பிரதமர் அலுவலகம்

உத்தரகாண்டில் நமாமி கங்கை திட்டத்தின் கீழ் ஆறு பெரிய திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 29 SEP 2020 1:37PM by PIB Chennai

உத்தராண்ட் ஆளுநர் திருமதி பேபி ராணி மவுர்யா அவர்களே, முதலமைச்சர் திரு திரிவேந்திர சிங் ராவத் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு. கஜேந்திர சிங் செகாவத் அவர்களே, டாக்டர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அவர்களே, திரு. ரத்தன் லால் கட்டாரியா அவர்களே, மற்ற அதிகாரிகள் மற்றும் உத்தரகாண்டைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளே, உத்தரகாண்டின் சார்தம் புண்ணிய பூமியை உள்ளடக்கிய புனிதமான பூமிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.

இன்று, அன்னை கங்கையின் தூய்மையை உறுதிப்படுத்தும் 6 பெரிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், ஹரித்துவார், ரிஷிகேஷ், பத்ரிநாத், முனி கி ரெட்டி ஆகிய இடங்களில் அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும். இந்தத் திட்டங்களுக்காக உத்தரகாண்டைச் சேர்ந்த எனது அனைத்து நண்பர்களையும் நான் வாழ்த்துகிறேன்.

நண்பர்களே,

சற்று நேரத்துக்கு முன்பு , அழகிய முத்திரையும், ஜல் ஜீவன் இயக்கத்தின் வழிகாட்டியும் வெளியிடப்பட்டன. ஜல் ஜீவன் இயக்கம், கிராமங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வழங்கும் மிகப்பெரிய இயக்கமாகும். ஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த இயக்கத்தின் முத்திரை உறுதியாக ஏற்படுத்தும். அதே சமயம், இந்த வழிகாட்டி நூல், கிராமப்புற மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மக்களுக்கும், அரசு எந்திரத்துக்கும் மிகவும் தேவையானதாகும். இத்திட்டத்தின் வெற்றியை உறுதி செய்யும் சிறந்த வழிகளை இது கொண்டுள்ளது.

நண்பர்களே,

இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த நூலில், கங்கை எவ்வாறு நமது கலாச்சார மகிமை, நம்பிக்கை, பாரம்பரியம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது என விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கங்கை அதன் பிறப்பிடமான உத்தரகாண்டில் இருந்து கடலில் கலக்கும் மேற்கு வங்கத்தின் கங்கா சாகர் வரை, நாட்டின் மக்கள் தொகையில் சுமார் பாதிப்பேரின் வாழ்க்கையை அது செழுமைப்படுத்தியுள்ளது.  அதனால், கங்கையின் தூய்மை மிகவும் அவசியமானது. கங்கையின் தடையற்ற ஓட்டம் அவசியமானது.  முந்தைய பல ஆண்டுகளுக்கு முன்பு கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் இயக்கங்கள் தொடங்கப்பட்டன. ஆனால், இந்த இயக்கங்களில், மக்களின் பங்கேற்போ, தொலைநோக்கோ இருக்கவில்லை. அதனால், கங்கையின் தண்ணீர் ஒருபோதும் சுத்தமாகவில்லை.

நண்பர்களே,

கங்கை நதியைத் தூய்மைப்படுத்த ,முந்தைய பழைய முறைகள் பின்பற்றப்படுமானால், இப்போதைய நிலையைப் போலவே, மோசமாக இருந்திருக்கும். ஆனால், நாங்கள் புதிய சிந்தனை, புதிய அணுகுமுறையுடன் இதை முன்னெடுத்தோம். நமாமி கங்கை இயக்கத்தை, கங்கையைத் தூய்மைப்படுத்துவதுடன் மட்டும் நிறுத்திவிடாமல், நாட்டிலேயே இதனை மிப்பெரிய விரிவான நதி பாதுகாப்பு திட்டமாக மாற்றியுள்ளோம். அரசு ஒரே நேரத்தில் நான்கு விதமான அணுகுமுறையுடன், பணியாற்றி வருகிறது. முதலாவதாக, அசுத்தமான கழிவு நீர் கங்கையில் கலக்காமல் தடுக்க கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டமைப்பை உருவாக்கத் தொடங்கினோம். இரண்டாவதாக, அடுத்த 10-15 ஆண்டுகளின் தேவையைச் சமாளிக்கும் வகையில், இத்தகைய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்குதல்; மூன்றாவதாக, கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள 100 பெரு நகரங்கள், ஐந்தாயிரம் கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிடங்களை இல்லாமல் செய்தல், நான்காவதாக, கங்கையின் கிளை நதிகளில், அசுத்தத்தை எல்லா வழியிலும் தடுத்தல்.

