நிதி அமைச்சகம்
நிதி உள்ளிணைத்தலுக்கான தேசிய இயக்கமான பிரதமரின் ஜன்-தன் திட்டம், வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகளை நிறைவு செய்தது
மோடி அரசின் மக்கள்-சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு அடிக்கல்லாக பிரதமரின் ஜன்-தன் திட்டம் இருந்துள்ளது - நிதி அமைச்சர்
40.35 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு பிரதமரின் ஜன்-தன் திட்டம் தொடங்கியது முதல் மொத்தம் ரூ 1.31 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிச் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன
பிரதமரின் ஜன்-தன் திட்ட கிராமப்புற வங்கிக் கணக்குகள் - 63.6 சதவீதம்; பிரதமரின் ஜன்-தன் திட்ட மகளிர் வங்கிக் கணக்குகள் - 55.2 சதவீதம்
பிரதம மந்திரியின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், ஏப்ரல் - ஜூன் 2020 காலத்தில் பிரதமரின் ஜன் தன் திட்ட மகளிர் வங்கிக் கணக்குதாரர்களின் கணக்குகளில் மொத்தம் ரூ 30,705 கோடி செலுத்தப்பட்டது.
அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் 8 கோடி பிரதமரின் ஜன்-தன் திட்டக் கணக்குதாரர்கள் நேரடிப் பலன் பரிவர்த்தனையைப் பெறுகிறார்கள்
Posted On:
28 AUG 2020 7:27AM by PIB Chennai
விளிம்புநிலை மக்களுக்கும், இதுவரை சமூக-பொருளாதார ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட பிரிவினருக்கும் நிதி உள்ளிணைத்தலை வழங்க நிதி அமைச்சகம் உறுதி பூண்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதால், அரசின் தேசிய முன்னுரிமையாக நிதி உள்ளிணைத்தல் விளங்குகிறது. ஏழைகள் தங்களது சேமிப்புகளை முறையான நிதி அமைப்புக்குள் கொண்டு வர வழி வகுப்பதாலும், கிராமங்களில் உள்ள தங்களது குடும்பங்களுக்குப் பணத்தை அனுப்ப வசதி அளிப்பதாலும், அதிக வட்டிக்குக் கடன் தருபவர்களிடம் இருந்து அவர்களுக்கு விடுதலை அளிப்பதாலும், இது முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தின் மிகப்பெரிய நிதி உள்ளிணைத்தல் முயற்சிகளில் ஒன்றான பிரதமரின் ஜன்-தன் திட்டம் (மக்கள் நிதித் திட்டம்) இந்த உறுதியை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
பிரதமர் திரு நரேந்திர மோடியால் 15 ஆகஸ்ட், 2014 அன்று சுதந்திர தின உரையில் பிரதமரின் ஜன்-தன் திட்டம் அறிவிக்கப்பட்டது. 28 ஆகஸ்ட் அன்று திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர், தீய சுழலில் இருந்து ஏழைகள் விடுவிக்கப்படுவதைக் கொண்டாடும் திருவிழா என்று அந்த நிகழ்வை வர்ணித்தார்.
பிரதமரின் ஜன்-தன் திட்டம் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்வதை ஒட்டி, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "மோடி அரசின் மக்கள்-சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு அடிக்கல்லாக பிரதமரின் ஜன்-தன் திட்டம் இருந்துள்ளது. நேரடிப் பலன் பரிவர்த்தனையாக இருக்கட்டும், கோவிட்-19 நிதியுதவியாக இருக்கட்டும், பிரதமரின் விவசாயிகள் திட்டமாக இருக்கட்டும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டமாக இருக்கட்டும், ஆயுள் அல்லது சுகாதாரக் காப்பீடாக இருக்கட்டும், இவற்றைச் செயல்படுத்துவதற்கான முதல் அடியான வங்கிக் கணக்கை பிரதமரின் ஜன்-தன் திட்டம் கிட்டத்தட்ட நிறைவு செய்துள்ளது," என்று அவர் கூறினார்.
நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர் திரு அனுராக் தாகூரும் பிரதமரின் ஜன்-தன் திட்டம் குறித்த தனது எண்ணங்களை வெளிப்படுத்தினார்."பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், வங்கிச் சேவைகள் சென்றடையாதவர்களை பிரதமரின் ஜன்-தன் திட்டம்
வங்கி அமைப்புக்குள் கொண்டு வந்துள்ளது, இந்தியாவின் நிதிக்
கட்டமைப்பை விரிவுபடுத்தியுள்ளது, மற்றும் 40 கோடிக்கும் அதிகமான வங்கிக்கணக்குதாரர்களை நிதி உள் இணைத்தலுக்குள் கொண்டு வந்துள்ளது. இதன் பெரும்பான்மையான பயனாளிகள் பெண்கள் ஆவார்கள், பெருவாரியான கணக்குகள் கிராமப்புற இந்தியாவில் இருந்து தொடங்கப்பட்டுள்ளன. இன்றைய கோவிட்-19 காலத்தில், சமுதாயத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு நேரடிப் பலன் பரிவர்த்தனை முறை எவ்வாறு துரிதமாகவும், எளிதாகவும் அதிகாரமளித்து, நிதிப் பாதுகாப்பை வழங்கியது என்பதை நாம் கண்டோம். பிரதமரின் ஜன்-தன் திட்டம் மூலமாக நடைபெற்ற நேரடிப் பலன் பரிவர்த்தனை, ஒவ்வொரு ரூபாயும் அது சென்றடைய வேண்டிய பயனாளியை அடைவதை உறுதி செய்து, அமைப்பு ரீதியான கசிவுகளைத் தடுத்தது இதன் முக்கிய அம்சமாகும்."
இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு ஆறு ஆண்டுகளை நிறைவு செய்வதை ஒட்டி, இது வரையிலான இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் சாதனைகளை குறித்து நாம் பார்ப்போம்.
பின்னணி
பிரதமரின் ஜன்-தன் திட்டம் என்பது வங்கியியல்/ சேமிப்பு, வைப்புக் கணக்குகள், பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, ஓய்வூதியம் ஆகிய நிதிச் சேவைகள் கட்டுபாடியாகக் கூடிய விதத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் தேசிய நிதி உள்ளடக்க இயக்கமாகும்.
1. நோக்கங்கள்:
* கட்டுபாடியாகக் கூடிய கட்டணங்களில் நிதி பொருள்கள், சேவைகளுக்கான அணுகலை உறுதி செய்தல்
* செலவைக் குறைப்பதற்கும், வீச்சை விரிவுபடுத்துவதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்
2. திட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
* வங்கிச் சேவை சென்றடையாதவர்களுக்கு வங்கிச் சேவைகளை அளித்தல் - குறைந்தபட்ச காகிதப்பணியுடன் அடிப்படை சேமிப்பு வங்கி மற்றும் வைப்புக் கணக்கைத் தொடங்குதல், வாடிக்கையாளரை அறியும் தளர்த்தப்பட்ட முறை (KYC), மின்-KYC, விரைவான முறையில் கணக்கைத் தொடங்குதல், வங்கிக் கணக்கில் பணம் எதுவும் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை மற்றும் எந்த கட்டணங்களும் இல்லை.
* பாதுகாப்பில்லாதவருக்கு பாதுகாப்பளித்தல் - பணம் எடுத்தலுக்காகவும், கடைகளில் பணம் செலுத்துவதற்காகவும் ரூ 2 லட்சம் விபத்து காப்பீட்டுடன் கூடிய தனிப்பட்டப் பற்று அட்டைகள்.
* நிதி வழங்கப்படாதவர்களுக்கு நிதி அளித்தல் - குறு-காப்பீடு, நுகர்வுக்கான மிகைப்பற்று, குறு-ஓய்வூதியம், குறு-கடன்
3. ஆரம்ப அம்சங்கள்
கீழ்கண்ட ஆறு தூண்களைச் சார்ந்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது
* வங்கிச் சேவைகள் அனைவருக்கும் கிடைக்கப் பெறுதல் - கிளை மற்றும் வங்கி முகவர்
* ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ 10,000 மிகைப்பற்று வசதியுடன் கூடிய அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்கு
* நிதி அறிவுத் திட்டம் - சேமிப்பை ஊக்கப்படுத்துதல், ஏடிஎம்களின் பயன்பாடு, கடனுக்குத் தயாராதல், காப்பீடு மற்றும் ஓய்வூதியம் பெறுதல், வங்கிச் சேவைகளுக்கு கைபேசிகளைப் பயன்படுத்துதல்
* கடன் உத்தரவாத நிதியை உருவாக்குதல் - கடன் வழுவதல்களுக்கு எதிராக சில உத்தரவாதங்களை வங்கிக்கு அளித்தல்
* காப்பீடு - 15 ஆகஸ்ட் 2014 முதல் 31 ஜனவரி 2015 வரை ஆரம்பிக்கப்பட்ட கணக்குகளுக்கு ரூ 1,00,000 வரையிலான விபத்துக் காப்பீடு மற்றும் ரூ 30,000 ஆயுள் காப்பீடு
* அமைப்பு சாரா துறைகளுக்கு ஓய்வூதியத் திட்டம்
4. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பிரதமரின் ஜன்-தன் திட்டத்தில் கடைபிடிக்கப்பட்ட முக்கியமான அணுகுமுறை
