பிரதமர் அலுவலகம்

“வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவரை கவுரவித்தல்” தளத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்

தடையில்லாத, வலியில்லாத, நெருக்கடியில்லாத நிலையை நோக்கமாகக் கொண்டது வரி அமைப்பு - பிரதமர்
130 கோடி மக்கள்தொகையைக் கொண்ட நாட்டில் 1.5 கோடி பேர் மட்டுமே வரி செலுத்தும் வகையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என பிரதமர் கருத்து
பொதுமக்கள் சுயபரிசோதனை செய்து கொண்டு, சுயசார்பு இந்தியாவைக் கட்டமைப்பதற்காக தங்களது நிலுவை வரியை செலுத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தல்
வரி சாசனம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், வரி செலுத்துவோருக்கு நேர்மையான, மரியாதைக்குரிய, நியாயமான செயல்பாடுகளுக்கு உறுதி: பிரதமர்
தீனதயாள் உபாத்யாயா-வின் பிறந்த நாளான செப்டம்பர் 25 முதல் நாடு முழுவதும் தடையில்லாமல் முறையீடு செய்யும் வசதி கிடைக்கும்: பிரதமர்
“வங்கிச்சேவை இல்லாதவர்களுக்கு வங்கிச்சேவை அளிப்பது, பாதுகாப்பு இல்லாதவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, நிதியில்லாதவர்களுக்கு நிதி வழங்குவது, நேர்மையானவர்களை கவுரவிப்பது”- இவையே அரசின் நோக்கம்: பிரதமர்
ஒவ்வொரு சட்டத்தையும், கொள்கையையும் அதிகார மையத்தை அடிப்படையாக இல்லாமல் மக்களை மையமாகக் கொண்டு உருவாக்குவதற்கு முக்கியத்துவம்: பிரதமர்

Posted On: 13 AUG 2020 1:59PM by PIB Chennai

வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவர்களை கவுரவித்தல்” என்ற தளத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி, காணொளிக் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “நாட்டில் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களுக்கான நடவடிக்கைகள், இன்று புதிய உச்சத்துக்கு சென்றுள்ளன. 21-ஆம் நூற்றாண்டின் வரிவிதிப்பு அமைப்பின் தேவையை நிறைவேற்றும் வகையில், “வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவர்களை கவுரவித்தல்” என்ற தளம் தொடங்கப்பட்டுள்ளது. தடையில்லாத மதிப்பீடு, தடையில்லாத மேல்முறையீடு மற்றும் வரி செலுத்துவோருக்கான சாசனம் போன்ற மிகப்பெரும் சீர்திருத்தங்களை இந்தத் தளம் கொண்டுள்ளது,” என்றார்.

மேலும் அவர், “தடையில்லாத மதிப்பீடு மற்றும் வரிவிதிப்போர் சாசனம் ஆகியவை இன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளன. குடிமக்களுக்குத் தடையில்லாத முறையீட்டுக்கான வசதி, தீனதயாள் உபாத்யாயா-வின் பிறந்த தினமான செப்டம்பர் 25-ஆம் தேதி நாடு முழுவதும் கிடைக்கும். புதிய தளமானது, தடையில்லாதது மட்டுமன்றி, வரி செலுத்துவோருக்கு தன்னம்பிக்கையை ஊக்குவிப்பதையும், அச்சமில்லாத நிலையை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்றார்.

பிரதமர் பேசும்போது, கடந்த 6 ஆண்டுகளாக அரசு, வங்கிச்சேவை இல்லாதவர்களுக்கு வங்கிச்சேவை வழங்குவது, பாதுகாப்பு இல்லாதவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, நிதியில்லாதவர்களுக்கு நிதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இதே போன்று “நேர்மையானவர்களை கவுரவிக்கும்” தளமும் செயல்படும் என்று கூறினார்.

தேசத்தைக் கட்டமைப்பதில் நேர்மையாக வரி செலுத்துவோரின் பங்களிப்புக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இதுபோன்ற வரிசெலுத்துவோரின் வாழ்க்கையை எளிதாக்குவதே அரசின் பொறுப்பு என்று அவர் கூறினார். மேலும், “நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கை எளிதாக மாறும் போது, அவர் முன்னோக்கிப் பயணித்து மேம்பாடு அடைவார். அதனைத் தொடர்ந்து, நாடும் மேம்பாடு அடைந்து முன்னோக்கி நடைபோடும்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

குறைந்தபட்ச அரசின் மூலம், அதிகபட்ச ஆளுமையை வழங்குவது என்ற அரசின் தீர்மானத்தின் ஒரு அங்கமாக புதிய வசதிகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். ஒவ்வொரு விதிகள், சட்டம் மற்றும் கொள்கைகளையும் அதிகார மையத்தை அடிப்படையாக இல்லாமல், மக்களை மையமாகக் கொண்டும், பொதுமக்களுக்கு ஏற்ற வகையிலும் கொண்டு வருவதாக அவர் கூறினார். ஆளுமைக்கான புதிய மாதிரியைப் பயன்படுத்தியதற்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அனைத்துப் பணிகளையும் செயல்படுத்தும் பொறுப்பை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். இதற்கு கட்டாயமோ, தண்டனை கிடைக்கும் என்ற அச்சமோ கிடையாது. அமல்படுத்தப்பட்டுள்ள முழுமையான நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டதே காரணமாகும். அரசு தொடங்கியுள்ள சீர்திருத்தங்கள், தனித்தனி அம்சங்களாக இல்லாமல், முழுமையான கண்ணோட்டத்தில் பலனை அளிப்பதை நோக்கமாகக் கொண்டவை என்று அவர் கூறினார்.