நண்பர்களே, இன்று, இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையின் பலன்களை நாம் காண்கிறோம். இன்று, ரூ.30,000 கோடிக்கு அதிகமான மதிப்புள்ள திட்டங்கள், நமாமி கங்கை திட்டத்தின் கீழ், முடிவடைந்துள்ளன அல்லது பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் தவிர, இந்த இயக்கத்தின் கீழ், உத்தரகாண்டின் அனைத்து பெரிய திட்டங்களும் அநேகமாக நிறைவடைந்துள்ளன. கடந்த ஆறே ஆண்டுகளில், உத்தரகாண்டின் கழிவு நீர் சுத்திகரிப்பு திறனை, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்களால்  4 மடங்கு அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

உத்தரகாண்டில், கங்கோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத், ஹரித்துவார்  ஆகிய இடங்களைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட வடிகால்கள் மூலம் கழிவு நீர் கங்கையில் விடப்பட்ட நிலை அப்போது இருந்தது.  இன்று, அந்த வடிகால்களில் பெரும்பாலானவை அடைக்கப்பட்டு விட்டன. இதில், ரிஷிகேசுக்கு அருகாமையில் உள்ள சந்திரேஷ்வர் நகர் வடிகாலும் அடக்கம். இந்த வடிகால்களால், கங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. நாட்டிலேயே முதலாவது நான்கு அடுக்கு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், இன்று தொடங்கப்பட்டுள்ளது. ஹரித்துவாரிலும், இத்தகைய 20 வடிகால்கள் மூடப்பட்டுள்ளன. நண்பர்களே, கங்கையின் தூய்மையை, பிரயாக் ராஜ் கும்பமேளாவின் போது, உலகம் முழுவதிலும் இருந்து வந்த பக்தர்கள், உணர்ந்தார்கள். தற்போது, ஹரித்துவார் கும்பமேளாவின் போது, தூய்மையான கங்கையில் குளிக்கும் அனுபவத்தை உலகமே உணரும். இதற்காக நிலையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

நமாமி கங்கை இயக்கத்தின் கீழ், கங்கையின் நூற்றுக்கணக்கான கட்டங்கள் (படிக்கரைகள்) அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. கங்கா விஹாருக்கான நவீன ஆற்று துறைகளும் கட்டப்பட்டு வருகின்றன. ஹரித்துவாரில் ஆற்று துறை தயாராகி விட்டது. இப்போது, கங்கை அருங்காட்சியகம் அமைக்கப்படுவதால், இந்த இடம் மேலும் பக்தர்களைக் கவரும் வகையில் மாறப்போகிறது. இந்த அருங்காட்சியகம், ஹரித்துவாருக்கு வரும் சுற்றுலா பயணிகள், கங்கையுடன் இணைந்த பாரம்பரியத்தைப் பற்றி புரிந்து கொள்ளும் ஊடகமாக இருக்கும்.

நண்பர்களே,

தற்போது, நமாமி கங்கை இயக்கம் புதிய மட்டத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. கங்கையின் தூய்மை தவிர, கங்கையின் அருகே உள்ள பகுதிகளில், பொருளாதார, சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. உத்தரகாண்ட் உள்பட அனைத்து மாநிலங்களின் விவசாயிகளுக்கு, இயற்கை விவசாயம், ஆயுர்வேத தாவரங்களைப் பயிரிடுதல்  ஆகியவற்றின் பலன்கள் கிடைக்கும் வகையில், விரிவான திட்டம் ஒன்றை அரசு வகுத்து வருகிறது. இது தவிர, கங்கையின் இரு கரைகளிலும், இயற்கை விவசாயப் பண்ணைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. கங்கை நீரைத் தூய்மையாக்கும் வகையிலான இத்திட்டங்கள், சமவெளியில் டால்பின் இயக்கத்தின் மூலம் உத்வேகம் பெற்றுள்ளது.ஆகஸ்ட் 15-ம் தேதி டால்பின் இயக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த இயக்கம் கங்கை நதியில் டால்பின்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து ஊக்குவிக்கும்.

நண்பர்களே,

இன்று, தண்ணீரைப் போல பணத்தை வாரி இரைக்கும் சகாப்தத்தில் இருந்து நாடு வெளியே வந்துள்ளது. ஆனால், பலன்கள் கண்ணுக்கு தென்படவில்லை. இன்று, பணம் தண்ணீரைப் போல பாயவுமில்லை, அது தண்ணீரில் மூழ்கவுமில்லை. ஆனால், ஒவ்வொரு பைசாவும், தண்ணீருக்காக செலவிடப்படுகிறது. தண்ணீரைப் போன்ற முக்கியமான துறைகள், பல்வேறு அமைச்சகங்களிலும், துறைகளிலும் பரவியிருந்த நிலையே முன்பு காணப்பட்டது. இந்த அமைச்சகங்களில், துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இருக்கவில்லை. ஒரே இலக்குடன் செயல்படுவதற்கான தெளிவான விதிமுறைகளும் இருக்கவில்லை. இதன் காரணமாக, பாசனம் அல்லது குடிநீர் தொடர்பான பிரச்சினைகள் நாட்டை சீர்குலைய செய்துவிட்டன. நாடு சுதந்திரமடைந்து இவ்வளவு ஆண்டுகள் ஆனபின்னரும், 15 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர்  கிடைக்கவில்லை என்றால், நிலைமையை கற்பனை செய்து பாருங்கள். உத்தரகாண்டிலும், ஆயிரக்கணக்கான வீடுகளில் இதே நிலைதான் இருந்தது. நமது தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் செல்லவே முடியாத மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் குடிநீருக்கு ஏற்பாடு செய்வதற்கு  எவ்வளவு சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அவர்கள் படிப்புகளை விட்டுவிட்டு செல்ல வேண்டிய நிலை நிலவியது. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண, நாட்டில் தண்ணீர் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு, ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டது.

மிகக் குறுகிய காலத்தில், ஜல் சக்தி அமைச்சகம் சூழ்நிலையை முறையாகக் கையாண்டுள்ளது குறித்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தண்ணீர் தொடர்பான சவால்களை எதிர்நோக்குவது மட்டுமல்லாமல், நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இன்று, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், ஒவ்வொரு நாளும், சுமார் ஒரு லட்சம் வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான குழுய் இணைப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில், நாட்டின் 2 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குடிநீர் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு உத்தரகாண்டில், திரிவேந்திர ராவத் மற்றும் அவரது குழு, வெறும் ஒரு ரூபாயில் குடிநீர் இணைப்பு அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களின் வீடுகளுக்கும் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும், அதாவது கடந்த 4-5 மாதங்களில், 50,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது உத்தரகாண்ட் அரசின் அர்ப்பணிப்பு உணர்வைக் காட்டுகிறது.

நண்பர்களே,

ஜல் ஜீவன் இயக்கம்  கிராமத்துக்கும், ஏழைகளின் வீடுகளுக்கும்  வெறும் தண்ணீர் வழங்கும் இயக்கம் மட்டுமல்ல. அது கிராம சுயராஜ்யம், கிராமங்களுக்கு அதிகாரமளித்தல் என்னும் சிந்தனைக்கு வலுவூட்டும் இயக்கமாகும். அரசின் வேலைத் திட்டத்தில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான எடுத்துக்காட்டாகவும் இது உள்ளது. முன்பெல்லாம், அரசின் திட்டங்கள் அடிக்கடி தில்லியில் வகுக்கப்பட்டன. எங்கு குடிநீர் தொட்டி கட்டுவது, எந்த கிராமத்தில், எங்கு பைப்லைன்கள் பதிப்பது போன்ற அனைத்து முடிவுகளும், அநேகமாக தலைநகர்களில் இருந்தவாறு எடுக்கப்பட்டன. இந்த முறையை ஜல் ஜீவன் இயக்கம் தற்போது முற்றிலுமாக மாற்றியுள்ளது. ஆனால், இப்போது, தண்ணீர் தொடர்பான திட்டங்களை எங்கு செயல்படுத்துவது என்பதை  முடிவு செய்யும் பொறுப்பு கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  தண்ணீர் திட்டங்களை திட்டமிடுதல், அவற்றைப் பராமரித்து, இயக்குதல் என முழுப் பொறுப்பும் கிராமப் பஞ்சாயத்துக்களிடமும், தண்ணீர் குழுக்களிடமும்  விடப்பட்டுள்ளன. தண்ணீர் குழுக்களில் உள்ள 50 சதவீதம் உறுப்பினர்கள் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளாக இருப்பார்கள்.

நண்பர்களே,

இன்று வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் தண்ணீர் குழுக்களில் இடம் பெறும் பெண்களுக்கும், உறுப்பினர்களுக்கும், பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கும் பெரும் பயனளிக்கும். நமது தாய்மார்கள், பெண்களுக்குத்தான், தண்ணீரின் மதிப்பு, அதன் சேமிப்பு ஆகியவை  பற்றிய பிரச்சினை நன்றாகத் தெரியும் என நான் உறுதியாக நம்புகிறேன். அதனால்தான், தண்ணீர் பற்றிய முழுப்பொறுப்பும் அவர்களின் கைகளில் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள் இந்தப் பொறுப்பை, உணர்வுபூர்வமாக செயல்பட்டு மேற்கொண்டு, ஆக்கபூர்வமான பயன்கள் கிடைக்கச் செய்வார்கள்.

கிராம மக்களுக்கு வழிகாட்டி, முடிவுகளை எடுப்பதற்கு இவர்கள் உதவுவார்கள். ஜல் ஜீவன் இயக்கம், கிராம மக்களுக்கு வாய்ப்புகளை வழங்கி, தண்ணீர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன். ஜல் ஜீவன் இயக்கம், காந்தி பிறந்த நாளான வரும் அக்டோபர் 2-ம் தேதி, மற்றொரு பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது. இது ஒரு 100 நாள் பிரச்சாரமாகும். இதன்கீழ், நாட்டில் ஒவ்வொரு பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இந்த இயக்கம் பெரும் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்.

நண்பர்களே,

நமாமி கங்கை, ஜல் ஜீவன் இயக்கம் அல்லது தூய்மை இந்தியா இயக்கம் என எதுவாக இருந்தாலும், இவை கடந்த ஆறு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும். சாதாரண மக்களின் வாழ்க்கை முறையிலும், சமூக கட்டமைப்பிலும் ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டுவர இத்தகைய சீர்திருத்தங்கள் உதவியுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இது மேலும் உத்வேகம் அடைந்துள்ளது. அண்மையில் முடிவடைந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர், விவசாயிகள், தொழிலாளர்கள், சுகாதாரம் தொடர்பான துறைகளில் மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கண்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் மூலம், நாட்டின் தொழிலாளர்கள், இளைஞர்கள், விவசாயிகள் அதிகாரமளிக்கப்படுவார்கள். ஆனால், சிலர் போராட வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கும் போராட்டங்களை நாடு கண்டு வருகிறது.

நண்பர்களே,

சில நாட்களுக்கு முன்பு, நாடு பல தளைகளில் இருந்து விவசாயிகளை விடுவித்துள்ளது. இப்போது, நாட்டின் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை, எங்கு வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். ஆனால், மத்திய அரசு, இன்று விவசாயிகளுக்கு அவர்களது உரிமைகளை வழங்கிய போது, இவர்கள் போராடத் தொடங்கியுள்ளனர். இவர்கள் நாட்டின் விவசாயிகள் தங்கள் விளைபொருளை வெளி சந்தையில் விற்பதை விரும்பாதவர்கள். விவசாயிகளின் வாகனங்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட வேண்டும் என இவர்கள் விரும்புகின்றனர். விவசாயிகளிடம் கொள்ளையடிக்க வேண்டும் என்றும், இடைத் தகர்கள் குறைந்த விலைக்கு உணவு தானியங்களை வாங்கி லாபம் பார்க்க வேண்டும் என்றும் இவர்கள் விரும்புகின்றனர். விவசாயிகளின் விடுதலையை அவர்கள் எதிர்க்கின்றனர். விவசாயிகள் வணங்கும் பொருட்களை எரித்து அவர்களை இழிவுபடுத்துகின்றனர்.

