சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய அரசு மூன்று கோடி என்95 முகக்கவசங்களை மாநில அரசுகளுக்கு விநியோகித்துள்ளது
1.28 கோடிக்கும் அதிகமான பிபிஇ கருவிகள், 10 கோடிக்கும் அதிகமான ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகளையும் மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது
Posted On:
13 AUG 2020 10:23AM by PIB Chennai
கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், நிலைமையை நிர்வகிப்பதற்காகவும், அயராது பாடுபட்டு வரும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
மேலும், மருந்துப் பொருட்களையும் மத்திய அரசு, மாநிலங்களுக்கும், யூனி்யன் பிரதேசங்களுக்கும் விநியோகித்து வருகிறது. துவக்கத்தில், மத்திய அரசு விநியோகித்த சில பொருட்கள் நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படவில்லை. உலக அளவிலும் இவற்றுக்கான தேவை அதிகமாக இருந்ததால் அயல்நாட்டுச் சந்தைகளிலும் கிடைப்பது கடினமாக இருந்தது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மத்திய ஜவுளி அமைச்சகம், மத்திய மருந்துப் பொருட்கள் அமைச்சகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுக்கான துறை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் மற்றும் பிற அமைப்புகளுடன் ஒன்றிணைந்து, தனிநபர் பாதுகாப்பு கருவிகள், என்95 முகக்கவசங்கள், வென்ட்டிலேட்டர்கள் ஆகியவற்றை உள்நாட்டுத் தொழில்துறையே உற்பத்தி செய்ய ஊக்குவிப்பட்டது. இதன் விளைவாக, தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்வோம் ஆகிய திட்டங்கள் மத்திய அரசால் வலுப்படுத்தப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டன.
2020 மார்ச் 11-ம் தேதி முதல், மத்திய அரசு 3.04 கோடிக்கும் அதிகமான என் 95 முகக்கவசங்கள், 1.28 கோடிக்கும் கூடுதலான தனிநபர் பாதுகாப்புக் கருவிகள் ஆகியவற்றை, மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், மத்திய நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. 10.83 கோடிக்கும் கூடுதலான ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகளையும் விநியோகித்துள்ளது.
மேலும், இந்தியாவிலேயே உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ், 22,533 வென்ட்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கும், யூனியன் பிரசேதங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை முறையாக பொருத்தி, பயன்படுத்தச் செய்வதையும் மத்திய அரசு உறுதிப் படுத்தியுள்ளது.
-----
(Release ID: 1645457)
Visitor Counter : 226
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam