பாதுகாப்பு அமைச்சகம்

என்சிசி பயிற்சிக்கான மொபைல் செயலியை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்

Posted On: 27 AUG 2020 12:11PM by PIB Chennai

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று புதுதில்லியில் தேசிய மாணவர் படை தலைமை இயக்குனரின்  மொபைல் பயிற்சி செயலியை தொடங்கி வைத்தார்.  இந்தச் செயலியானது நாடு முழுவதும் உள்ள தேசிய மாணவர் படையினருக்கு ஆன்லைனில் பயிற்சி அளிப்பதற்கு  உதவியாக இருக்கும்.

காணொலிக் கருத்தரங்கு மூலம் நடைபெற்ற இந்தச் செயலியின் தொடக்க நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் தேசிய மாணவர் படையினருடன் கலந்துரையாடினார்.  அவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அமைச்சர் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று அவர்களை ஊக்கப்படுத்தினார்.

தேசிய மாணவர் படையினரிடம் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் இந்தச் செயலியானது டிஜிட்டல் மூலமான கற்றலுக்கு அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் கோவிட்-19 காரணமாக நேரடி தொடர்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள சூழலில்  சிரமங்களை மீறி பயிற்சி பெற உதவும் என்றும் குறிப்பிட்டார். மனஉறுதி மற்றும் தன்னம்பிக்கையுடன் ஒருவர் முயற்சி செய்யும் போது அவரால் அனைத்துத் தடைகளையும் தகர்த்து வெற்றி பெற முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.  பெருந்தொற்று பரவலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொரோனாவை எதிர்த்துப் போராடிய முன்னணி படையினருக்கு உதவியாக இருந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான தேசிய மாணவர் படையினரின் பங்களிப்பை திரு ராஜ்நாத் சிங் பாராட்டினார். என்சிசி-யானது ஒருமைப்பாடு, ஒழுக்கம் மற்றும் சேவை ஆகிய மதிப்பீடுகளை கற்றுத் தருகிறது என்று குறிப்பிட்ட அமைச்சர் பல என்சிசி படைவீரர்கள், பிரதமர் திரு நரேந்திர மோடி, ஏர்மார்ஷல் அர்ஜன்சிங், விளையாட்டு வீரர் அஞ்சலி பகவத், முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் போன்றோர் புகழ்பெற்ற ஆளுமைகளாக வெளிப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பு அமைச்சரே என்சிசி படைவீரராக இருந்தவரே ஆவார்.

டிஜி என்சிசி மொபைல் பயிற்சி செயலியானது ஒற்றை பிளாட்ஃபாரத்தில் என்சிசி படைவீரர்களுக்கு ஒட்டுமொத்த பயிற்சி உபகரணங்களை (பாடத்திட்டம், பாடங்கள்,  பயிற்சி வீடியோக்கள் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்) வழங்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

------


(Release ID: 1648959)