சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன், “ உலக ஹெபடைடிஸ் தினத்தை“ முன்னிட்டு நடைபெற்ற 2-வது புரிதல் மின்னணு-மாநாட்டில் டாக்டர். ஹர்ஷ் வர்தன் கலந்துகொண்டார்

Posted On: 28 JUL 2020 11:55AM by PIB Chennai

“உலக ஹெப்படைடிஸ் தினத்தையொட்டி“  நடைபெற்ற 2-வது  புரிதல் மின்னணு-மாநாட்டில், மக்களவைத் தலைவர் திரு.ஓம் பிர்லா சிறப்பு விருந்தினராகவும்,  மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத் (காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றார்), மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ்வர்தன் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்,  இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் ஒத்துழைப்புடன்,  கல்லீரல் மற்றும்  பித்தநீர் அறிவியல் நிறுவனம், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 

நிகழ்ச்சியின் தொடக்கமாக, கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ்.கே.சரீன் விளக்க உரையாற்றியதுடன், கல்லீரல் ஆரோக்கியத்தின் அவசியம் மட்டுமின்றி, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் ஒத்துழைப்புடன்,  கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனம், நாடு முழுவதும் மேற்கொள்ளவிருக்கும் பல்வேறு புதுமையான முன்முயற்சிகள் மற்றும் பல்வேறு தரப்பட்ட மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட உள்ள “ஹெபடைடிஸ்-க்கு எதிராக மக்களுக்கு அதிகாரமளித்தல் :ஒரு புரிதல் இயக்கம்“  குறித்தும்  எடுத்துரைத்தார்.

மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய திரு.ஓம் பிர்லா,  “தொடர்ந்து 2-வது ஆண்டாக உலக ஹெபடைடிஸ் தின நிகழ்ச்சியில் பங்கேற்பதில், தாம் மிகுந்த மகிழ்ச்சி“  அடைவதாகக் கூறினார்.  பெருந்தொற்றுக்கு எதிராக, உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா போராடிவரும் தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில்,  நமது அர்ப்பணிப்பு உணர்வு தான்,  இந்த மின்னணு மாநாட்டில் நம் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ளது என்றார். ஹெபடைடிஸ்-சி பாதிப்பை முற்றிலும் ஒழிப்பதென்ற உலக சுகாதார அமைப்பின் குறிக்கோளை நிறைவேற்றுவதுடன்,  ஹெபடைடிஸ்-பி பாதிப்பின் தாக்கத்தையும் 2030-ம் ஆண்டுக்குள் குறைக்கவும் நாம் அனைவரும் உறுதி பூண்டுள்ளதாக அவர் கூறினார்.  இந்திய மக்களின் பிரதிநிதி என்ற வகையில், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்த இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  

மாநாட்டில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்றுப் பேசிய டாக்டர்.ஹர்ஷ் வர்தன்,  “இந்த ஆண்டு மாநாட்டின் மையக் கருத்து, “கோவிட் காலகட்டத்தில் உங்களது கல்லீரலைப் பாதுகாப்பாக பராமரிப்பீர்“  என்பது, மிகவும் பொருத்தமானது என்பதோடு, தற்போதுள்ளது போன்ற சோதனையான காலகட்டத்தில் மிகவும் அவசியமானது என்றார்.   மாண்புமிகு பிரதமரின் ஆலோசனையின்படி,  முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட செயல்திறன் மிக்க நடவடிக்கைகள் காரணமாக, கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.  கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கையும் 2 முதல் 3%-மாகத் தான் உள்ளதுடன், பெரும்பாலான பாதிப்புகள் முன் அறிகுறிகள் இல்லாதவை என்றும், நோயின் தன்மை மற்றும் நீரிழிவு, உடல்பருமன் மற்றும் கொழுப்பு மிகந்த கல்லீரல், நாள்பட்ட கல்லீரல் பாதிப்பு போன்ற இணைநோய்கள் உள்ளவர்களால் ஏற்படும் உயிரிழப்பு அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம்.   இதுபோன்ற பாதிப்புகளைக் கண்டறிய, ஆயுஷ்மான் பாரத் – சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் அயராது பணியாற்றி வருகின்றன.“    

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, சமுதாயத்தை ஒன்று திரட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய டாக்டர்.ஹர்ஷ் வர்தன், “ஹெபடைடிஸ் உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஹெபடைடிஸ் தொற்று இந்தியாவில் மிகவும் பொதுவான மற்றும் கொடிய நோய் என்றாலும்,  சுகாதார சேவைகளை வழங்குவோருக்கும், சாமான்ய மக்களுக்கும் இதன் கொடூரம் தெரியாமல் உள்ளது.  ஹெபடைடிஸ் பி மற்றும் சி தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு, கல்லீரல் புற்றுநோய் மற்றும் நாள்பட்ட கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருவதோடு, நாள்பட்ட ஹெபடைடிஸ் தொற்று பாதிப்பு உள்ளவர்களில் 80 சதவீதம் பேர், அந்தத் தொற்று தங்களை பாதித்துள்ளது என்பதை  அறியாமல் உள்ளனர்.   மக்களிடம் இதுபற்றி போதிப்பதற்கு, “தொடர்புகொள்ளுதல், பரிசோதனை மற்றும் சிகிச்சை“   என்பது தான் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். எனவே, மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரிடமும்,  குறிப்பாக தொழில் துறையினர், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர தரப்பினர் அனைவரும்,  கல்லீரல் மற்றும் பித்தநீர் அறிவியல் நிறுவனத்தின் பிரச்சார இயக்கத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.  இங்கு குழுமியுள்ள எனது சகாக்கள் அனைவரும்,  ஒசையின்றி பரவும் ஹெபடைடிஸ் பி மற்றும் சி தொற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முன்னோடி/தூதர்களாக திகழ்வதோடு,  இந்த நோய் தொடர்பான அவநம்பிக்கையைப் போக்க உதவ வேண்டும்“      என்றும் கேட்டுக் கொண்டார். 

*****


(Release ID: 1641780) Visitor Counter : 258