பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய ராணுவத்தின் சீர்திருத்தங்கள் மற்றும் திறன் மேம்பாட்டில் அரசு உறுதி பூண்டுள்ளது- பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

Posted On: 28 OCT 2020 7:47PM by PIB Chennai

கடந்த 26ஆம் தேதி புதுதில்லியில் தொடங்கிய ஆண்டுக்கு இருமுறை நடக்கும் மிக உயரிய ராணுவ தளபதிகளின் மாநாடு நாளை வரை நடைபெறும். மாநாட்டின் மூன்றாம் நாளான இன்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், லட்சக்கணக்கான குடிமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி ஊக்குவிக்கும் அமைப்பாக  இந்திய ராணுவம் திகழ்வதாக அவர் உறுதி அளித்தார். நாட்டின் எல்லையில் பாதுகாப்பில் ஈடுபடவும் தீவிரவாதத்திற்கு எதிராக போராடவும் பாடுபட்டு வரும் ராணுவம் அதேவேளையில் நிர்வாகத்திற்கு தேவைப்படும் போது முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் குறிப்பிட்டார். கொவிட்-19 பரவல் காலக்கட்டத்தில் இந்திய ராணுவ வீரர்களின் சிறப்பான பங்களிப்பை அமைச்சர் பாராட்டினார். "இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் நிலைநாட்டுவதாக அமைந்திருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

நாட்டுக்காக போராடி உயிர் நீத்த கல்வான், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு வீரர்களுக்கு அமைச்சர் அஞ்சலி செலுத்தினார். நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில் நுட்பங்களை தயாரித்து வரும் ராணுவத்தினரை ராஜ்நாத் சிங் பாராட்டினார். இந்திய ராணுவத்தினரிடையே பரிமாறப்படும் தகவல்களை பாதுகாக்கும் உள்நாட்டு இணைய பாதுகாப்பு தொழில்நுட்பத்தையும் அவர் பாராட்டினார்.

நாட்டின் வடக்குஎல்லையில் தற்போதைய நிலவரம் குறித்து பேசிய அவர் ஒரு புறம் நமது படைகள் ஸ்திரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை தொடரும் என்று தெரிவித்தார். "நமது வீரர்களுக்கு சிறந்த ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் கடும் குளிரிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளத் தேவையான ஆடைகளை அவர்களுக்கு வழங்குவது நம் நாட்டின் கடமை" என்றார் அவர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிலவிவரும் தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டுவர மத்திய ஆயுதக் காவல்படை மற்றும் காவலர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டிய அவர், இவர்களின் கூட்டு முயற்சியினால் ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி நிலையான மற்றும் அமைதியான சூழல் நிலவுவதாகத் தெரிவித்தார்.

தற்சார்பு இந்தியா குறித்த அறிவிப்பும் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கும் பட்டியலும் பாதுகாப்பு துறையில் இந்தியாவை தற்சார்பு அடைய முன்னெடுத்துச் செல்லும் முயற்சி ஆகும் என்றும், இதன் மூலம் ராணுவப் படையின் எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்ய இந்திய பாதுகாப்புத் துறைக்கு பெரும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். ராணுவத்தில் திறன் மேம்பாடு மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீட்டில் எந்த தடையும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

 

ராணுவத்தின் சீர்திருத்தங்கள் மற்றும் திறன் மேம்பாட்டில் அரசு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்கும் என்று திரு ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668215

**********************



(Release ID: 1668277) Visitor Counter : 169