நிதி அமைச்சகம்

ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக சிக்கலில் உள்ள வீட்டுவசதித் திட்டங்கள் குறித்த சிறப்பு அனுமதி பற்றி நிதியமைச்சர் ஆய்வு

Posted On: 23 JUL 2020 7:45PM by PIB Chennai

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டுவசதித் திட்டங்களுக்கான சிறப்பு அனுமதி சாளரம் திட்டத்தின் (SWAMIH) செயல்பாடு குறித்து மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று காணொளி மூலம் ஆய்வு செய்தார். நிதி அமைச்சகத் துறைகளின் செயலாளர்கள்,  பாரத ஸ்டேட் வங்கி, எஸ்.பி.ஐ. கேப்பிட்டல் மார்க்கெட் லிமிடெட் மற்றும் SBICAPS வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ரூ.8767 கோடி மதிப்பிலான 81 திட்டங்களுக்கு இந்த நிதியத்தின் மூலம் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

SWAMIH முதலீட்டு நிதியம் - I  திட்டம் கொள்கை அறிவிப்பு நிலையில் இருந்து, கள அளவில் செயல்படும் திட்டமாக முன்னேற்றம் கண்டுள்ளது. நாடு முழுக்க 60 ஆயிரம் வீடுகளைக் கட்டி முடிப்பதற்கான 81 திட்டங்களுக்கு அதில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. என்.சி.ஆர்., எம்.எம்.ஆர். பிராந்தியங்கள், பெங்களூரு, சென்னை, புனே போன்ற பெரிய நகரங்கள், இரண்டாம் நிலையாகக் கருதப்படும் கர்னல், பானிப்பட், லக்னோ, சூரத், டேராடூன், கோட்டா, நாக்பூர், ஜெய்ப்பூர், நாசிக், விசாகப்பட்டினம், சண்டீகர் போன்ற (பிற்சேர்க்கை 1) நகரங்கள் என பரவலாக இத் திட்டங்கள் அமைந்துள்ளன. இவற்றில் 18 திட்டங்களில் முதலீடு செய்ய இறுதி ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஏழு குடியிருப்புத் திட்டங்களுக்கு (பிற்சேர்க்கை 2) பல்வேறு நிலைகளில் பணம் அளிக்கப்பட்டுள்ளது. சிக்கலில் இருக்கும் 353 திட்டங்கள் குறித்து விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன. அவற்றுக்கு உதவி அளிப்பது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. இந்த கட்டுமானத் தலங்களின் திட்டங்களை விசேஷ அனுமதி சாளரம் திட்டத்தின் மூலம் மீண்டும் செயல்படுத்துவதன் மூலம் ஏராளமான தொழில் திறன் பெற்ற மற்றும் ஓரளவு தொழில் திறன் பெற்ற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று ஆய்வின் போது தெரிவிக்கப்பட்டது. நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வீட்டுவசதித் திட்டங்களில், வீடுகள் வாங்கியவர்களில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் சுமார் 15 ஆயிரம் பேருக்கு நிவாரணம் அளிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் இந்த நிதியம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

சிறப்பு அனுமதி சாளரம் திட்டத்தின் செயல்பாடு பற்றி ஆய்வு மேற்கொண்ட நிதியமைச்சர், இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்காகப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். மூலதனத்துக்கான வட்டியை சமீபத்தில் 12 சதவீதமாக நிதியம் குறைத்த காரணத்தால், திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிறப்பு அனுமதித் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட வரையறைகளுக்கு தகுதிப் படுத்திக் கொள்வதாக இது அமைந்துள்ளது. தற்போது கடன் அளித்துள்ள நிறுவனங்களின் பங்கேற்பை விரைவுபடுத்துவதற்கு சிறப்பு அனுமதி சாளரத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிய திருமதி சீதாராமன், பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள், வங்கிச் சேவையில் இல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனங்கள் ஆகியவை இந்த சிறப்புத் திட்டத்தில் தங்களுக்கு உரிமை இருப்பதாகக் கருதி, சிக்கலில் இருக்கும் திட்டங்களின் பணிகளை விரைந்து முடிப்பதற்கான ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

திட்டத்தில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணிக்க, உருவாக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நடைமுறைகள் குறித்து நிதியமைச்சருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. திட்டத்தின் முன்னேற்றத்துக்கு ஏற்ப முதலீடுகளை சரியாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதாகவும் இந்தக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் இருக்கும். திட்டத்துக்கான பணம் கிடைப்பது, வேறு வகையில் பணம் திசை மாற்றி செலவிடப்படாமல் தடுப்பது ஆகிய விஷயங்களில் பொறுப்பேற்பு நிலை மற்றும் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.

SWAMIH  முதலீட்டு நிதியம் - I - இன் செயல்பாடுகளைக் கூர்ந்து கண்காணிக்குமாறு பொருளாதார விவகாரங்கள் துறையை நிதியமைச்சர் கேட்டுக் கொண்டார். இந்த நிதியம் திரட்டிய பணம், சிக்கலில் உள்ள திட்டங்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், இதில் ஏற்படும் தடைகளை நீக்குவதற்கும் பயன்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார். இறுதிநிலை நிதி ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று திருமதி சீதாராமன் விருப்பம் தெரிவித்தார். வீடுகள் வாங்கியவர்களுக்கு உதவும் வகையில், அவற்றுக்கு இப்போது கடன் அளித்துள்ள நிறுவனங்களின் தீவிர ஆதரவுடன், இந்த நிதியத்தின் சிறப்பு ஒதுக்கீட்டுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். ரியல் எஸ்டேட் துறைக்கு அசாத்தியமான ஆதரவு அளிக்கும் வகையிலான முன் எப்போதும் இல்லாத முன்முயற்சியாக இந்த சிறப்பு அனுமதி சாளரம் திட்டம் உள்ளது என்று கூறிய அமைச்சர், பொருளாதார சிக்கல் நிறைந்த சூழ்நிலையிலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதாக இது இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

*****


(Release ID: 1640830) Visitor Counter : 170