ஜல்சக்தி அமைச்சகம்
இந்திய-மியான்மர் எல்லையில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், குடிநீர் விநியோக திட்டங்கள் தொடக்கம்
Posted On:
25 OCT 2020 2:58PM by PIB Chennai
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மணிப்பூரில் முதலமைச்சர் என்.பிரேன் சிங் இரண்டு குடிநீர் விநியோகத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
இந்திய-மியான்மர் எல்லையில் உள்ள தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு தொலைதூர கிராமங்கள், இப்போது ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் முறையான குடிநீர் விநியோகத்தைப் பெறுகின்றன. சாண்டல் மாவட்டத்தில் உள்ள காங்பரோல் கிராமம் இந்திய-மியான்மர் எல்லையில் இருந்து 30 கி.மீ தொலைவில் இருக்கிறது. இங்கு 82 குடும்பத்தினர் மட்டும் வசிக்கின்றனர். எனினும், ஆயிரம் பேர் கொண்ட மக்கள் தொகைக்கு ஏற்றபடி 2041-ம் ஆண்டு வரை பலன் அளிக்கும் வகையில் குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 60 லட்சம் ரூபாய் செலவில், ஈர்ப்பு ஓட்டம் அடிப்படையிலான குடிநீர் விநியோகத்தில், 82 குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் இப்போதைய மக்கள் தொகையான 450 பேர் பயன்பெறுவர். குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள காங்பரோலோக் என்ற வற்றாத நீர் ஆதாரப் பகுதியில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. நீர் ஆதாரம் குடிநீர் சுத்திகரிப்பு பகுதியை விட உயரமாக இருப்பதால், ஈர்ப்பு ஓட்டம் அடிப்படையில் குடிநீர் வழங்க தீர்மானிக்கப்பட்டது. சாண்டல் மாவட்டத்தில் உள்ள இன்னொரு கிராமமான, கெங்ஜோய் கிராமத்துக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த கிராமம் இந்திய-மியான்மர் எல்லையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு உள்ள 73 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667475
-----
(Release ID: 1667500)
Visitor Counter : 208