பிரதமர் அலுவலகம்
வயதுக்கு உகந்த உடல்தகுதி பயிற்சிகள் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர்
உடல்தகுதி மிக்க இந்தியா இயக்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவை ஒட்டி உடல் தகுதி ஆர்வலர்கள் பலருடன் பிரதமர் கலந்துரையாடல்
ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் ஏற்ற உடல்தகுதி அம்சங்கள் பற்றி உடல்தகுதிமிக்க இந்தியா கலந்தாடல் கவனம் செலுத்துகிறது. உடல் தகுதியின் வெவ்வேறு பரிமாணங்களை உணர்த்துகிறது: பிரதமர்
Posted On:
24 SEP 2020 5:23PM by PIB Chennai
உடல்தகுதி மிக்க இந்தியா இயக்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவை ஒட்டி இன்று காணொலிக் காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி,வயதுக்கு உகந்த உடல்தகுதி பயிற்சிகள் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உடல் தகுதிமிக்க இந்தியா கலந்தாடலில் பங்கேற்ற பிரதமர், ஏராளமான விளையாட்டு வீரர்கள், உடல் தகுதிப் பயிற்சி நிபுணர்கள் மற்றும் பிறருடன் கலந்துரையாடினார். சாதாரண முறையில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களையும், தங்கள் உடல் தகுதிக்கான மந்திரங்களையும் பலரும் பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர்.
தேவேந்திர ஜாஜாரியா, மாற்றுத் திறனாளி ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரருடன் பிரதமர் கலந்துரையாடினார்.
உலக மாற்றுத்திறனாளிகள் போட்டிகள் பலவற்றில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்ததாக திரு தேவேந்திராவுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். எப்படி சவால்களை முறியடித்து, உலகப் புகழ்பெற்ற அதலெடிக் வீரராக மாறினீர்கள் என்று தேவேந்திராவிடம் பிரதமர் கேட்டார்.
மின்சாரம் தாக்கியதில் ஒரு கையை இழந்த நிலையில் ஏற்பட்ட கஷ்டங்களை தேவேந்திர ஜாஜாரியா விளக்கினார். இயல்பான மற்ற குழந்தைகளைப் போல நடந்து கொண்டு, உடல் தகுதியை ஏற்படுத்திக் கொள்வதற்கு தனது தாயார் தான் ஊக்கம் கொடுத்தார் என்று அவர் கூறினார்.
சமீபத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட நிலையில், விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்தில் இருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என்று பிரதமர் கேட்டார். மன ரீதியிலான மற்றும் உடல் ரீதியிலான சவால்களை முறியடிக்க முதலில், தன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று தேவேந்திர ஜாஜாரியா கூறினார்.
சில உடற்பயிற்சிகளை அவர் செய்து காட்டினார். தனது காயங்களில் இருந்து மீள்வதற்கு, தாம் மேற்கொண்ட உடல் தகுதிப் பயிற்சிகள் பற்றி பிரதமருடன் அவர் பேசினார்.
அந்த அளவுக்கு உத்வேகமாக செயல்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அவருக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். 80 வயதான அவருடைய தாயாருக்கும் பிரதமர் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
கால்பந்து வீரர் அப்சான் ஆசிக் உடன் பிரதமர் கலந்துரையாடல்
பெண்கள் தாயாகவும், குடும்பத்தைக் கவனித்துக் கொள்பவராகவும் இருப்பதால், அவர்கள் தங்களை உடல்தகுதி மிக்கவர்களாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த கோல் கீப்பர் கூறினார். களத்தில் அமைதியாக எப்படி இருப்பது என்பதை எம்.எஸ். தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்பதை அவர் தெரிவித்தார். மனதை அமைதியாகவும், உறுதியாகவும் வைத்துக் கொள்ள தினமும் தியானம் செய்வது பற்றியும் அவர் கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் வானிலை மோசமாக இருக்கும் நிலையிலும், அந்த மக்கள் பாரம்பரியமாக எந்த வகையில் உடல் தகுதியைப் பராமரிக்கிறார்கள் என்று பிரதமர் கேட்டார். அந்தப் பகுதி மக்கள் மலையேறிச் செல்வது பற்றியும், அதுவே உடல் தகுதியை மேம்படுத்தித் தருவதாகவும் அவர் விளக்கினார். உயரமான பகுதியில் வசிப்பதால் ஜம்மு காஷ்மீர் மக்களின் நுரையீரல் செயல் திறன் அதிகமாக இருக்கும் என்பதால், வேறு இடங்களில் உடல் இயக்க செயல்பாடு அதிகமாக இருந்தாலும் சுவாசப் பிரச்சினைகள் வராது என்றும் அப்சான் கூறினார்.
