பிரதமர் அலுவலகம்
குஜராத்தில் மூன்று முக்கிய திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
குஜராத் விவசாயிகளுக்காக கிசான் சூர்யோதய திட்டத்தை தொடங்கினார்
யு.என். மேத்தா இருதயவியல் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் குழந்தைகளுக்கான இதய மருத்துவமனையைத் தொடங்கி வைத்தார்
கிர்னாரில் ரோப்வே-யைத் தொடங்கி வைத்தார்
Posted On:
24 OCT 2020 2:01PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி குஜராத்தில் இன்று மூன்று முக்கிய திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
விவசாயிகளுக்கு 16 மணி நேரம் மின் விநியோகம் வழங்கும் கிசான் சூர்யோதய திட்டத்தை திரு. மோடி தொடங்கி வைத்தார். யு.என். மேத்தா இருதயவியல் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் குழந்தைகளுக்கான இதய மருத்துவமனையைத் தொடங்கி வைத்த அவர், அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் தொலை இருதயவியலுக்கான கைபேசி செயலியையும் ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கிர்னார் ரோப்வே-யையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சாதாரண மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டுக்கு குஜராத் எப்போதும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று கூறினார். சுஜாலம்-சுப்லாம் மற்றும் சவுனி, கிசான் சூர்யோதய திட்டத்துக்கு பின்னர், விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மைல் கல்லை குஜராத் எட்டியுள்ளது என்று அவர் கூறினார். மின்சாரத் துறையில் பல ஆண்டுகளாக செய்யப்பட்டுள்ள பணிகள், இத்திட்டத்துக்கு அடிப்படையானவை என்று அவர் தெரிவித்தார். மாநிலத்தின் திறனை அதிகரிக்க, மின் உற்பத்தி முதல் விநியோகம் வரை அனைத்து பணிகளும் திட்டமிட்டவாறு மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். பதானில் 2010-ம் ஆண்டு சூரிய மின்சக்தி நிலையம் தொடங்கப்பட்ட போது, இந்தியா ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரே தொகுப்பு என்னும் வழியை உலகத்துக்கே காட்டும் என யாரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்கமாட்டார்கள் என்று அவர் கூறினார். இந்தியா சூரிய மின்சக்தியில் கடந்த சில ஆண்டுகளில் உலகிலேயே 5-வது இடத்தைப் பிடித்து வேகமாக முன்னேறி வருவதாக பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
கிசான் சூர்யோதய திட்டம் குறித்து கூறிய பிரதமர், முன்பெல்லாம் பெரும்பாலான விவசாயிகள் பாசனத்துக்கு இரவில் மட்டும் மின்சாரத்தை பெற்று வந்தனர் என்று கூறினார். இதற்காக அவர்கள் இரவு முழுவதும் கண் விழிக்க நேர்ந்தது. கிர்னார் மற்றும் ஜுனாகாத் பகுதிகளில் வன விலங்குகளின் அச்சுறுத்தலையும் விவசாயிகள் எதிர்நோக்கினர். கிசான் சூர்யோதய திட்டத்தின் கீழ், விவசாயிகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மும்முனை மின்சாரத்தை பெறுவார்கள். இது அவர்களுக்கு புதிய விடியலைக் கொண்டு வரும்.
ஏற்கனவே உள்ள மின்சாரம் கொண்டு செல்லும் முறைகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல், முற்றிலும் புதிய திறனை இதில் உருவாக்குவதற்காக பணிகளை செய்துவரும் குஜராத் அரசின் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ், அடுத்த 2, 3 ஆண்டுகளில், சுமார் 3500 சுற்று கிலோமிட்டருக்கு மின்சாரம் கொண்டு செல்லும் புதிய லைன்கள் அமைக்கப்படும். ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் இது செயல்படுத்தப்படும். இதில், பெரும்பாலான கிராமங்கள் பழங்குடியினர் அதிகமாக வசிப்பவையாகும். குஜராத் முழுவதும் இத்திட்டத்தின் மூலம் மின்விநியோகம் கிடைக்கும் போது, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வில், மாற்றத்தை இது ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
கால மாற்றத்துக்கு ஏற்ற விதத்தில் தொடர்ந்து பணியாற்றி விவசாயிகளின் முதலீட்டைக் குறைத்து, அவர்களது சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, தங்கள் வருமானத்தை இருமடங்காக்க உதவ வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். ஆயிரக்கணக்கான விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளை (எப்பிஓ) அமைத்தல், வேம்பு தடவப்பட்ட யூரியா, மண் வள அட்டைகள், பல புதிய முன்முயற்சிகளை துவக்குதல் போன்ற விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்க அரசு எடுத்த முயற்சிகளை அவர் பட்டியலிட்டார். கேயுஎஸ்யுஎம் திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களில் சிறிய சூரிய சக்தி நிலையங்களை அமைப்பதில், எப்பிஓ-க்கள், பஞ்சாயத்துக்கள், இதுபோன்ற அனைத்து அமைப்புகளுக்கும் உதவி அளிக்கப்படுவதாகவும், பாசன பம்புகள் சூரிய சக்தி மூலம் இணைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் விவசாயிகளின் பாசன பயன்பாட்டுக்கு அளிக்கப்படும். உபரி மின்சாரத்தை அவர்கள் விற்பனை