பிரதமர் அலுவலகம்
ஐ.நா. பொதுச் சபையில் 75வது கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
26 SEP 2020 7:48PM by PIB Chennai
பொதுச் சபையின் மரியாதைக்குரிய தலைவர் அவர்களே, இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் சார்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் 75வது ஆண்டு விழாவை ஒட்டி அதன் உறுப்பு நாடுகள் அனைத்திற்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனர் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இருப்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தருணத்தில், இந்தியாவின் 1.3 பில்லியன் மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள, உலகளாவிய இந்த மன்றத்திற்கு நான் வந்திருக்கிறேன்.
மேதகு தலைவர் அவர்களே
1945 காலக்கட்டத்தில் இருந்த உலகம் இப்போதுள்ள உலகில் இருந்து நிறைய மாறுபட்டது. உலகளவிலான சூழ்நிலை, வளங்கள் - ஆதார வளங்கள், பிரச்சினைகள் - தீர்வுகள்; எல்லாமே நிறைய மாறிவிட்டன. இதன் விளைவாக, உலக நலனை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் வடிவமும், கூட்டமைப்பும் அந்தந்தக் காலக்கட்டத்திற்கு ஏற்ப அமைந்துள்ளன. இன்றைக்கு நாம் முற்றிலும் மாறுபட்ட காலக்கட்டத்தில் இருக்கிறோம். 21வது நூற்றாண்டில், இப்போதைய மற்றும் எதிர்காலத்தைய தேவைகள் மற்றும் சவால்கள், கடந்த காலத்தைவிட பெருமளவு மாறுபட்டுள்ளன. எனவே, இன்றைய சர்வதேச சமுதாயம் மிக முக்கியமான கேள்வியை எதிர்நோக்கியுள்ளது: 1945ல் இருந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பின் செயல் தன்மை இன்றைக்கும் பொருத்தமானதாக உள்ளதா என்பதே அந்தக் கேள்வியாக உள்ளது. நூற்றாண்டு மாறி, நாம் மாறாமல் இருந்தால், மாற்றங்களை உருவாக்குவதற்கான பலம் குறைந்துவிடும். ஐக்கிய நாடுகள் சபையின் கடந்த 75 ஆண்டுகளைப் பார்த்தால், நிறைய சாதனைகளை நாம் காணலாம்.
ஆனால் அதேசமயத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகளை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தீவிர தேவை இருப்பதையும் காண முடியும். மூன்றாவது உலகப் போர் ஏற்படாமல் வெற்றிகரமாக நாம் தவிர்த்துவிட்டோம் என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் பல போர்களும், பல உள்நாட்டுப் போர்களும் நடந்துள்ளன என்பதை நாம் மறுத்துவிட முடியாது. பல பயங்கரவாதத் தாக்குதல்கள் உலகை உலுக்கியுள்ளன. ஏராளமானோர் ரத்தம் சிந்தியுள்ளனர். இந்தப் போர்கள் மற்றும் தாக்குதல்களில் பலியான எல்லோருமே உங்களையும் என்னையும் போன்ற மனிதர்கள் தான். நம்முடன் சேர்ந்து இந்த உலகிற்கு வளம் சேர்த்திருக்க வேண்டிய ஆயிரக்கணக்கான குழந்தைகள், உரிய காலத்திற்கு முன்னதாகவே நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார்கள். ஏராளமான மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை இழந்து, வீடற்ற அகதிகளாக மாறிவிட்டனர். அந்த காலக்கட்டங்களில் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட முயற்சிகள் போதுமானவையாக இருந்தனவா அல்லது இந்த முயற்சிகள் இன்றைக்கும் போதுமானவையாக உள்ளனவா? கடந்த 8 - 9 மாதங்களாக ஒட்டுமொத்த உலகமே கொரோனா என்ற கொடிய நோய்த் தொற்றுக்கு எதிராகப் போராடி வருகிறது. இந்த நோய்த் தொற்றுக்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை என்ன பங்காற்றியுள்ளது? அதன் திறன்மிக்க செயல்பாடு எங்கே போனது?
