ஊரக வளர்ச்சி அமைச்சகம்
21 கோடி மனித வேலை நாட்களுக்கான வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது கரீப் கல்யாண் ரோஜ்கர் திட்டத்தின் ஏழாவது வாரத்தில் 16,768 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது
Posted On:
20 AUG 2020 4:50PM by PIB Chennai
பிஹார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து, அதன் பிறகு தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பி வந்த தொழிலாளர்களுக்கு, வேலைவாய்ப்பு அளிப்பது, இயக்கரீதியில் கரீப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாநிலங்களில் 116 மாவட்டங்களில் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, கிராமங்களுக்கு அதிகாரம் ஏற்படுத்தி கொடுக்கிறது, இந்தத் திட்டம். ஏழாவது வாரத்திலேயே இந்தத் திட்டத்தின் கீழ், இருபத்தோரு கோடி மனித வேலை நாட்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 16,768 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஏராளமான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 77,974 நீர்ப் பாதுகாப்புக் கட்டமைப்பு, 2.33 லட்சம் கிராமப்புற வீடுகள், 17,933 கால்நடைப் பராமரிப்புக் கொட்டகைகள், 11372 பண்ணைக் குட்டைகள், 3552 சமுதாயத் தூய்மைத் தொகுப்பு வளாகங்கள் உட்பட பல கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை தவிர மாவட்ட நிதியத்தின் மூலம் 1300 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 764 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இன்டர்நெட் வசதி அளிக்கப்பட்டுள்ளது. 25,487 பேருக்கு வேளாண் அறிவியல் மையங்கள் மூலமாக திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
12 அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டத்தினால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், கிராமப்புற சமுதாயத்தினருக்கும், அதிக அளவில் பயன் கிடைக்கிறது.
கோவிட்-19 காரணமாக தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், இதேபோல் பாதிக்கப்பட்ட கிராமப்புறப் பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கும், வாழ்வாதார வாய்ப்புகளை அளிக்கவும், வேலைவாய்ப்பைப் பெருக்கவும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தங்கள் சொந்த ஊரிலேயே தங்கி விடலாம் என்று எண்ணும் மக்களுக்கு, வாழ்வாதாரம் அளிக்கும் வகையிலும், நீண்டகால வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான கட்டத்தில் இந்தத் திட்டம் உள்ளது.
****
(Release ID: 1647517)
Visitor Counter : 234