ரெயில்வே அமைச்சகம்

இந்திய ரயில்வே துறையில் எட்டுப் பிரிவுகளின் கீழ் பணியாளர் தேர்வு குறித்து ஒரு பத்திரிகையில் தனியார் ஏஜென்சி வெளியிட்டுள்ள விளம்பரம் குறித்த விளக்கம்

ரயில்வே பணியாளர் தேர்வுக்கான எந்த விளம்பரமும் இந்திய ரயில்வே துறையால் மட்டுமே வெளியிடப்படும். அவ்வாறு விளம்பரம் வெளியிட எந்தத் தனியார் ஏஜென்சிக்கும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை

தற்போது விளம்பரம் வெளியிட்டிருப்பது சட்ட விரோதமானது மற்றும் மோசடி குற்றத்துக்கு உள்ளானது

அந்த ஏஜென்சி மீது ரயில்வே நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும்

Posted On: 09 AUG 2020 7:13PM by PIB Chennai

இந்திய ரயில்வே துறையில் 11 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் அயல்பணி அடிப்படையில் எட்டு பிரிவுகளின் கீழ் 5285 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக, www.avestran.in என்ற இணையதளம் நடத்திவரும் “Avestran Infotech”  என்ற ஒரு நிறுவனம் 2020 ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஒரு பிரபல செய்திப் பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டிருப்பதாக ரயில்வே அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும் என்றும், 2020 செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

ரயில்வே பணியாளர் தேர்வு குறித்த அனைத்து விளம்பரங்களையும் இந்திய ரயில்வே துறை மட்டுமே வெளியிட்டு வருகிறது என்பது இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு விளம்பரம் வெளியிட எந்தத் தனியார் நிறுவனத்துக்கும் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இவ்வாறு விளம்பரம் வெளியிட்டிருப்பது சட்ட விரோதமான செயல்.

மேலும் இந்திய ரயில்வேயில் குரூப் `சி' மற்றும் இதுவரை இருந்து வந்த குரூப் `டி'  பல்வேறு பிரிவுகளின் கீழான பணிகள் 21 ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் (ஆர்.ஆர்.பி.) மற்றும் 16 ரயில்வே பணியாளர் செல் (ஆர்.ஆர்.சி.) மூலம் மட்டுமே நிரப்பப்படுகின்றனவே தவிர, எந்த ஒரு ஏஜென்சியாலும் நிரப்பப்படுவதில்லை என்பதும் இதன் மூலம் தெளிவு செய்யப்படுகிறது. ரயில்வேயின் மையமாக்கப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிக்கைகள் (சி.இ.என்.) மூலமாக விளம்பரம் செய்வதன் மூலமாக, இந்திய ரயில்வே துறையில் காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

நாடு முழுவதிலும் இருந்து, தகுதியுள்ளவர்கள் இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய முடியும். Employment News / Rozgar Samachar பத்திரிகைகளில் வெளியாகும் சி.இ.என். மற்றும் அறிவிக்கை தகவல் தேசிய அளவிலான பத்திரிகை மற்றும் மாநிலப் பத்திரிகைகளில் வெளியிடப்படும். ஆர்.ஆர்.பி.கள்/ ஆர்.ஆர்.சி.களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் சி.இ.என். தகவல் காட்சிப்படுத்தப்படும். ஆர்.ஆர்.பி.கள்/ ஆர்.ஆர்.சி.களின் இணையதள முகவரிகள் சி.இ.என்-ல் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட ஏஜென்சி கூறியிருப்பதைப் போல, பணியாளர் தேர்வுக்கு தங்கள் சார்பில் செயல்பட எந்தவொரு தனியார் ஏஜென்சிக்கும் ரயில்வே நிர்வாகம் அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும் இதன் மூலம் தெளிவு செய்யப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்படி ஏஜென்சி மற்றும் இதில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


(Release ID: 1644636) Visitor Counter : 422