சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

மனிதர்கள் வாழும் பகுதியில் யானைகள் நுழையாமல் தடுப்பதற்கு நீடித்த கால அடிப்படையில் பயன் தரக் கூடிய தீர்வை உருவாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

Posted On: 10 AUG 2020 3:34PM by PIB Chennai

``மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு விலங்குகள் வருவதைத் தடுக்கும் நோக்கில் காடுகளிலேயே விலங்குகளுக்கு உணவும், தண்ணீரும் கிடைக்கச் செய்வதற்கு அரசு முழு வீச்சில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது'' என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். உலக யானைகள் தினத்தை ஒட்டி புதுடெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இதைத் தெரிவித்தார்.

யானைகள் மற்றும் பிற விலங்குகளைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் எடுப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்று அமைச்சர் கூறினார். அதற்காக உடனடிப் பலன் தரக் கூடிய, நடைமுறை சாத்தியமான, குறைந்த செலவிலான நடைமுறைகளை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். வன அலுவலர்களின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அவர் வலியுறுத்தினார்.

``மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையே குறுக்கீடுகள் வராமல் தடுத்து, மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு, மனிதர்களும், யானைகளும் இயைந்து வாழ்வதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டியது முக்கியமானதாக உள்ளது'' என்று அமைச்சர் ஜவடேகர் கூறினார். ``இந்தியாவில் மனிதன் - யானைகள் குறுக்கீடுகளைக் கையாள்வதில் சிறந்த நடைமுறைகள்'' என்ற புத்தகத்தை இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வெளியிட்டார்.

யானைகள் அதிகம் வாழும் மாநிலங்களில் வெற்றிகரமாகக் கையாளப்பட்ட நடைமுறைகளைப் படங்களுடன் கூடிய விளக்கமாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. மனிதர்கள் - யானைகள் இடையே குறுக்கீடுகள் வருவதைக் குறைப்பதற்கு, அந்தந்தப் பகுதிகளின் தன்மைக்கு ஏற்ற நடைமுறைகளைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டியாக இந்தப் புத்தகம்  இருக்கும்.

நிகழ்ச்சியில் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு. பாபுல் சுப்ரியோ, நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். யானைகளைக் காப்பாற்ற வேண்டியதும், யானைகள் - மனிதர்கள் இடையே குறுக்கீடுகள் ஏற்படுவதைக் குறைப்பதும் அவசியமானவையாக உள்ளன என்றார் அவர். அப்பாவி விலங்குகளைக் கொல்வதை அரசு சகித்துக் கொள்ளாது என்று கூறிய  அவர், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே குறுக்கீடுகள் வருவதைத் தடுப்பதற்கு சிறந்த நடைமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தும் என்று தெரிவித்தார்.

மனிதர்கள் - யானைகள் குறுக்கீடுகள் குறித்த இணையதளத்தின் நவீன வடிவமைப்பை (பீட்டா வெர்சன்) திரு. ஜவடேகர், திரு சுப்ரியோ மற்றும் அமைச்சகத்தின் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். Surakhsya எனப்படும் மனிதர்கள் - யானைகள் குறுக்கீடு குறித்த தேசிய முனையத்தில், உடனடியாக தகவல்களை சேகரித்தல் மற்றும் சூழ்நிலைகளைக் கையாள உடனடியாக ஆலோசனை பெறும் நடைமுறைகள் உள்ளன. தகவல் பரிமாற்ற வழிமுறைகள் மற்றும் தகவல் கணிப்பு உபகரணங்கள் மூலமாக எச்.இ.சி. தகவல் தொகுப்பை பயன்படுத்தி பயனுள்ள கொள்கைகளை உருவாக்க முடியும். மனிதர்கள் - விலங்குகள் இடையே குறுக்கீடுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான செயல் திட்டங்களை உருவாக்க இது உதவிகரமாக இருக்கும். இப்போது இந்த இணையதளத்தின் நவீன வடிவமைப்புப் பரிசோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் ஏற்றுக் கொண்ட பிறகு முழு அளவில் இந்தியா முழுவதிலும் இந்த நவீன வடிவமைப்பு இணையதளம் தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் அது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி சர்வதேச அளவில் வருடாந்திர நிகழ்வாக உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. யானைகளைப் பாதுகாத்தல் என்ற கருத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக இந்த நிகழ்ச்சி இருக்கும். யானைகளைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் காடுகளில் உள்ள மற்றும் தனியார் பராமரிப்பில் உள்ள யானைகளை நல்ல முறையில் கையாளுதல் மற்றும் பராமரிப்புக்கு நல்ல வழிமுறைகளை உருவாக்குதல் மற்றும் அவை குறித்த அறிவைப் பகிர்ந்து கொள்வது ஆகியவற்றுக்கு இந்த நாளில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

 (Release ID: 1644885) Visitor Counter : 214