நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
பிரதமரின் ஏழைகள் நல உதவி திட்டம் (PMGKAY) -2 இன் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்த 19.32 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன
Posted On:
22 JUL 2020 6:37PM by PIB Chennai
21.07.2020 தேதியிட்ட இந்திய உணவுக்கழகத்தின் அறிக்கையின்படி, FCI தற்போது 253.28 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 531.05 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை ஆகியவற்றை இருப்பு வைத்துள்ளது. ஆகையால், மொத்தம் 784.33 லட்சம் மெட்ரிக் டன் உணவு கையிருப்பில் உள்ளது. (கோதுமை மற்றும் நெல் வாங்குவதைத் தவிர்த்து, அவை இன்னும் கிடங்குகளைச் சென்று அடையவில்லை). தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA), பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டம்,( பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அண்ணா யோஜனா PMGLAY) மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் ஒரு மாதத்திற்கு சுமார் 95 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் தேவைப்படுகின்றன.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து, சுமார் 139.97 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 4999 ரெயில் ரேக்குகள் மூலம் தூக்கிச் செல்லப்பட்டு மொத்தம் 285.07 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஜூன் 30, 2020 வரை நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஜூலை 1, 2020 முதல், 26.69 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 953 ரயில் ரேக்குகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. ரயில் பாதை போக்குவரத்து தவிர, சாலைகள் வழியாகவும், நீர்வழிகள் வழியாகவும் சரக்குப் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது. ஜூலை 1, 2020 முதல் மொத்தம் 50.91 லட்சம் மெட்ரிக் உணவு தானியங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மொத்தம் 1.63 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஜூலை 1, 2020 முதல் வடகிழக்கு மாநிலங்களுக்குச் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டத்தின் கீழ் (PMGKAY), 2020 ஏப்ரல், மே மற்றும் ஜூன் 3 மாதங்களுக்கு மொத்தம் 119.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் (104.3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 15.2 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை) தேவைப்பட்டது, இதில் 101.51 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 15.01 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம் 117.08 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 2020 மாதத்தில், 37.43 லட்சம் மெட்ரிக் டன் (94%) உணவு தானியங்கள் 74.86 கோடி பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன, 2020 மே மாதத்தில் மொத்தம் 37.41 லட்சம் மெட்ரிக் டன் (94%) உணவு தானியங்கள் 74.82 கோடி பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன, 2020 ஜூன் மாதத்தில், 36.19 லட்சம் மெட்ரிக் டன் (91%) உணவு தானியங்கள் 72.38 கோடி பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன (ஜூன் மாத விநியோகம் இன்னும் தொடர்கிறது). மூன்று மாதங்களில் மொத்த சராசரி விநியோகம் சுமார் 93 சதவீதம் ஆகும்.
ஜூலை 01, 2020 முதல், பிரதமரின் ஏழைகள் நல உதவித்திட்டம் – 2 (பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னா யோஜனா 2) தொடங்கப்பட்டுள்ளது, இது நவம்பர் 2020 வரை தொடரும். இந்தக் காலகட்டத்தில், 81 கோடி பயனாளிகளுக்கு மொத்தம் 201 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்படும், அதே போல் 19.4 கோடி குடும்பங்களுக்கு மொத்தம் 12 லட்சம் மெட்ரிக் டன் கொண்டைக் கடலை விநியோகிக்கப்படும்.
ஜூலை முதல் நவம்பர் 2020 வரையிலான ஐந்து மாத காலத்திற்கு மொத்தம் 201.08 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பிரதமரின் ஏழைகள் நல உதவித் திட்டம் (PMGKAY -2) -2 க்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 91.14 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 109.94 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ஆகியவை அடங்கும். மொத்தம் 19.32 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு இந்தத் திட்டத்திற்கான 100 சதவீத நிதிச்சுமையை அதாவது சுமார் 76,062 கோடி ரூபாய் நிதியை முழுவதுமாக ஏற்றுக்கொண்டுள்ளது. நான்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கோதுமை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது, அரிசி 15 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது மற்றும் மீதமுள்ள 17 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அரிசி மற்றும் கோதுமை இரண்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசு, சுயசார்பு இந்தியா (Atma Nirbhar Bharat) தொகுப்பின் கீழ், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) அல்லது மாநிலத் திட்டப் பொது விநியோகத் திட்ட அட்டைகளின் (PDS) கீழ் வராத வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மற்றும் தேவைப்படும் குடும்பங்களுக்கு 8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்க முடிவு செய்தது. அதன் படி, ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு அனைத்து புலம் பெயர்ந்தோருக்கும் இலவசமாக விநியோகிக்கப்பட வேண்டும். இதற்காக மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் 6.39 லட்சம் மெட்ரிக் உணவு தானியங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும், 2,43,092 மெட்ரிக் டன் உணவு தானியங்களை (மே 2.40 கோடி மற்றும் ஜூன் மாதத்தில் 2.47 கோடி) பயனாளிகளுக்கு விநியோகித்துள்ளன.
21.07.2020 நிலவரப்படி, மொத்தம் 389.74 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை (RMS 2020-21) மற்றும் 751.10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி (KMS 2019-20) ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டன.
ஜூன் 01, 2020 நிலவரப்படி, 20 மாநிலங்களில் / யூனியன் பிரதேசங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஆந்திரா, பீகார், டாமன் & டியு (தாத்ரா மற்றும் நகர் ஹவேலி), கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், ஜார்கண்ட், கேரளா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், உத்தரப்பிரதேசம், தெலுங்கானா மற்றும் திரிபுரா ஆகியவை இதில் அடங்கும்.
*****
(Release ID: 1640576)
Visitor Counter : 257