நண்பர்களே,

பல ஆண்டுகளாக இவர்கள் குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்துவோம் என்று கூறிவந்தனர். ஆனால், அதைச் செய்யவில்லை. எங்கள் அரசு, சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி,  குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்தும் பணியைச் செய்தது. இன்று இவர்கள், குறைந்தபட்ச ஆதார விலை குறித்து விவசாயிகளிடம் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர். எம்எஸ்பி நாட்டில் எப்போதும் போல இருப்பதுடன், விவசாயிகள் தங்கள் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யும் சுதந்திரமும் இருக்கும். ஆனால், இந்த சுதந்திரத்தை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கருப்பு பணத்தை சுருட்டும் மற்றொரு வழி அடைபட்டதால், அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

நண்பர்களே,

இந்தக் கொரோனா காலத்தில், டிஜிடல் இந்தியா, ஜன் தன் வங்கி கணக்குகள், ரூபே அட்டை ஆகியவை எவ்வாறு மக்களுக்கு உதவின என்பதை நாடு கண்டுள்ளது. ஆனால், இதை எங்கள் அரசு தொடங்கிய போது, எவ்வாறு இவர்கள் அதை எதிர்த்தனர் என்பதை நீங்கள் நினைவுபடுத்தி பார்க்கலாம். நாட்டின் ஏழை மக்கள், கிராமங்களில் வசிப்பவர்கள் எழுத்தறிவற்றவர்கள், ஏதுமறியாதவர்கள் என்பதே அவர்களது பார்வை. நாட்டின் ஏழை மக்களுக்கு வங்கி கணக்குகள் வைத்திருப்பதையோ, அல்லது டிஜிடல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதையோ இவர்கள் எப்போதும் எதிர்த்து வந்தனர்.

நண்பர்களே,

ஒரு நாடு-ஒரு வரி-ஜிஎஸ்டி என்னும் கருத்தையும் இவர்கள் எதிர்த்ததை நாடு கண்டது. ஜிஎஸ்டி காரணமாக, வீட்டு உபயோகப் பொருட்களின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது. பெரும்பாலான வீட்டு உபயோகப்பொருட்கள், சமையலறை பொருட்களுக்கு வரி ரத்து செய்யப்பட்டுள்ளது, அல்லது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு, இந்தப் பொருட்களுக்கு அதிகமாக வரி விதிக்கப்பட்டது. அதனால், மக்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து அதிக பணத்தை செலவழிக்க வேண்டியிருந்தது.  ஆனால், இவர்களுக்கு ஜிஎஸ்டியாலும் பிரச்சினை இருந்தது. அதனால் அதை எதிர்க்கின்றனர்.

நண்பர்களே,

இவர்கள் விவசாயிகளுடனோ, இளைஞர்களுடனோ, வீரர்களுடனோ ஒருபோதும் இருந்ததில்லை. எங்கள் அரசு ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை கொண்டு வந்தபோது, உத்தரகாண்டில் உள்ள ஆயிரக்கணக்கான முன்னாள் படை வீரர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த திட்டத்தை செயல்படுத்தி, முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஓய்வூதிய நிலுவைத் தொகையை அரசு வழங்கியது. உத்தரகாண்டில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான முன்னாள் ராணுவத்தினர் இத்திட்டத்தால் பயனடைந்தனர். ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதிலும் இவர்களுக்கு பிரச்சினை இருந்தது. இத்திட்டத்தை இவர்கள் எப்போதும் எதிர்த்து வந்தனர்.

நண்பர்களே,

பல ஆண்டுகளாக, இவர்கள் நாட்டின் ராணுவத்தையோ, விமானப்படையையோ வலுப்படுத்த எதையும் செய்யவில்லை. எங்களுக்கு அதி நவீன போர் விமானங்கள் வேண்டுமென விமானப்படை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், விமானப்படையின் கோரிக்கையை இவர்கள் தொடர்ந்து மறுத்து வந்தனர். எங்கள் அரசு ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை நேரடியாக மேற்கொண்ட போது, இவர்களுக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இப்போது, ரபேல் விமானங்கள் நமது படையில் சேர்க்கப்பட்டு, விமானப்படை வலுப்பெற்றுள்ளது. இருந்தாலும் அவர்கள் எதிர்க்கின்றனர். இன்று ரபேல் இந்திய விமானப்படைக்கு வலு சேர்த்துள்ளது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அம்பாலாவில் இருந்து லே வரை அது கர்ச்சனை புரிந்து நமது இந்திய வீரர்களுக்கு ஊக்கமளித்துள்ளது.

