சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
அசாமில் அமைக்கப்படவுள்ள நாட்டின் முதல் பல்முனை சரக்குப் போக்குவரத்து பூங்காவுக்கு திரு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்
Posted On:
20 OCT 2020 3:08PM by PIB Chennai
அசாமின் ஜாகிகோபாவில் அமைக்கப்படவுள்ள நாட்டின் முதல் மல்ட்டி மோடல் லாஜிஸ்டிக் (பல்முனை சரக்குப் போக்குவரத்து) பூங்காவிற்கு மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, காணொளிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். விமானம், தரைவழி, ரயில் மற்றும் கடல் வழிப் போக்குவரத்தை இணைக்கும் இந்தப் பூங்கா, 693.97 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் இந்தப் பூங்கா நிறுவப்பட உள்ளது. அசாம் மாநில முதலமைச்சர் திரு சர்பானந்தா சோனோ நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். மத்திய இணை அமைச்சர்கள் டாக்டர் ஜிதேந்திர சிங், டாக்டர் வி கே சிங், திரு ரமேஷ்வர் தெலி, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உயரதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு நிதின் கட்கரி, நாட்டில் 35 மல்ட்டி மோடல் லாஜிஸ்டிக் பூங்காக்களை அமைக்க தமது அமைச்சகம் திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், இது குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். அசாமின் ஜாகிகோபாவில் முதல் பூங்காவை தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (என்ஹெச்ஐடிசிஎல்) அமைப்பதாகத் தெரிவித்தார். பிரம்மபுத்திரா நதி அருகில் 317 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பூங்கா கட்டப்பட உள்ளதாக அவர் மேலும் கூறினார். இந்தப் பூங்காவின் முதல் கட்டப் பணி, வரும் 2023 ஆம் வருடம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார். சாலைப் பணிகளுக்காக 171 கோடி ரூபாயும், கட்டிடம் கட்டுவதற்காக 87 கோடி ரூபாயும், ரயில்வே பணிகளுக்காக 23 கோடி ரூபாயுமாக 280 கோடி ரூபாய் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் இந்த பணிகள் தொடங்கும் என்றும் அமைச்சர் கூறினார். இந்தத் திட்டத்தின் மூலம் அசாமில் உள்ள சுமார் 20 லட்சம் இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார் அவர்.
இந்த மல்டி மோடல் லாஜிஸ்டிக் பூங்காவில் குளிர்பதன வசதி, கிடங்குகள், பெட்ரோல் நிலையங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம்பெறும் என்று அமைச்சர் திரு நிதின் கட்கரி மேலும் தெரிவித்தார்.
நாக்பூரில் 346 ஏக்கர் பரப்பளவில் மல்ட்டி மோடல் லாஜிஸ்டிக் பூங்கா அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாராக இருப்பதாக அவர் கூறினார். பெங்களூருவில் மல்ட்டி மோடல் லாஜிஸ்டிக் பூங்கா, பஞ்சாப், சூரத், மும்பை, இன்டோர், பட்னா, ஹைதராபாத், விஜயவாடா மற்றும் கோயம்பத்தூரில் கிடங்கு கட்டிடங்களை அமைப்பதற்கான திட்ட வரைவறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சென்னை துறைமுகம் அருகில் மல்ட்டி மோடல் லாஜிஸ்டிக் பூங்கா அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் பூனே மற்றும் லூதியானாவில் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா அமைப்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இது தவிர அகமதாபாத், ராஜ்கோட், காண்ட்லா, வதோதரா, லூதியானா, அமிர்தசரஸ், ஜலந்தர், படிண்டா, ஹிஸார், அம்பாலா, கோட்டா, ஜெய்ப்பூர், ஜகட்சிங்பூர், சுந்தர்நகர், டெல்லி, கோல்கத்தா, புனே, நாசிக், பனாஜி, போபால், ராய்ப்பூர் மற்றும் ஜம்மு 22 நகரங்களில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காக்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666089
-----
(Release ID: 1666128)
Visitor Counter : 254