செய்யவும் முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மின்சாரத் துறையுடன், பாசனத்துறை மற்றும் குடிநீர் திட்டங்களிலும் குஜராத் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். தண்ணீருக்காக மக்கள் பெரும் சிரமங்களை முன்பு அனுபவித்து வந்தனர். முன்பு கற்பனை கூட செய்து பார்த்திருக்க முடியாத மாவட்டங்களை இன்று குடிநீர் சென்றடைந்துள்ளது என அவர் கூறினார். குஜராத்தின் வறண்ட பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைந்துள்ளதற்கு சர்தார் சரோவர் திட்டம், தண்ணீர் தொகுப்புகள் போன்ற திட்டங்களை நிறைவேற்றியதற்காக பெருமிதம் கொள்வதாக அவர் தெரிவித்தார். குஜராத்தில் 80 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிய மாநிலம் என்ற பெருமையை குஜராத் விரைவில் பெறும் என்றார் அவர். கிசான் சூர்யோதய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், ஒரு துளியில் பல பயிர்கள் என்ற தாரகமந்திரத்தை அமல்படுத்த விவசாயிகள் முனைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பகல் வேளையில் மின்சாரம் வழங்கப்படுவதால், விவசாயிகள் நுண் பாசனத்தை மேற்கொள்ள இது உதவும் என்பதுடன், கிசான் சூர்யோதய திட்டம் மாநிலத்தில் நுண் பாசனத்தை விரிவாக்கவும் உதவும்.
யு.என்.மேத்தா இருதவியல் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படுவது பற்றி குறிப்பிட்ட அவர், உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள், நவீன சுகாதார வசதிகள் கொண்ட சில மருத்துவமனைகளில் ஒன்றாக இது உள்ளது என அவர் கூறினார். இந்தியாவின் மிகப்பெரிய இதய மருத்துவமனையாக இது இருக்கும் என அவர் கூறினார். நவீன மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் ஆகிய கடமைப்புகளை உருவாக்கி, ஒவ்வொரு கிராமத்தையும் சிறந்த சுகாதார வசதிகளால் இணைப்பதில் குஜராத் மெச்சத்தக்க பணிகளை அமல்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். குஜராத்தில் 21 லட்சம் பேர், ஆய்ஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், இலவச சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார். குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் 525 மக்கள் மருந்து மையங்கள் குஜராத்தில் திறக்கப்பட்டுள்ளன. இதில், சாதாரண குஜராத் மக்களைப் பாதுகாக்க சுமார் 100 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கிர்னார் மலை மா ஆம்பேயின் தங்குமிடமாக உள்ளது என்று பிரதமர் கூறினார். இதில் கோரக்நாத் சிகரம், குரு தத்தாத்ரேயா சிகரம் மற்றும் ஜெயின் கோவில் ஆகியவை உள்ளன. உலகத் தரம் வாய்ந்த ரோப்வே (கயிற்றுப்பாதை) துவக்கப்பட்டுள்ளதால், அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் இங்கு வருவார்கள் என அவர் கூறினார். பனஸ்கந்தா, பவகாத், சத்புரா ஆகியவற்றுடன் இது குஜராத்தின் நான்காவது ரோப்வேயாகும் என அவர் கூறினார். இந்த ரோப் வே வேலை வாய்ப்புகளையும், மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளையும் வழங்கும் என அவர் தெரிவித்தார். நீண்ட காலமாக சிரமங்களை அனுபவித்து வந்த மக்களின் வசதிக்காக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சுற்றுலா தளங்களை அமைப்பதால், உள்ளூர் மக்கள் பெறக்கூடிய பொருளாதார பயன்களை அவர் பட்டியலிட்டார். நீலக்கொடி சான்றிதழ் பெற்ற சிவ்ராஜ்பூர் கடற்கரை, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ள ஒற்றுமை சிலை போன்ற இடங்களை அவர் பட்டியலிட்டார். முன்பு யாருமே செல்லாத அகமதாபாத்தில் உள்ள கங்காரியா ஏரியை அவர் உதாரணம் காட்டினார். மறுசீரமைப்புக்குப் பின்னர், ஆண்டுக்கு சுமார் 75 லட்சம் பேர் ஏரியை பார்வையிடுகின்றனர். பலருக்கு இது வருமான வாய்ப்பாக திகழ்கிறது. குறைந்த முதலீட்டில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் ஒரு ஆதாரமான துறையாக சுற்றுலா உள்ளது என்று அவர் கூறினார். குஜராத் மக்கள் மற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ள மக்கள், குஜராத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தளங்கள் பற்றி பரப்பும் தூதர்களாக செயல்பட்டு அதன் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பின்புலம்;
கிசான் சூர்யோதய திட்டம்
பாசனத்துக்கு பகல் பொழுதில் மின் விநியோகத்தை வழங்க, முதலமைச்சர் திரு. விஜய் ரூபானி தலைமையிலான குஜராத் அரசு, அண்மையில் கிசான் சூர்யோதய திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை விவசாயிகள் மின்விநியோகத்தைப் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ், 2023-ம் ஆண்டுக்குள் மின்சாரத்தை கொண்டு செல்வதற்காக கட்டமைப்புகளை அமைக்க பட்ஜெட்டில் ரூ. 3500 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. 220 கிலோவாட் துணை மின்நிலையங்களுடன், 66 கிலோவாட் திறன் கொண்ட 234 லேன்கள் மொத்தம் 3490 சுற்று கிலோ மீட்டர் தூரத்துக்கு, இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும்.
