குடியரசுத் தலைவர் செயலகம்

அசாம், பிகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் அளிக்கும் நிவாரணப் பொருட்கள் கொண்ட வண்டிகளை இந்திய குடியரசுத் தலைவர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

Posted On: 24 JUL 2020 12:39PM by PIB Chennai

இந்திய குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் 9 டிரக்குகள் கொண்ட வெள்ள நிவாரணப் பொருட்களை இன்று (24 ஜூலை 2020) மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் முன்னிலையில் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்திய குடியரசுத் தலைவர் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின்  தலைவராவார்.

 

அசாம், பிகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான இந்த நிவாரணப் பொருட்கள், டில்லியிலிருந்து அந்தந்த மாநிலங்களுக்கு ரயில் மூலமாக ஏற்றிச் செல்லப்பட்டு, அந்த மாநிலங்களில் உள்ள மாநில செஞ்சிலுவைச் சங்க கிளைகள் மூலமாக பெற்றுக்கொள்ளப்படும்.

 

தார்ப்பாய்கள், கூடாரங்கள், சேலைகள், வேட்டிகள், பருத்திப் போர்வைகள், சமையலறைப் பொருட்கள், கொசு வலைகள், படுக்கை விரிப்புகள் போன்ற பல பொருட்களும், இரண்டு தண்ணீர் சுத்திகரிப்பு யூனிட்டுகளும் இந்த நிவாரணப் பொருட்களில் அடங்கும். இவை தவிர, அறுவை சிகிச்சையின் போது அணியக்கூடிய முகக் கவசங்கள், தனிநபர் பாதுகாப்பு கவச உடைகள் கொண்ட கிட்டுகள் கையுறைகள் முகக் கவசங்கள் போன்ற கோவிட் 19 நோய் பாதுகாப்புப் பொருட்களும் இந்த நிவாரணப் பொருட்களில் அடங்கும். குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்களால் கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்ட இந்த நிவாரணப் பொருட்கள், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மருத்துவ சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கும், வெள்ள நிவாரண நடவடிக்கைகளிலும், புனரமைப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ள முன்னணியில் நின்று பணியாற்றும், இந்திய செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்களுக்கும் பாதுகாப்பு வழங்க உதவும்.

 

ஏற்கனவே இந்த மாநிலங்களில் உள்ள மாநில செஞ்சிலுவைச் சங்கங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்த நிவாரண பொருட்கள் தவிர கூடுதலாக தற்போது இந்த நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

*****


 


(Release ID: 1640899) Visitor Counter : 243