மேதகு தலைவர் அவர்களே
ஐக்கிய நாடுகள் சபையின் செயல் தன்மையில் எதிர்வினைகள், செயல்பாடுகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது இப்போதைய தேவையாக உள்ளது. இந்தியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மீதான நம்பிக்கை மற்றும் மரியாதை ஈடு இணையற்றது என்பது உண்மை. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக இந்திய மக்கள் நீண்டகாலமாகக் காத்திருக்கிறார்கள் என்பதும் உண்மை. சீர்திருத்த செயல்பாடுகள் எப்போதாவது நிறைவு பெறுமா என்பது குறித்து, இப்போது இந்திய மக்கள் கவலை கொண்டிருக்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையில் முடிவு எடுக்கும் அமைப்புகளில் இருந்து இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்தியா தள்ளி வைக்கப் பட்டிருக்கும்? உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 18 சதவீதமாக உள்ளது. நூற்றுக் கணக்கான மொழிகள், நூற்றுக்கணக்கான பேச்சு வழக்குகள், பல மதங்கள், பல சித்தாந்தங்கள் கொண்ட ஒரு நாடு, பல நூற்றாண்டுகளாக உலக பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லம் ஒரு நாடு, பல நூறாண்டுகள் அந்நிய ஆட்சியைக் கண்ட நாடாக இந்தியாக உள்ளது.
மேதகு தலைவர் அவர்களே
நாங்கள் வலிமையாக இருந்தபோது, உலகில் நாங்கள் தொந்தரவுகளை ஏற்படுத்தவில்லை; நாங்கள் பலவீனமாக இருந்தபோது, உலகிற்கு சுமையாக நாங்கள் இருந்தது கிடையாது.
மேதகு தலைவர் அவர்களே
ஒரு நாடு இன்னும் எவ்வளவு காலத்திற்குக் காத்திருக்க வேண்டும்? அதிலும் குறிப்பாக அந்த நாட்டின் நிகழ்வுகள் உலகின் பெரும் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் இருக்கும் போது, எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?
மேதகு தலைவர் அவர்களே
ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட அடிப்படையான சித்தாந்தங்கள், இந்தியாவின் சித்தாந்தங்களைப் போன்றதாகவே உள்ளன. இந்தியாவின் அடிப்படைத் தத்துவங்களில் இருந்து அது மாறுபட்டதாக இல்லை. வசுதேவ குடும்பகம் என்ற வார்த்தைகள், ஒட்டுமொத்த உலகமே ஒரே குடும்பம்தான் என்ற இந்த வார்த்தைகள், ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அரங்கில் அடிக்கடி எதிரொலிக்கின்றன. நாங்கள் ஒட்டுமொத்த உலகையும் ஒரே குடும்பமாகக் கருதுகிறோம். அது எங்களுடைய கலாச்சாரம், குணாதிசயம் மற்றும் சிந்தனையின் ஓர் அங்கமாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையிலும்கூட, ஒட்டுமொத்த உலகின் நலனுக்குதான் இந்தியா எப்போதும் முன்னுரிமை அளித்து வந்துள்ளது. 50 அமைதிப் படைகளுக்கு தனது தீரம் மிகுந்த ராணுவ வீரர்களை இந்தியா அனுப்பியுள்ளது. அமைதியை உருவாக்கும் முயற்சியில், தீரம் மிகுந்த ராணுவ வீரர்களை அதிக அளவில் இந்தியா இழந்திருக்கிறது. இன்றைக்கு, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் பங்களிப்பைப் பார்த்த பிறகு, ஒவ்வொரு இந்தியரும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் பங்கு இன்னும் விரிவானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே
அக்டோபர் 02 ஆம் தேதி `சர்வதேச அஹிம்சை தினம்' மற்றும் ஜூன் 21ல் `சர்வதேச யோகா தினம்' கடைபிடிக்க இந்தியா தான் முன்முயற்சி எடுத்தது. அதேபோல பேரழிவை தாங்கும் கட்டமைப்புக்கான கூட்டமைப்பு மற்றும் சர்வதேச சூரிய மின் சக்திக் கூட்டமைப்பு ஆகியவையும் இந்தியாவின் முயற்சியால் இன்று சாத்தியமாகியுள்ளன. இந்தியா எப்போதுமே ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நன்மை பற்றி மட்டுமே கவலை கொண்டிருக்கிறதே தவிர, தன்னுடைய சொந்த நலன்களை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டது கிடையாது. இந்தத் தத்துவம் தான் எப்போதுமே இந்தியாவின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் சக்தியாக இருந்து வருகிறது. இந்தப் பிராந்தியத்தில் அனைவரின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட கிழக்கத்திய நாடுகளை நோக்கிய எங்கள் கொள்கையில், அருகாமை நாடுகளுக்கு முதல் முன்னுரிமை என்ற கொள்கையில் இந்தத் தத்துவத்தின் அம்சங்களைக் காண முடியும். இந்திய பசிபிக் பிராந்தியம் குறித்த எங்கள் அணுகுமுறையும் இதன்படியே உள்ளது. இந்தியாவின் பங்களிப்புகளிலும் இதே கோட்பாடு தான் பின்பற்றப்படுகிறது. எந்தவொரு நாட்டுடனும் இந்தியா நட்புறவு கொள்கிறது என்றால், அது யாருக்கும் எதிரானதாக இருந்தது கிடையாது. வளர்ச்சிக்கான பங்களிப்பில் இந்தியா தன்னை பலப்படுத்திக் கொள்ளும்போது, பங்களிப்பாக சேரும் நாடு எங்களைச் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்ற தவறான உள்நோக்கம் இருந்தது கிடையாது. எங்கள் வளர்ச்சியின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நாங்கள் ஒருபோதும் தயங்கியது கிடையாது.
மேதகு தலைவர் அவர்களே
கொடிய நோய்த் தொற்று பரவும், நெருக்கடியான இந்த காலக்கட்டத்திலும், இந்தியாவின் மருந்து உற்பத்தித் தொழிற்சாலைகள், 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை அனுப்பியுள்ளன. உலகில் அதிகபட்ச அளவுக்கு தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் நாடாக இருக்கும் நிலையில், இந்த நெருக்கடியை எதிர்த்துப் போராட அனைத்து மக்களுக்கும் உதவியாக இருக்கும் வகையில் தடுப்பு மருந்து உற்பத்தித் திறனை மேம்படுத்துவோம் என்று உலக சமுதாயத்திற்கு நான் உறுதி அளிக்க விரும்புகிறேன். இப்போது நாங்கள் இந்தியா மற்றும் எங்கள் அருகாமை நாடுகளில், 3வது கட்டப் பரிசோதனையை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். குளிர்பதன சங்கிலித் தொடர் அமைப்பை மேம்படுத்தவும், தடுப்பூசி மருந்துகளை அளிக்கவும் இந்தியா உதவிகரமாக இருக்கும்.
மேதகு தலைவர் அவர்களே
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரம் அல்லாத உறுப்பினர் என்ற பொறுப்பை இந்தியா நிறைவேற்ற உள்ளது. இந்தியாவின் மீது இந்த அளவுக்கு நம்பிக்கையை தெரிவித்த உறுப்பு நாடுகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பெருமை மற்றும் அனுபவத்தை, ஒட்டுமொத்த உலக நலனுக்கு பயன்படுத்துவோம். மக்களின் நலன் என்பதில் இருந்து, உலகின் நலன் என்று நமது பாதை மாறியுள்ளது. அமைதி, பாதுகாப்பு, வளமை என்பவற்றை ஆதரிப்பது பற்றி இந்தியா எப்போதும் பேசும். பயங்கரவாதம், சட்டவிரோத ஆயுதக் கடத்தல், போதை மருந்து கடத்தல், பண மோசடி போன்ற - மனிதகுலம், மனித இனம் மற்றும் மனித மாண்புகளுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்க இந்தியா தயங்காது. இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம், மரபு, பல ஆயிரம் ஆண்டு அனுபவங்கள் ஆகியவை, வளரும் நாடுகளுக்கு நல்ல வழிகாட்டுதலாக எப்போதும் இருக்கும். இந்தியாவின் அனுபவங்கள், ஏற்ற இறக்கங்கள் நிறைந்த இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் ஆகியவை உலக நலனுக்கான பாதையை பலப்படுத்துபவையாக இருக்கும்.