தகோத், பதான், மகிசாகர், பஞ்ச்மகால், சோட்டா உதேபூர், கேதா, தாபி, வல்சாத், ஆனந்த், கிர்-சோம்நாத் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் 2020-21ல் சேர்க்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்கள் 2022-23ல் படிப்படியாக இதில் சேர்க்கப்படும்.
யு.என். மேத்தா இருதயவியல் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் குழந்தைகளுக்கான இதய மருத்துவமனை இணைப்பு
யு.என். மேத்தா இருதயவியல் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் குழந்தைகளுக்கான இதய மருத்துவமனையைத் தொடங்கி வைத்த பிரதமர், அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் தொலை இருதயவியலுக்கான கைபேசி செயலியையும் ஆரம்பித்து வைத்தார்.
யு.என்.மேத்தா நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய இதய மருத்துவமனையாக உள்ளதுடன், உலகத் தரம் வாய்ந்த மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் நவீன மருத்துவ வசதிகளைக் கொண்ட உலகிலேயே மிகச்சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக திகழ்கிறது.
இந்த நிறுவனம் ரூ.470 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. விரிவாக்கத் திட்டம் முடிவடைந்த பின்னர், படுக்கைகளின் எண்ணிக்கை 450-லிருந்து 1251 ஆக அதிகரிக்கும். இந்த நிறுவனம் நாட்டிலேயே மிகப்பெரிய ஒற்றை சிறப்பு இருதவியல் கற்பிக்கும் நிறுவனமாக மாறும். மேலும் உலகிலேயை மிகப்பெரிய ஒற்றை இருதய நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவமனையாகவும் இது இருக்கும்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத பாதுகாப்பு முறைகளுடன் இதன் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. தீத்தடுப்பு மற்றும் தீயணைப்பு முறைகளும் இதில் அடங்கியுள்ளன. சுவாசக் கருவிகள், ஐஏபிபி, ஹீமோடயாலிசிஸ், எக்மோ ஆகிய வசதிகளைக் கொண்ட அறுவை சிகிச்சை அரங்கத்துடன் கூடிய இந்தியாவின் முதலாவது நகரும் நவீன இருதய மருத்துவ தீவிர சிகிச்சை பிரிவு ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்படும். 14 அறுவை சிகிச்சை மையங்கள், 7 இருதவியல் பரிசோதனை கூடங்கள் ஆகியவையும் இந்த நிறுவனத்தில் தொடங்கப்படும்.
கிர்னார் ரோப்வே
2020 அக்டோபர் 24-ம் தேதி கிர்னார் ரோப்வே தொடங்கப்பட்டதால், குஜராத் உலக சுற்றுலா வரைபடத்தில் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முதலில் 25 முதல் 30 கேபின்கள் இதில் இருக்கும். ஒவ்வொரு கேபினிலும் 8 பேர் செல்ல முடியும். இந்த ரோப்வேயின் மூலம் 2.3 கி.மீ தூரத்தை 7.5 நிமிடத்தில் தற்போது கடக்க முடியும். இந்த ரோப்வே பயணத்தின்போது, கிர்னார் மலையைச் சுற்றி படர்ந்திருக்கும் பசுமையான எழில் மிகு காட்சிகளை கண்டு களிக்க முடியும்.
***
(Release ID: 1667326)
Visitor Counter : 280
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam