தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

முதல் முறையாக தேசபக்தி திரைப்பட விழா இணையத்தில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்குகிறது

Posted On: 06 AUG 2020 6:06PM by PIB Chennai

தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் முதன்முறையாக தேசபக்தி திரைப்பட விழாவை இணையத்தில் வெளியிட ஏற்பாடு செய்கிறது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சுதந்திர தின கொண்டாட்டங்கள் 2020 இன் ஒரு பகுதியாக இந்த விழா 2020 ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடக்கிறது. இந்த விழா நமது சுதந்திர போராட்ட வீரர்களின் துணிச்சலை, இந்திய வரலாற்றை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுவதுடன், உலகெங்கிலும் உள்ள இந்தியர்களிடையே தேசபக்தியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திரைப்பட விழாவில் உயர்தரமான, சுதந்திர தின கருப்பொருளை அடிப்படையாக கொண்ட, தேசபக்தி திரைப்படங்கள் தினசரி www.cinemasofindia.com என்ற இலவச இணையதளத்தில் திரையிடப்படும்.

இந்தி, மராத்தி, தெலுங்கு, தமிழ், வங்காளம், குஜராத்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் இருந்து விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்கள் விழாவில் திரையிடப்படும். இந்தப் படங்கள் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC), இந்தியாவின் தேசிய திரைப்படக் காப்பகம் (NFAI), இந்திய குழந்தைகள் திரைப்பட சங்கம் (CFSI) மற்றும் திரைப்படப் பிரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தொகுப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன..

மேலும், முதன்முறையாக, சர் ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தி (1982) திரைப்படம் அனைவரும் பார்க்கும் வகையில், குறிப்பாக பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களாலும் ரசிக்க கூடிய வகையில் திரையிடப்படுகிறது.

இதை mib.gov.in என்ற இணையதளத்திலும், மேலும் பத்திரிகை தகவல் அலுவலகம் கையாளும் சமூக ஊடகங்கள் மற்றும் MyGov ஆகியவற்றிலும் வெளியிடப்படும். கூடுதலாக, அதே இணைப்பு வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக வெளியுறவு அமைச்சகத்துடனும் பகிரப்படும்.

------



(Release ID: 1644731) Visitor Counter : 165