்தி, வளர்ச்சி சந்தைகளின் மீதான கவனம் ஆகியவற்றுக்கு இந்தியா முக்கிய திறவுகோலாக உள்ளது என அவர் கூறினார். உள்கட்டமைப்பு, தொழில் மற்றும் நுகர்வோர் துறைகளில் ஏற்கனவே உள்ள தமது முதலீடுகளுக்கு வலுவான ஊக்குவிப்பை தாம் பெற்றுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

சிடிபிக்யூ தலைவர் மற்றும் சிஇஓ திரு சார்லஸ் எமோண்ட், இந்தியா பற்றி குறிப்பிடுகையில், ‘’ சிடிபிக்யூவுக்கு இந்தியா ஒரு முக்கிய சந்தையாகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சரக்குப் போக்குவரத்து, நிதி சேவைகள், தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் போன்ற பல்வேறு துறைகளில் நாங்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளோம். வரும் ஆண்டுகளில் எங்களது இருப்பை வலுப்படுத்துவதே எங்கள் நோக்கமாகும். இந்தியாவின் வலுவான பொருளாதாரத்துக்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்புகள் குறித்து, உலக முதலீட்டாளர்கள், முன்னோடி தொழில் அதிபர்கள் விவாதிக்கும் இடமாக இந்த வட்டமேஜையை ஏற்பாடு செய்ததுடன், அதற்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடிக்கும், அவரது அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்’’, என்று கூறினார்.

அமெரிக்காவின், டீச்சர் ரிட்டையர்மென்ட் சிஸ்டம் ஆப் டெக்சாஸ் நிறுவன தலைமை முதலீட்டு அதிகாரி திரு ஜேஸ் ஆபி, இந்தியா குறித்தும், இந்த நிகழ்ச்சியில் தாம் கலந்து கொண்டது பற்றியும்  தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். ‘’ இந்த 2020 மெய்நிகர் உலக வட்டமேஜையில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஓய்வூதிய நிதி முதலீட்டாளர்கள், தங்களது வருவாயில் பெரும்பகுதியை முதலீடு செய்கின்றனர்.  அதிகப் பயன் அளிக்கும்,  வளரும் பொருளாதார நாடுகள் மற்றும் சந்தைகளையே அவர்கள் விரும்புகின்றனர். இந்தியா முன்னெடுத்துள்ள அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்கள், வருங்காலத்தில் இத்தகைய பெரும் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை வழங்கக்கூடும்’’, என்று அவர் கூறினார்.

***

 

 (Release ID: 1670564) Visitor Counter : 215