கோல் கீப்பர் பொறுப்பை சிறப்பாகச் செய்வதற்கு எந்த அளவுக்கு மனதளவில் கவனத்தை செலுத்த வேண்டும், உடல் ரீதியாக எதையும் செய்யக் கூடிய தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அவர் கூறினார்.
நடிகர், மாடல் மிலிந்த் சோமன் உடன் பிரதமர் கலந்துரையாடல்
மிலிந்த் சோமனை `மேட் இன் இந்தியா மிலிந்த்' என்று குறிப்பிட்ட பிரதமர், அவருடைய பாணியில் அவர் மேக் இன் இந்தியா திட்டத்தின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார் என்று கூறினார். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த தகுதிமிக்க இந்தியா இயக்கம் உதவியாக இருந்தது என்று மிலிந்த் சோமன் கூறினார். இப்போது மக்களுக்கு உடல் மற்றும் மன பலம் பற்றி நன்கு தெரிந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். தனது தாயாரின் உடல் தகுதி பற்றி அவர் பேசினார். முந்தைய காலத்தில மக்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள், தண்ணீர் கொண்டு வர 40 - 50 கிலோ மீட்டர் தூரம் நடந்தார்கள். ஆனால் இப்போது தொழில்நுட்ப வசதிகள் காரணமாக, நகர்ப்புறங்களில் ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்கு நாம் மாறிவிட்டோம். அதனால் பல பிரச்சினைகளுக்கு ஆட்படுகிறோம் என்று மிலிந்து சோமன் கூறினார்.
உடல் தகுதிக்கு வயது வரம்பு எதுவும் இல்லை என்று கூறிய பிரதமர், உடல் தகுதியைப் பராமரித்துக் கொண்டிருக்கும் மிலிந்த் சோமனின் தாயாருக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். 81 வயதிலும் உடற்பயிற்சி செய்வதைப் பாராட்டினார்.
தங்களுக்குக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஒருவர் தன்னை ஆரோக்கியமாக, உடல் தகுதி மிக்கதாக வைத்துக் கொள்ள முடியும் என்றும், அதற்கு நம்பிக்கையும் உறுதியான மனமும் தான் தேவை என்று மிலிந்த் சோமன் கூறினார்.
விமர்சனங்களை எப்படி தாங்கிக் கொள்கிறீர்கள் என்று பிரதமரிடம் மிலிந்த் கேட்டார். முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும்போது, எல்லோருக்கும் சேவை செய்யும் உணர்வு வரும்போது, கடமை உணர்வுடன் பணியாற்றும்போது மன அழுத்தம் ஏற்படுவதில்லை என்று பிரதமர் பதில் அளித்தார். போட்டி நிலை என்பதுதான் ஆரோக்கியமான சிந்தனைக்கு அடையாளமாக இருக்கும் என்று கூறிய பிரதமர், மற்றவர்களுடன் போட்டியிடுவதைக் காட்டிலும், தமக்குத் தாமே போட்டியிடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
சத்துணவு நிபுணர் ருஜுட்டா திவாகருடன் பிரதமர் கலந்துரையாடல்
பருப்பு, அரிசி மற்றும் நெய் உணவு போன்ற பழங்கால உணவு முறைக்கு மாற வேண்டியதன் முக்கியத்துவத்தை ருஜுட்டா திவாகர் வலியுறுத்தினார். உள்ளூரில் விளையும் உணவுப் பொருட்களை சாப்பிட்டால், உள்ளூர் பொருளாதாரம் பயன்பெறும் என்றார் அவர். உள்ளூர் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்றார் அவர்.
நெய் சாப்பிடுதல், மஞ்சள் கலந்த பால் சாப்பிடுதலில் சர்வதேச அளவில் பழக்கங்கள் மாறி வருவது பற்றி அவர் பேசினார்.
நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டியது பற்றி அவர் பேசினார். ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் விசேஷமான உணவுப் பழக்கம் உண்டு என்று கூறிய அவர், வீட்டில் சமைத்த உணவுதான் எப்போதும் நல்லது என்று தெரிவித்தார். பாக்கெட் செய்த, பதப்படுத்திய உணவுகளை நிறுத்திவிட்டு, வீட்டில் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால், நிறைய பயன்கள் கிடைக்கும் என்றார் அவர்.
சுவாமி சிவதியானம் சரஸ்வதி உடன் பிரதமர் கலந்துரையாடல்
सर्वजन हिताय, सर्वजन सुखाय என்ற வாசகத்தில் இருந்து தாம் உத்வேகம் பெறுவதாக சுவாமி சிவதியானம் சரஸ்வதி கூறினார். அனைவரின் நலன் மற்றும் அனைவருக்கும் மகிழ்ச்சி என்பது இதன் அர்த்தமாகும்.
தனது குருமார்கள் பற்றி அவர் பேசினார். குருமார்களிடம் இருந்து பெற்ற உந்துதல் காரணமாக யோகாவின் முக்கியத்துவத்தைப் பரப்பி வருவதாக அவர் கூறினார். மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மற்றும் மனவள மேம்பாடு கற்றுத் தருவதில் கவனம் செலுத்தும் பழங்கால ஆசிரியர் - மாணவர் என்ற குருகுல கற்பித்தல் முறைகள் பற்றி அவர் குறிப்பிட்டார்.
யோகா என்பது உடற்பயிற்சி மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. குருகுல கல்விக் காலங்களில் மாணவர்களுக்கு அவை கற்பிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
மாறிவரும் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப யோகா பயிற்சிகளை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் பற்றி பிரதமர் பேசினார்.
விராட் கோலி உடன் பிரதமர் கலந்துரையாடல்
விராட் கோலியின் உடல் தகுதிக்கான தினசரி பயிற்சிகள் பற்றி பிரதமர் கலந்துரையாடினார். உடல் பலத்துடன், மன ஆரோக்கியமும் இணைந்து மேம்படும் என்று விராட் கோலி கூறினார்.
டெல்லியின் புகழ்பெற்ற சோலே பாட்டுரேவை எப்படி கைவிட்டீர்கள் என்று பிரதமர் கேட்டபோது, வீட்டில் சமைத்த சாதாரண உணவுகளும், உணவுப் பழக்கத்தில் ஒழுங்குகளை கடைபிடித்தலும் உடல் தகுதி நிலையை எப்படி உயர்த்தும் என்று விராட் கோலி விளக்கினார்.
நாம் எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அளவை எப்படி கட்டுப்பாட்டில் வைப்பது என்று திரு. மோடி கேட்டார். உள்ளே தரப்பட்ட உணவை செரிமாணம் செய்வதற்கு உடலுக்கு அவகாசம் தர வேண்டும் என்று விராட் கோலி கூறினார். YoYo பரிசோதனை பற்றி பிரதமர் பேசினார். உடல் தகுதி கலாச்சாரத்தை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் வலியுறுத்தினார். களைப்பாக உணர்வதில்லையா என்று பிரதமர் கேட்டதற்கு, நல்ல தூக்கம், நல்ல உணவு, நல்ல உடல் தகுதி இருந்தால் ஒரு வார காலத்தில் உடல் பழைய ஆரோக்கியத்துக்கு மீண்டுவிடும் என்று விராட் கோலி பதில் அளித்தார்.
