பாதுகாப்பு அமைச்சகம்
173 எல்லை மற்றும் கடலோர மாவட்டங்கள் வரை மிகப்பெரும் விரிவாக்கம் அடைகிறது தேசிய மாணவர் படை
Posted On:
16 AUG 2020 9:47AM by PIB Chennai
அனைத்து எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள இளைஞர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக, தேசிய மாணவர் படையை மிகப்பெரும் அளவில் விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தத்திட்டம் குறித்த பரிந்துரையை பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஆகஸ்ட் 15-இல் தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார்.
ஒட்டுமொத்தமாக 173 எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சம் பேர், தேசிய மாணவர் படையில் சேர்க்கப்படுவார்கள். இதில், மூன்றில் ஒரு பங்கினர் சிறுமிகளாக இருப்பர். தேசிய மாணவர் படை அறிமுகப்படுத்தப்படும் எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
விரிவாக்கத் திட்டத்தின் ஓர் அங்கமாக, எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில் படையினருக்கு தேசிய மாணவர் படை பயிற்சி அளிப்பதற்காக ஒட்டுமொத்தமாக 83 தேசிய மாணவர் படை பிரிவுகள் (ராணுவம் 53, கடற்படை 20, விமானப்படை 10) மேம்படுத்தப்படும்.
எல்லைப்பகுதிகளில் உள்ள தேசிய மாணவர் படைப் பிரிவுகளுக்கு பயிற்சி மற்றும் நிர்வாக உதவிகளை ராணுவம் வழங்கும். கடலோரப் பகுதிகளில் உள்ள தேசிய மாணவர் படைப் பிரிவுகளுக்கு கடற்படை ஆதரவு அளிக்கும். அதே போல, விமானப்படைத் தளங்களுக்கு அருகே உள்ள தேசிய மாணவர் படைப் பிரிவுகளுக்கு விமானப்படை ஆதரவு அளிக்கும்.
இது எல்லை மற்றும் கடலோரப்பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு ராணுவப்பயிற்சி மற்றும் ஒழுங்கான வாழ்க்கை முறைக்கான வாய்ப்புகளை அளிப்பதோடு, பாதுகாப்புப்படைகளில் சேர அவர்களை ஊக்குவிக்கும்.
மாநிலங்களுடன் கூட்டு சேர்ந்து தேசிய மாணவர் படை விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும்.
****
(Release ID: 1646362)
Visitor Counter : 215