* முந்தைய முறையான இணையம் சாராத, வெளிநபரிடம் தொழில்நுட்பக் கட்டுப்பாடு இருந்ததற்கு மாறாக, வங்கிகளின் மொத்த வங்கி அமைப்பில் இணையக் கணக்குகளாகக் கணக்குகள் தொடக்கம்
* ரூபே பற்று அட்டை அல்லது ஆதார் சார்ந்த கட்டண முறை மூலம் எங்கு வேண்டுமானாலும் செயல்படுத்திக் கொள்ளும் வசதி
* குறிப்பிட்ட இடங்களில் வங்கி முகவர்கள்
* கடினமான கேஒய்சி செயல்முறைகளுக்கு பதில் எளிமைப்படுத்தப்பட்ட கேஒய்சி / மின்-கேஒய்சி
5. புது அம்சங்களுடன் பிரதமரின் ஜன்-தன் திட்டத்தின் விரிவாக்கம் - 28.8.2018-க்கு பின் சில மாற்றங்களுடன் கூடிய விரிவான பிரதமரின் ஜன்-தன் திட்டத்தைச் செயல்படுத்த அரசு முடிவெடுத்தது
* 'ஒவ்வொரு வீடு' என்பதில் இருந்து 'வங்கிப்படுத்தப்படாத ஒவ்வொரு வயது வந்தோர்' என்பதை நோக்கி கவனம் மாறுதல்
* ரூபே அட்டை காப்பீடு - ரூபே அட்டைகளின் மீதான இலவச விபத்துக் காப்பீடு, 28.8.2018-க்குப் பிறகு தொடங்கப்பட்ட பிரதமரின் ஜன்-தன் திட்டக் கணக்குகளுக்கு ரூ 1 லட்சத்தில் இருந்து ரூ 2 லட்சமாக உயர்த்தப்பட்டது
* மிகைப்பற்று வசதிகள் அதிகரிப்பு -
ரூ 5,000-த்தில் இருந்து ரூ 10,000 ஆக மிகைப்பற்று வசதி இரட்டிப்பாக்கப்பட்டது; ரூ 2,000 வரை மிகைப்பற்று (நிபந்தனைகள் இல்லாமல்)
மிகைப்பற்றுக்கான அதிகபட்ச வயது வரம்பு 60-இல் இருந்து 65 ஆக உயர்வு
6. பிரதமரின் ஜன்-தன் திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட சாதனைகள் - 19 ஆகஸ்டு 202-இன் படி:
(a) பிரதமரின் ஜன்-தன் திட்டக் கணக்குகள்
* 19 ஆகஸ்டு 2020 வரையிலான பிரதமரின் ஜன்-தன் திட்டக் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை: 40.35 கோடி; பிரதமரின் ஜன் தன் திட்டக் கிராமப்புறக் கணக்குகள் - 63.6 சதவீதம்; பிரதமரின் ஜன் தன் திட்ட மகளிர் கணக்குகள் - 55.2 சதவீதம்
* திட்டத்தின் முதல் ஆண்டில் 17.90 கோடி பிரதமரின் ஜன் தன் திட்டக் கணக்குகள் தொடக்கம்
* பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ் உள்ள கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
(b) செயல்பாட்டில் உள்ள பிரதமரின் ஜன்-தன் திட்டக் கணக்குகள்
* பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ் உள்ள மொத்த வைப்பு மீதி ரூ 1.31
லட்சம் கோடியாக உள்ளது
* வைப்புத் தொகை 5.7 மடங்கும், கணக்குகளின் எண்ணிக்கை 2.2 மடங்கும் அதிகரித்துள்ளன (ஆகஸ்ட்'20 / ஆகஸ்ட்'15)
(d) பிரதமரின் ஜன்-தன் திட்ட வங்கிக் கணக்கின் சராசரி வைப்புத் தொகை
* ஒரு வங்கிக் கணக்கின் சராசரி வைப்புத் தொகை ரூ 3239 ஆகும்
* ஆகஸ்ட்'15-உடன் ஒப்பிடும் போது சராசரி வைப்புத் தொகை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது
* வங்கிக் கணக்குகளின் பயன்பாடு அதிகரித்திருப்பதையும், கணக்குதாரர்களிடையே சேமிக்கும் பழக்கம் உருவாகியிருப்பதையும் அதிகரித்துள்ள சராசரி வைப்புத் தொகை காட்டுகிறது
(e) பிரதமரின் ஜன்-தன் திட்ட வங்கிக் கணக்குதாரர்களுக்கு ரூபே அட்டை வழங்குதல்
* பிரதமரின் ஜன்-தன் திட்ட வங்கிக் கணக்குதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த ரூபே அட்டைகள்: 29.75 கோடி
* ரூபே அட்டைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பயன்பாடு காலப்போக்கில் அதிகரித்துள்ளது
7. ஜன் தன் தர்ஷக் செயலி
நாட்டிலுள்ள வங்கிக் கிளைகள், ஏடிஎம்கள், வங்கி நண்பர்கள் (Bank Mitras), தபால் நிலையங்கள் உள்ளிட்ட வங்கியியல் செயல்பாட்டு மையங்களை கண்டறிவதற்கான மக்கள் சார்ந்த தளத்தை வழங்க கைபேசிச் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் புவியியல் தகவல் முறை செயலியில் எட்டு லட்சத்துக்கும் அதிகமான வங்கியியல் மையங்கள் குறியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் தேவை மற்றும் வசதிக்கேற்ப ஜன் தன் தர்ஷக் செயலியில் உள்ள அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தச் செயலியின் இணையப் பதிப்பை http://findmybank.gov.in என்னும் முகவரியில் அணுகலாம்.
ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வங்கியியல் மையங்களின் சேவைகள் இல்லாத கிராமங்களைக் கண்டறியவும் இந்தச் செயலி பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கண்டறியப்பட்ட கிராமங்களில் வங்கியியல் மையங்களைத் தொடங்குவதற்கான பணி தொடர்புடைய மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவால் பல்வேறு வங்கிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த முயற்சிகளால் இத்தகைய கிராமங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவு குறைந்தது.
8. பிரதமரின் ஜன்-தன் திட்ட மகளிர் பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத் தொகுப்பு:
பிரதம மந்திரியின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத் தொகுப்பின் கீழ் மாண்புமிகு நிதி அமைச்சரால் 26.03.2020 அன்று செய்யப்பட்ட அறிவிப்பின் படி, பிரதமரின் ஜன்-தன் திட்ட மகளிர் வங்கிக் கணக்குதாரர்களுக்கு மாதம் ரூ 500 வீதம்
மூன்று மாதங்களுக்கு (ஏப்ரல்'20 - ஜூன்'20) நிதியுதவி வழங்கப்பட்டது.
ஏப்ரல் - ஜூன் 2020 காலத்தில் பிரதமரின் ஜன் தன் திட்ட மகளிர் வங்கி
கணக்குதாரர்களின் கணக்குகளில் மொத்தம் ரூ 30,705 கோடி செலுத்தப்பட்டது.
9. எளிதான நேரடிப் பலன் பரிவர்த்தனைகளை உறுதி செய்தலை நோக்கி:
வங்கிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் சுமார் எட்டு கோடி பிரதமரின் ஜன்-தன் திட்டக் கணக்குதாரர்கள் நேரடிப் பலன் பரிவர்த்தனையைப் பெறுகிறார்கள். தகுதியுள்ள பயனாளிகள் சரியான நேரத்தில் நேரடிப் பலன் பரிவர்த்தனையைப் பெறுவதை உறுதி செய்ய, நேரடிப் பலன் பரிவர்த்தனையின் தோல்விகள் குறித்தான காரணங்களை கண்டறிவதற்காக, நேரடிப் பலன் பரிவர்த்தனை இயக்கம், இந்திய தேசிய கட்டண நிறுவனம், வங்கிகள் மற்றும் பல்வேறு இதர அமைச்சகங்களுடன் இணைந்து நிதித்துறை திறம்பட செயலாற்றுகிறது. வங்கிகள் மற்றும் இந்திய தேசிய கட்டண நிறுவனத்துடனான தொடர் காணொளிக் காட்சிகள் மூலம் நெருங்கிக் கண்காணித்ததன் விளைவாக, தவிர்த்திருக்கக்கூடிய காரணங்களை உடைய நேரடிப் பலன் பரிவர்த்தனைத் தோல்விகள் ஏப்ரல்'19-இன் 5.23 லட்சத்தில் இருந்து (0.20%) ஜூன்'20-இல் 1.1 லட்சமாக (0.04%) கணிசமாகக் குறைந்துள்ளன.
10. வருங்காலத்திற்கான பாதை
(i) குறு காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் பிரதமரின் ஜன்-தன் திட்டக் கணக்குதாரர்களைக் கொண்டு வரும் முயற்சி. தகுதியுடைய பிரதமரின் ஜன்-தன் திட்டக் கணக்குதாரர்கள் பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டம் மற்றும் பிரதமரின் சுரக்ஷா பீமா திட்டம் ஆகியவற்றில் இணையக் கோரப்படுவார்கள். இது தொடர்பாக வங்கிகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ii) இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், பிரதமரின் ஜன்-தன் திட்டக் கணக்குதாரர்களிடையே ரூபே பற்று அட்டையின் பயன்பாடு உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல்
(iii) குறு-கடன் மற்றும் மாற்றிக்கொள்ளத்தக்க தொடர் வைப்பு போன்ற குறு முதலீடுகளுக்கான அணுகுதலை பிரதமரின் ஜன்-தன் திட்டக் கணக்குதாரர்களுக்கு மேம்படுத்துதல்
***
(Release ID: 1649095)
Visitor Counter : 484
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam