சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள விஜயநகர மருத்துவ அறிவியல் கல்வி நிலையத்தின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தீவிர சிகிச்சை மையத்தை டாக்டர் ஹர்ஷ்வர்த்தன் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் தொடங்கி வைத்தார்
Posted On:
31 AUG 2020 4:08PM by PIB Chennai
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள விஜயநகர மருத்துவ அறிவியல் கல்வி நிலையத்தின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தீவிர சிகிச்சை மையத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன், கர்நாடக முதல்வர் திரு. பி.எஸ். எடியூரப்பா ஆகியோர் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தனர். அதன்பிறகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் திரு. அஸ்வினிகுமார் சௌபே, எக்ஸ்பிரஸ் இணைப்பு வசதி நடைமுறை, தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் மற்றும் 13 கே.எல். திறன் கொண்ட திரவ மருத்துவ ஆக்சிஜன் டேங்க் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார். மாநில மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் டாக்டர் கே. சுதாகர், அதிநவீன சி.டி.ஸ்கேன் வசதியைத் தொடங்கி வைத்தார். அது 128 பிரிவுகளாக ஸ்கேன் படங்களை அளிக்கக் கூடிய திறன் பெற்றது.
பிரதமரின் ஸ்வஸ்த்ய சுரக்சா திட்டத்தின் கீழ் ரூ.150 கோடி ரூபாய் செலவில் இந்த தீவிர சிகிச்சைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அவசரகால மற்றும் விபத்து, நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைகளுக்கான பிரிவுகள் இதில் உள்ளன. இதில் 8 புதிய அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. அதில் 6 அறுவை சிகிச்சை அரங்குகள் எல்லாவித சிகிச்சைகளுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய பகுதியில் 200 உயர் சிகிச்சைப்பிரிவுப் படுக்கைகள், 72 தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கைகள், 20 வென்டிலேட்டர்கள் மற்றும் மேலே குறிப்பிட்ட அதிநவீன சி.டி. ஸ்கேன் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்-ரே கருவி வசதிகளும் உள்ளன. இதில் 27 முதுநிலை மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெற முடியும்.
இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் பிரதமர் திரு. நரேந்திர மோடி எந்த அளவுக்கு தனிப்பட்ட கவனமும் அக்கறையும் காட்டினார் என்பதை டாக்டர். ஹர்ஷ்வர்த்தன் நினைவுபடுத்தினார். ``பிரதமரின் ஸ்வஸ்த்ய சுரக்சா திட்டத்தின் மூன்றாவது கட்டம் 2019க்குப் பிறகுதான் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டிலேயே பெல்லாரிக்கு விபத்தில் சிக்கியவர்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப் பட்டுள்ளது. உயரத் துடிக்கும் மாவட்டங்களில் 74 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன'' என்று அவர் கூறினார். கர்நாடக மாநிலத்தில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்றை அமைக்க தீவிர பரிசீலனை நடந்து வருகிறது என்று தெரிவித்த அவர், வளரத் துடிக்கும் சிக்மகளூரு, ஹவேரி, யாட்கிர், சிக்கபல்லாபூர் மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இதுவரையில் மத்திய நிதியிலும் மாநில நிர்வாகங்களில் மேற்பார்வையிலும் 157 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
2020 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் 1.5 லட்சம் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று அரசு எடுத்துக் கொண்டுள்ள உறுதிமொழி நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதியளித்தார். ``பெரியம்மை, போலியோ நோய்களைப் போல காசநோயை ஒழிக்கும் முயற்சியில் 5 ஆண்டுகளுக்கு முன்னதாக 2025ஆம் ஆண்டிலேயே முழு வெற்றி பெறுதல்'' என்ற முயற்சியும் வெற்றிகரமாக எட்டப்படும் என்று அவர் கூறினார். ``தட்டம்மை மற்றும் மணல்வாரி நோய்களும் ஒழிக்கப்பட்டுவிடும்'' என்றும் அவர் குறிப்பிட்டார். ``அரசு தொடங்கியுள்ள ``சரியானதைச் சாப்பிடுவோம்'' மற்றும் ``உடல் தகுதிமிக்க இந்தியா'' இயக்கங்கள் பற்றியும் அமைச்சர் பேசினார். ``நாட்டு மக்களை ஆரோக்கியமானவர்களாக ஆக்குவதில் இந்த முயற்சிகள் முக்கியமான துணைச் செயல் திட்டங்களாக இருக்கும்'' என்றார் அவர். இந்தச் செயல்திட்டங்களை அமல் செய்வதில் கர்நாடகாவை முன்மாதிரியானதாக உருவாக்க, மாநில அதிகாரிகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் தனிப்பட்ட முறையில் மேற்பார்வை செய்ய வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
****
(Release ID: 1650054)
Visitor Counter : 300