மேதகு தலைவர் அவர்களே
கடந்த சில ஆண்டுகளில் சீர்திருத்தம் செய்திடு - செயல்பாடு காட்டு - படிநிலை மாற்றம் செய்திடு என்ற மந்திரம் இந்தியாவில் பல மில்லியன் குடிமக்களின் வாழ்க்கையில் படிநிலை மாற்றங்களை உருவாக்கியுள்ளது. இந்த அனுபவங்கள் பல நாடுகளுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. வெறும் 4 - 5 ஆண்டுகளில் 400 மில்லியன் மக்களை வங்கி நடைமுறையில் இணைப்பது எளிதான வேலை கிடையாது. ஆனால், இதைச் செய்ய முடியும் என்று இந்தியா நிரூபித்துள்ளது. 4 - 5 ஆண்டுகளில் திறந்தவெளி கழிப்பறை நடைமுறையில் இருந்து 600 மில்லியன் மக்களை விடுவிப்பது எளிதான பணி கிடையாது. ஆனால், இந்தியா அதைச் செய்து காட்டியுள்ளது. 2 - 3 ஆண்டுகளில் 500 மில்லியன் மக்களுக்கு இலவச சுகாதார சேவைகள் அளிப்பது எளிதானதல்ல. ஆனால் இந்தியாவால் இதைச் செய்ய முடிந்துள்ளது. இன்றைக்கு, டிஜிட்டல் பரிவர்த்தனையில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இன்றைக்கு, பல மில்லியன் குடிமக்களுக்கு டிஜிட்டல் வசதி அளிப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் அதிகாரம் அளித்தலை இந்தியா உறுதி செய்திருக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க பெருமளவிலான பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 150 மில்லியன் கிராமப்புற வீடுகளுக்கு, குழாய்மூலம் குடிநீர் வழங்குவதற்கான ஒரு திட்டத்தை இப்போது இந்தியா நிறைவேற்றி வருகிறது. சமீபத்தில், 6 லட்சம் கிராமங்களுக்கு அகண்ட அலைவரிசை கண்ணாடி இழை (பிராட்பேண்ட் பைபர் ஆப்டிகல்) வசதி மூலம் இணைப்பு தருவதற்கான ஒரு பெரிய திட்டத்தை இந்தியா முன்னெடுத்துள்ளது.
மேதகு தலைவர் அவர்களே
நோய்த் தொற்றுக்குப் பிந்தைய சூழ்நிலைகளில் நாங்கள் ``தற்சார்பு இந்தியா'' என்ற தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறோம். தற்சார்பு இந்தியா என்பது உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கானதாகவும் இருக்கும். அனைத்துத் திட்டங்களின் பயன்களையும் நாட்டில் பாரபட்சமின்றி அனைத்து குடிமக்களுக்கும் வழங்குவதை உறுதி செய்ய இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பெண் தொழில்முனைவோர் மற்றும் தலைமைத்துவ பண்பை வளர்ப்பதற்கு இந்தியாவில் பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உலகின் மிகப் பெரிய மைக்ரோ நிதித் திட்டத்தின் கீழ் இன்றைக்கு இந்தியாவில் பெண்கள் தான் பெரிதும் பயன் பெற்றிருக்கிறார்கள். 26 வாரங்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கும் நாடாக இந்தியா உள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளும், தேவையான சட்ட சீர்திருத்தங்கள் மூலம் பாதுகாக்கப் படுகின்றன.
மேதகு தலைவர் அவர்களே
வளர்ச்சியை நோக்கிய பயணத்தில், உலக நாடுகளின் அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ளவும், தன் அனுபவங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்தியா விரும்புகிறது. ஐ.நா.வின் 75வது ஆண்டைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் , இந்த அமைப்பின் சேவைகளைப் பராமரிப்பதில் உறுப்பு நாடுகள் வலுவான உறுதிப்பாட்டை தெரிவிக்கும் என்று நான் நம்புகிறேன். உலகின் நலனுக்கு ஐ.நா.வின் ஸ்திரத்தன்மை மற்றும் போதிய அதிகாரம் கிடைத்தல் ஆகியவை அவசியம். ஐ.நா.வின் 75வது ஆண்டை ஒட்டி, உலகின் நலனுக்காக உழைப்பது என்ற உறுதிமொழியை நாம் மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நன்றி.
(Release ID: 1659595)
Visitor Counter : 2399
Read this release in:
Hindi
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Assamese
,
Manipuri
,
English
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Odia
,
Telugu
,
Malayalam