சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
உள்கட்டமைப்பு மற்றும் எம்எஸ்எம்இ பிரிவில் சர்வதேச முதலீட்டை அதிகரிக்க கட்கரி வலியுறுத்தல்
Posted On:
12 AUG 2020 3:20PM by PIB Chennai
இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் (எம்எஸ்எம்இ) பிரிவில், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலை, குறு, சிறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி எந்திரங்களாக வாகனத் தொழில் மற்றும் எம்எஸ்எம்இ துறைகள் விளங்குவதாக அவர் கூறினார்.
வர்த்தக முதலீடு மற்றும் சாலை உள்கட்டமைப்பு மற்றும் எம்எஸ்எம்இ பிரிவில் ஒத்துழைப்பு குறித்த இந்திய-ஆஸ்திரேலிய வர்த்தக சபை மற்றும் உமன்னோவடர் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் சாலைப்பாதுகாப்புப் பிரிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஏற்கனவே ஒத்துழைப்பு அளித்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்த ஒத்துழைப்பு சாலைகளின் சிறந்த வடிவமைப்பு மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு வாய்ப்புகளை வழங்கி வருகிறது என அவர் கூறினார். இந்திய சாலைப்பாதுகாப்பு மதிப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 21000 கி.மீ சாலைகள் மதிப்பிடப்பட்டுள்ளன. சுமார் 3000 கி.மீ தூரச் சாலை தொழில்நுட்பத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளன. சிறந்த சாலைப் பொறியியலும், பொதுமக்களின் விழிப்புணர்வு அதிகரிப்பும், முன்னேற்றத்தைக் கொண்டு வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் 50 சதவீத சாலை விபத்துக்களைக் குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 2030-ஆம் ஆண்டு வாக்கில், சாலை விபத்து இறப்புகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பது நமது நோக்கமாகும் என்று திரு. கட்கரி கூறினார்.
சாலை விபத்துகளைக் குறைக்க தமது அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளதாக திரு. கட்கரி தெரிவித்தார். இந்தப் பிரச்சாரத்துக்காக, உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் தலா ரூ.7000 கோடி வழங்க உறுதியளித்துள்ளன. சமூக விழிப்புணர்வு, கல்வி, அவசரகாலச் சேவைகளில் முன்னேற்றம், மருத்துவக் காப்பீடு அறிவுறுத்தல், அதிக மருத்துவமனை வசதி உள்ளிட்டவை சாலைப்பாதுகாப்பு இலக்குகளை நோக்கி நாடு முன்னேறி வருகிறது என்று அவர் கூறினார். இந்தியாவில் போக்குவரத்துப் பிரிவில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி, 2019 மோட்டார் வாகனச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கிராமங்கள், விவசாயம், பழங்குடியினர் பிரிவுகளில் வேலை வாய்ப்புகளை வழங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கூறினார். வருங்காலத்தில், இந்தியாவின் பொருளாதாரத்தை எம்எஸ்எம்இ பிரிவு முன்னெடுத்துச் செல்லும் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். காப்பீடு, ஓய்வூதியம், பங்குப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய வாய்ப்புகள் உள்ளதால், உள்கட்டமைப்பு மற்றும் காப்பீட்டுத் துறைகள் முதலீடுகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். எம்எஸ்எம்இ விரைவில் மூலதனச் சந்தையில் பங்கெடுக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலியத் துணைப் பிரதமர் திரு. மிக்கேல் மெக்கொர்மாக் உரையாற்றினார். இந்தியச் சாலைப் பிரிவில், குறிப்பாக சாலைப் பாதுகாப்பு பிரிவு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் பங்கு வகிக்க ஆஸ்திரேலியா ஆர்வமாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
*****
(Release ID: 1645353)
Visitor Counter : 217