கல்வியாளர் முகுல் கனிட்கர் உடன் பிரதமர் கலந்துரையாடல்
உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, மன மற்றும் சமூக ஆரோக்கியத்துக்கும் உடல் தகுதி முக்கியம் என்று முகுல் கனிட்கர் கூறினார். ஆரோக்கியம் என்ற கலாச்சாரத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றி அவர் வலியுறுத்தினார். சூரியநமஸ்காரம் செய்வதை பரப்பியதற்காக பிரதமருக்கு அவர் புகழாரம் சூட்டினார். ஆரோக்கியமான இருவருக்கு இடையிலான கலந்துரையாடலாக பகவத் கீதை இருப்பதாக அவர் விவரித்தார்.
தேசிய கல்விக் கொள்கை - 2020-ல் உடல் தகுதியை ஓர் பகுதியாகச் சேர்த்து, உடல்தகுதி மிக்க இந்தியாவை உருவாக்க எல்லோருக்கும் உத்வேகம் அளித்திருப்பதற்கு பிரதமருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மனம், புத்தி, எண்ணம் ஆகியவற்றின் கலவைதான் உடல் தகுதி என்று அவர் கூறினார்.
பிரதமரின் நிறைவுர
நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர், உடல்தகுதி மிக்க இந்தியா கலந்துரையாடல், எல்லா வயதுப் பிரிவினர் மத்தியிலும் உடல் தகுதி குறித்த விஷயங்களில் கவனம் செலுத்துவதாகவும், உடல் தகுதியின் வெவ்வேறு பரிமாணங்களை அறிவதாக உள்ளதாகவும் இருக்கிறது என்று கூறினார்.
உடல் தகுதிமிக்க இந்தியா இயக்கம் தொடங்கிய பிறகு, உடல் ஆரோக்கியத்தை நோக்கி நிறைய பேர் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளனர் என்று திரு. மோடி தெரிவித்தார். உடல் தகுதி மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது, துடிப்பான செயல்பாடும் அதிகரித்துள்ளது என்று பிரதமர் கூறினார். யோகா, உடற்பயிற்சி, நடைபயிலுதல், ஓட்டம், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை நமது ஆன்மசுத்தியின் அங்கமாக உள்ளன என்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தக் கொரோனா காலத்தில் கட்டுப்பாடுகள் உள்ளபோதிலும், உடல் தகுதிமிக்க இந்தியா இயக்கத்தின் தாக்கமும், அவசியமும் உணரப்பட்டுள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.
சிலர் நினைப்பதைப் போல உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது கஷ்டமான விஷயம் அல்ல என்று அவர் தெரிவித்தார். கொஞ்சம் ஒழுங்கு, கொஞ்சம் கடின உழைப்பு இருந்தால் நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்றார் அவர். எல்லோருடைய ஆரோக்கியத்துக்கும் `உடல்தகுதி டோஸ். தினமும் அரை மணி நேரம்' என்ற மந்திரத்தை அவர் அளித்தார். யோகா செய்தல் அல்லது பாட்மிண்டன், டென்னிஸ், கால்பந்து, கபடி விளையாடுதல், கராத்தே பயிற்சி செய்தல் என தினமும் 30 நிமிடங்களை செலவழிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். உடல்தகுதிக்கான உடற்பயிற்சி நடைமுறைகளை இளைஞர் நல அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் இணைந்து இன்று வெளியிட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
உடல் தகுதி குறித்து உலகம் முழுக்க விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதாகத் பிரதமர் கூறினார். உணவுப் பழக்கம், உடல் இயக்க செயல்பாடு மற்றும் ஆரோக்கியம் குறித்து உலகளாவிய திட்டம் ஒன்றை உலக சுகாதார நிறுவனம் உருவாக்கியுள்ளது. உடல் இயக்க செயல்பாடு குறித்து உலக அளவிலான பரிந்துரைகளையும் அந்த நிறுவனம் அளித்துள்ளது. இன்றைக்கு ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் உடல்தகுதியில் புதிய இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு, அந்த இலக்கை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது அந்த நாடுகளில் பெரிய அளவிலான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தினசரி உடற்பயிற்சி என்பதை வழக்கமாக்கிக் கொள்ளும் முயற்சியில் நிறைய பேர் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.
(Release ID: 1658837)
Visitor Counter : 297
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam