சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் டிஜிட்டல் கூட்டத்தில் இந்தியாவின் கோவிட் கட்டுப்பாட்டு உத்தி குறித்து டாக்டர் ஹர்ஷவர்தன் உரையாற்றினார்.
Posted On:
24 JUL 2020 4:33PM by PIB Chennai
நிர்மாண் பவனில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சுகாதார அமைச்சர்களின் டிஜிட்டல் கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தன் பங்கேற்று உரையாற்றினார் இந்தக் கூட்டத்திற்கு ரஷ்யக் கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் திரு. மிகைல் முராஷ்கோ தலைமை வகித்தார். தற்போது அச்சுறுத்தி வரும் கோவிட் பரவல் நெருக்கடி முக்கிய விவாதப்பொருளாக இருந்தது.
டாக்டர்.ஹர்ஷவர்தன் தமது உரையின் தொடக்கத்தில், உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். இந்தப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் அரசியல் அர்ப்பணிப்பு குறித்து பேசிய அவர், பிரதமர் எவ்வாறு “கொடிய தொற்று பரவாமல் தடுப்பதற்கு, நிலைமையைத் தாமே கண்காணித்து, முன்னெச்சரிக்கை, படிப்படியான தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்’’ என்பது பற்றிக் குறிப்பிட்டார்.
அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி அவர் விளக்கினார். “பயண அறிவுரைகள், நுழைவிடத்தில் கண்காணிப்பு, சமூகம் சார்ந்த கண்காணிப்பு, சோதனைக் கூடங்களை அதிகரித்தல், மருத்துவமனைகளின் திறனை அதிகரித்தல், நோய்ப்பரவலின் பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, நோயின் அபாயம் குறித்து மக்களுக்கு தொழில்நுட்ப விதிமுறைகளைப் பரப்புதல் உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டன. உரிய நேரத்தில் இந்தியாவில் அடுத்தடுத்து பொதுமுடக்கங்கள் சரியான வகையில் அமல்படுத்தப்பட்டன. தொழில்நுட்ப முறைகளை அறிந்து கொள்ளுதல், சோதனைக்கூடத் திறன்கள், மருத்துவமனைக் கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு இதனால் வாய்ப்பு கிடைத்தது. மேலும், மருந்து மற்றும் மருந்து அல்லாத தலையீடுகளை மேற்கொள்ளவும் முடிந்தது’’ என்று அவர் கூறினார்.
பொதுமுடக்கத்தின் பயன் குறித்து பேசிய அவர், “இந்தியாவில் இதுவரை 1.25 மில்லியன் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 30,000-க்கும் மேற்பட்டோர் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளனர். பத்து லட்சத்துக்கு 864 பேருக்கு தொற்று, பத்து லட்சம் மக்கள் தொகைக்கு 21-க்கும் குறைவாக உயிரிழப்பு என்ற விகிதத்தின்படி, உலகின் மிகக் குறைந்த நோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. நோயிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 63.45 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 2.3 சதவீதமாகவும் உள்ளது’’ எனக்கூறினார்.
பொதுமுடக்கக் காலத்திலும், அதற்குப் பின்னரும், சோதனைத் திறன் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு அதிகரித்திருப்பது பற்றி குறிப்பிட்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், உபகரணங்கள் பற்றி தெரிவித்தார்; “பிபிஇ எனப்படும் தனிநபர் பாதுகாப்பு உபகரணம் தயாரிக்கும் ஒரு நிறுவனம் கூட இந்தியாவில் முன்பு இல்லை. ஆனால், தற்போது, கடந்த சில மாதங்களில், ஏற்றுமதித் தரம் வாய்ந்த பிபிஇ-க்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் அளவுக்கு திறன் நாட்டில் வளர்ந்துள்ளது. இதே போல, உள்நாட்டுத் தயாரிப்பால், வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவிகள், மருத்துவ ஆக்சிஜன் ஆகியவற்றில் தேவைக்கும், விநியோகத்துக்கும் இருந்த இடைவெளி குறைந்துள்ளது’’, என்று அவர் கூறினார்.
கோவிட் மேலாண்மையின் ஒவ்வொரு விஷயத்திலும், புதுமையான முறையில் தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது பற்றி அவர் விளக்கினார். “ஆரோக்கிய சேது செயலி, செல்பேசி அடிப்படையிலான இதிகாஸ் என்னும் கண்டறியும் தொழில்நுட்பம் ஆகியவை கண்காணிப்புக்கும், நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறியவும் பயன்படுத்தப்பட்டன. பரிசோதனைக்கு ஆர்டி-பிசிஆர் செயலி, அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் தகவல்கள் பராமரிப்பு, மருத்துவமனைப் படுக்கை வசதிகள் கொண்ட செயலி என அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒற்றை கோவிட் தளம் இதற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது’’ , என்று அவர் தெரிவித்தார்.
கோவிட்-19 பரவி வரும் நிலையில், இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் எந்த அளவுக்கு பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமாக உயர்த்துவதில் பங்களித்துள்ளன என்பது பற்றியும் டாக்டர்.ஹர்ஷவர்தன் விளக்கினார். “உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவ உத்தி 2014-2023 மற்றும் 2018-இல் குங்டோ உச்சி மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட, தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பு பற்றிய கூட்டறிக்கையை சிறந்த முறையில் செயல்படுத்துவது குறித்து விவாதிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக் கூட்டத்தில் நிறுவன ரீதியான பொறிமுறை தற்போது இல்லை’’ என்று அவர் குறிப்பிட்டார். இருந்த போதிலும், இந்தக் கூட்டமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் இத்தகைய மருத்துவ முறைகளைப் பரவலாக நடைமுறைப்படுத்தி வருகின்றன என்று அவர் தெரிவித்தார். எனவே, இந்தக் கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர்கள் கூட்டங்களில், பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த துணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனையை அவர் முன் வைத்தார்.
இந்த நெருக்கடியான சூழலில் இருந்து அனைத்து நாடுகளும் மீண்டு எழுச்சி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்ட டாக்டர். ஹர்ஷவர்தன், கோவிட் தொற்றால் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொற்றுக்கு எதிராக கடுமையாகப் போராடி வரும் அனைத்து முன்களப் பணியாளர்களையும் பாராட்டிய அவர், “மனிதகுலத்துக்கு அவர்கள் கடவுளை விடக் குறைவானவர்கள் அல்ல”’ என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
*****
(Release ID: 1640977)
Visitor Counter : 256