சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சி.ஐ.ஐ பொதுசுகாதார கருத்தரங்கின் துவக்க அமர்வில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொளி வழியாக உரையாற்றினார்

Posted On: 17 AUG 2020 4:15PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், 2 நாட்கள் நடைபெறும் சி.ஐ.ஐ பொதுசுகாதாரக் கருத்தரங்கத்தின் துவக்க அமர்வுக்குக் காணொளி வழியாகத் தலைமை வகித்தார்.  அதே போன்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு இணையமைச்சர் திரு அஷ்வினி குமார் சௌபே, நிதிஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத் கே.பால் ஆகியோரும் காணொளி வழியாக இதில் பங்கேற்றனர்.  இவர்களின் முன்னிலையில் சுகாதாரப்பராமரிப்பு மற்றும் ”சி.ஐ.ஐ காசநோய் இல்லாத பணி இடங்கள் பிரச்சாரம்” ஆகியவற்றின் மெய்நிகர் கண்காட்சியும் தொடங்கி வைக்கப்பட்டதோடு ”சி.ஐ.ஐ பொது சுகாதார அறிக்கையும் வெளியிடப்பட்டது.

கோவிட் பெருந்தொற்று நெருக்கடி காலத்திலும் கூட இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்ததற்காக சி.ஐ.ஐ அமைப்புக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், ”இந்தப் பெருந்தொற்றானது நம்மை நமது நாட்டுக்கான பொதுசுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மறுபரிசீலனை செய்யவும், அமைப்பாக்க முறையில் சீர்திருத்தவும் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது” என்று கருத்தரங்க பங்கேற்பாளர்களிடம் எடுத்துக் கூறினார். இந்தப் புதிய சுகாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் மேற்கொண்ட இந்தியாவின் வெற்றிகரமான அணுகுமுறையைச் சுட்டிக்காட்டிய அவர் அரசுத் திட்டங்களை விரிவான சமூக இயக்கமாக மாற்றுவதில் நாட்டின் திறனைப் பாராட்டினார்.  உலக போலியோ நோயாளிகளில் 60சதவீத நோயாளிகள் இந்தியாவில் இருந்த சமயத்தில் நம் நாடானது பெரியம்மையையும், போலியோவையும் முற்றிலும் ஒழித்ததே சமூக இயக்கத்துக்கான உதாரணங்கள் ஆகும்.  இதே போன்று 2025ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதம மந்திரியின் குறிக்கோள் தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் சி.ஐ.ஐ உதவியுடன் அடையப்படும் என்ற தனது நம்பிக்கையையும் அமைச்சர் தெரிவித்தார்.

காசநோய் இல்லாத பணியிடங்கள் பிரச்சாரம் குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் ஹர்ஷ் வர்தன் ”சுமார் 26.4 லட்சம் காசநோயாளிகளுடன் இந்தியா உலக காசநோயாளிகளின் எண்ணிக்கையில் மிகப்பெரும் பங்கினை தொடர்ந்து வகித்து வருகிறது.  மனித உயிர்கள், பணம் மற்றும் இழப்புக்குள்ளாகும் வேலை நாட்கள் ஆகியவற்றைப் பொறுத்து காசநோய் ஏற்படுத்தும் பொருளாதாரச் சுமை மிகப்பெரியது ஆகும்.  இது எதிர்மறையாக சுத்தமற்ற சூழ்நிலைகளில் வசிக்கின்ற தேவையான அளவு கலோரிகள் கிடைக்காத ஏழை மக்களை அதிக அளவில் பாதிக்கும் என்று குறிப்பிட்டார். 

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலமாக சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அரசு தரும் உந்துதல் காலா-அஸார் மற்றும் தொழுநோய் போன்ற நோய்களையும் முற்றிலும் ஒழித்துவிடும் என்று தான் நம்புவதாக மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.  மேலும் பேறுகால தாய்மார்களின் இறப்பு விகிதம் பூஜ்யம் என்ற நிலை ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

இ-சஞ்ஜீவனி தொலைமருத்துவ ஆலோசனை மேடையில் ஏற்கனவே 1.5 லட்சம் ஆலோசனைகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது என்பது தொலை மருத்துவம் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கு தெளிவான சான்றாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


(Release ID: 1646606) Visitor Counter : 191