பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

தில்லியில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைந்த மருத்துவ வசதி மற்றும் தொலைத்தொடர்பு குறித்த சர்வதேச கருத்தரங்கில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்

Posted On: 03 OCT 2020 7:32PM by PIB Chennai

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்துகொண்ட  ஒருங்கிணைந்த மருத்துவ வசதி  மற்றும் தொலைத்தொடர்பு குறித்த சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், கொரோனா தோற்று அதிகரித்துள்ள தற்போதைய காலகட்டத்தில் மருத்துவ நிபுணர்களின் பார்வை ஒருங்கிணைந்த மருத்துவத்தின் பக்கம் திரும்பி உள்ளதாகவும் உலகெங்கிலுமுள்ள வல்லுநர்கள் இதர மருத்துவ முறையை பின்பற்றி வருவதாகவும் கூறினார்.

கொரோனா பேரிடர் காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு தலைசிறந்த அலோபதி மருத்துவர்களும் ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருந்துகளை நாடுவதாக அமைச்சர் கூறினார். இதுபோன்ற நிலையில் ஒருங்கிணைந்த மருத்துவ முறை இன்றியமையாததாக இருக்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முறையான யோகா பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தினால் நீரிழிவு நோய்க்கான மருந்துகளின் அளவை வெகுவாகக் குறைக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.

 

இருபதாம் நூற்றாண்டின் முதல்பாதியில் அதிகமாக பரவி வந்த தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க சுகாதார பழக்கவழக்கங்கள் பின்பற்றப்பட்டு வந்தன என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், பிற்காலத்தில் இந்த வழக்கம் மறந்து போயிருந்தாலும், கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி, முறையான கை சுத்தம் முதலிய சுகாதார பழக்கங்கள் உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

பாரம்பரிய மருத்துவமுறையை மேம்படுத்தும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சியால் சர்வதேச யோகா தினத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்ததை குறிப்பிட்ட அமைச்சர், இதேபோல் உள்நாட்டு மருத்துவ முறைக்கென பிரத்தியேகமாக ஆயுஷ் அமைச்சகமும்  அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

****************



(Release ID: 1661580) Visitor Counter : 150