நண்பர்களே, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நமது துணிச்சல் மிக்க வீரர்கள், துல்லிய தாக்குதலை நடத்தி, பயங்கரவாத தளங்களை அழித்தனர். நமது வீரர்களின் தைரியத்தைப் பாராட்டுவதற்கு பதிலாக, இவர்கள் துல்லிய தாக்குதலுக்கு ஆதாரங்களைக் கேட்டனர். துல்லிய தாக்குதல்களை எதிர்த்ததன் மூலம், இவர்கள் தங்களது உண்மையான நிறத்தையும்,  நாட்டின் முன்பு தங்களது நோக்கத்தையும் காட்டி விட்டனர். நாட்டுக்காக செய்யும் எல்லாவற்றையும் எதிர்ப்பது இவர்களது வழக்கமாகும். அவர்களுக்குள்ள ஒரே அரசியல் உத்தி-எதிர்ப்பதுதான். இந்தியாவின் முன்முயற்சியால், உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறது, இந்தியாவில் இதனை இவர்கள் எதிர்க்கின்றனர். நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களை நாட்டுடன் இணைத்து வரலாற்று சிறப்பு மிக்க பணியைச் செய்த சர்தார் வல்லபாய் பட்டேலின் உலகிலேயே மிக உயரமான சிலையைத் திறந்த போதும், இவர்கள் இன்னும் அதை எதிர்த்து வருகின்றனர். இதுவரை, அந்த ஒற்றுமை சிலையை, அந்த தரப்பைச் சேர்ந்த எந்தத் தலைவரும் சென்று பார்க்கவில்லை. ஏனென்றால் அவர்கள் அதை எதிர்க்கின்றனர்.

நண்பர்களே,

ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க முடிவு செய்த போதும், அவர்கள் அதற்கு எதிராக இருந்தனர். நவம்பர் 26-ம் தேதியை அரசியல் சாசன தினமாக கொண்டாட முடிவு செய்த போது, அவர்கள் எதிர்த்தனர். அவர்கள் பாபா சாகிப் அம்பேத்கரை எதிர்க்கின்றனர். நண்பர்களே, அயோத்தியில் மாபெரும் ராமர் ஆலயம் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்த மாதம் நடைபெற்றது. இவர்கள் முதலில் உச்சநீதிமன்றத்தில் ராமர் ஆலயத்தை எதிர்த்தனர். பின்னர் பூமி பூஜையை எதிர்த்தனர். ஒவ்வொரு நாளும், எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே, இவர்கள் எதிர்த்து வருகின்றனர். இவர்களது போராட்டம் நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் பொருத்தமற்றதாக மாறி வருகின்றது. இது அவர்களுக்கு நடுக்கத்தையும், அமைதியின்மையையும், விரக்தியையும் அளித்துள்ளது.  நான்கு தலைமுறைகளாக நாட்டை ஒரு  குடும்பத்தைச் சேர்ந்த  கட்சி  ஆண்டது. இன்று, அவர்கள் தங்கள் சுயநல நோக்கத்துக்காக மற்றவர்களின் தோள்கள் மீது சவாரி செய்து, நாட்டின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் எல்லாவற்றையும் எதிர்த்து வருகின்றனர்.

நண்பர்களே,

நம் நாட்டில் பல சிறிய கட்சிகள் உள்ளன. அவை ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது. அவை தொடங்கப்பட்டதிலிருந்து, எதிர்ப்பது ஒன்றிலேயே நேரத்தைச் செலவிட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக எதிர்த் தரப்பில் இருந்த போதிலும், அவை நாட்டை ஒரு போதும் எதிர்த்ததில்லை. நாட்டு நலனுக்கு எதிராக செயல்பட்டதில்லை.  ஆனால், சிலர் எதிர்க்கட்சி வரிசையில், சில ஆண்டுகளே இருந்த போதிலும், அவர்களது அணுகுமுறை, உத்தி ஆகியவற்றை நாடு தெளிவாக பார்க்க முடிந்துள்ளது. அவர்களது சுயநல நோக்கத்தைப் பொருட்படுத்தாமல், இந்தப் பெரிய சீர்திருத்தங்கள் தற்சார்பு இந்தியாவை ஏற்படுத்த நாட்டு நலனுக்காக, நாட்டின் ஆதாரங்களைப் பெருக்குவதற்காக, வறுமையிலி,ருந்து நாட்டை விடுவிப்பதற்காக, நாட்டை மேலும் வலுவானதாக்க  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீண்டும், எனது உளம் கனிந்த வாழ்த்துக்களை, இந்த மேம்பாட்டு திட்டங்களுக்காக எங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்!

நீங்கள் உங்களைகவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.  ஆரோக்கியமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்! பாபா கேதார் உங்களுடன் இருப்பார்.

நன்றிகள் பல, ஜெய் கங்கா!



(Release ID: 1660419) Visitor Counter : 210