முந்தைய வரிக் கட்டமைப்பானது, சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்டதிலிருந்து மேம்படுத்தப்பட்டிருந்தது. எனவே, நாட்டின் வரிக் கட்டமைப்பில் அடிப்படை சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன என்று பிரதமர் கூறினார். சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்தில், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, அதன் அடிப்படைத் தன்மையில் மாற்றம் செய்யப்படவில்லை என்று திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

ஏற்கனவே இருந்த அமைப்பில் உள்ள சிக்கல்கள், அதனை இணங்கி செயல்படுத்துவதற்கு சிரமத்தை அளித்தன.

எளிமையாக்கப்பட்ட சட்டங்களும், வழிமுறைகளும் செயல்படுத்துவதை எளிதாக்கியதாக அவர் கூறினார். அதற்கு ஓர்  உதாரணமாக ஜிஎஸ்டி இருப்பதை குறிப்பிட்ட பிரதமர், பல வரிகளுக்கு மாற்றாக ஒரே வரி அமைந்ததாக தெரிவித்தார்.

அண்மைக்கால சட்டங்கள் மூலம், வரி அமைப்பில் உள்ள சட்டச் சுமைகள் குறைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அதாவது, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான வரம்பு ஒரு கோடி ரூபாய் வரையாகவும், உச்சநீதிமன்றத்தில் தொடர்வதற்கான வரம்பு ரூ.2 கோடி வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “விவாத் சே விஸ்வாஸ்” திட்டம் போன்ற நடவடிக்கைகள் மூலம், பெரும்பாலான வழக்குகளை நீதிமன்றத்துக்கு வெளியே முடித்துக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களில் ஓர் அங்கமாக வரி வரம்புகள், சீராக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அதாவது, ரூ.5 லட்சம் வரை வருமானம் இருப்போருக்கு வரி இல்லை, மற்ற வரம்புகளில் இருப்பவர்களுக்கும் கூட வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் குறைந்த அளவில், தொழில் நிறுவனங்களுக்கான வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக பிரதமர் கூறினார்.

தடையில்லாத, வலியில்லாத, நெருக்கடியில்லாத வரி அமைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே தற்போதைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். தடையில்லாத கட்டமைப்பு முறையானது, வரி செலுத்துவோருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தாமல், பிரச்சினைக்குத் தீர்வுகாணச் வழிசெய்கிறது. வலியில்லாத நிலையை ஏற்படுத்த வேண்டுமானால், தொழில்நுட்பம் முதல் விதிகள் வரை அனைத்துமே எளிதாக இருக்க வேண்டும். நெருக்கடியில்லாத அமைப்பைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், ஆவணங்களைப் பரிசீலித்தல், நோட்டீஸ் அளித்தல், ஆய்வு அல்லது மதிப்பீடு செய்தல் என அனைத்திலும் வரி செலுத்துவோரும், வருமான வரி அதிகாரியும் நேரடியாக சந்தித்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்றார்.

வரி செலுத்துவோருக்கான சாசனம் அறிமுகப்படுத்தப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர், வரி செலுத்துவோருக்கு நேர்மையான, மரியாதைக்குரிய மற்றும் நியாயமான செயல்பாடுகளுக்கு உறுதியளிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என்று தெரிவித்தார். இந்த சாசனம், வரி செலுத்துவோரின் மரியாதை மற்றும் உணர்வுகளை கவனத்தில் கொண்டுள்ளது. நம்பிக்கை அம்சத்தின் அடிப்படையில் உள்ளது. மற்றும் மதிப்பீடு செய்பவர், எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் சந்தேகப்பட முடியாது என்று பிரதமர் கூறினார்.  

வருமான வரிக் கணக்குகளை ஆய்வுசெய்யும் அளவு, கடந்த 6 ஆண்டுகளில் நான்கு மடங்கு, அதாவது 2012-13-இல் இருந்த 0.94% என்ற அளவு, 2018-19-ல் 0.26%- ஆக குறைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இதுவே, வருமானவரிக் கணக்குத் தாக்கல் செய்வோர் மீது அரசு வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டார். கடந்த 6 ஆண்டுகளில், வரி நிர்வாகத்தில் ஆளுமைக்கான புதிய மாதிரி அமல்படுத்தப்பட்டதை இந்தியா கண்டுள்ளதாக அவர் கூறினார். இந்த அனைத்து முயற்சிகளுக்கும் மத்தியில், கடந்த 6-7 ஆண்டுகளில் வருமானவரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை சுமார் 2.5 கோடி அதிகரித்துள்ளது என்றார் அவர்.

எனினும், 130 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில், 1.5 கோடி பேர் மட்டுமே வரி செலுத்துகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார். பொதுமக்கள் தாங்களாகவே சுயபரிசோதனை செய்து கொண்டு, நிலுவையில் உள்ள வரியை செலுத்த முன்வர வேண்டும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

இது சுயசார்பு இந்தியாவை உருவாக்க உதவும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.

*****


(Release ID: 1645506) Visitor Counter : 306