அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஹிமாலயப் பகுதிகளில் பெருங்காயத்தைப் பயிரிட்டு சிஎஸ்ஐஆர்- ஐஹெச்பிடி வரலாறு படைத்துள்ளது
Posted On:
19 OCT 2020 3:34PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்ற (சிஎஸ்ஐஆர்) ஆய்வகத்தின் உதவியுடன் இமாலய உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான ஐஹெச்பிடி, இமாலயாவின் லாஹுல் சமவெளியில் உள்ள விவசாயிகளுடன் இணைந்து பெருங்காயத்தைப் பயிர் செய்யவிருக்கிறது. சிஎஸ்ஐஆர்- ஐஹெச்பிடி, பெருங்காய விதைகளை வாங்கி அதற்கான வேளாண் தொழில்நுட்பத்தை உருவாக்கியது.
இந்தியாவின் முக்கிய வாசனைப் பயிர்களில் பெருங்காயமும் ஒன்று. ஆப்கானிஸ்தான், ஈரான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆண்டு தோறும் சுமார் 1200 டன் பெருங்காயத்தை சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியா இறக்குமதி செய்கிறது. ஃபெருலா அசஃபோடிடா என்று அழைக்கப்படும் பெருங்காயத் தாவர வகை இந்தியாவில் போதிய அளவு கிடைக்காததே இந்த வகைப் பயிர்கள் நம் நாட்டில் பயிரிடப்படாததற்கு முக்கிய காரணம். இந்தியாவில் பெருங்காயத்தின் பயிரிடுதலைத் துவக்கும் வகையில் கடந்த 15ஆம் தேதி சிஎஸ்ஐஆர்- ஐஹெச்பிடி இயக்குனர் டாக்டர் சஞ்சய்குமார், லாஹுல் சமவெளியில் உள்ள க்வாரிங் கிராமத்தில் முதல் விதையை பயிரிட்டார். இந்திய உணவு வகைகளில் பங்கு வகிக்கும் பெருங்காயத்தை நாட்டில் பயிரிடும் முயற்சியில் சிஎஸ்ஐஆர்- ஐஹெச்பிடி தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. இதனடிப்படையில் ஈரானில் இருந்து 6 வகையான பெருங்காய விதைகள் இம்மாதம் புதுதில்லி வந்தடைந்தது. கடந்த 30 ஆண்டுகளில் பெருங்காய விதைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். குளிர்ந்த மற்றும் வறண்ட நிலங்கள் இந்த வகையான விதைகளுக்கு உகந்ததாக இருப்பதால், இந்தியாவில் இமாலயப் பகுதி பெருங்காயத்தைப் பயிரிட ஏதுவாக இருக்கும்.
மேலும் இமாச்சலப் பிரதேச மாநில வேளாண் துறையுடன் இணைந்து சிஎஸ்ஐஆர்- ஐஹெச்பிடி விஞ்ஞானிகள், லாகூர் சமவெளியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு பெருங்காயத்தைப் பயிரிடுவது குறித்த பயிற்சி முகாம்களையும் ஏற்பாடு செய்திருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665796
----
(Release ID: 1665838)