பிரதமர் அலுவலகம்

மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு, ஜூலை 23-ந் தேதியன்று பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்

Posted On: 22 JUL 2020 11:34AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு 2020 ஜூலை 23-ந் தேதியன்று காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த நிகழ்வில் மணிப்பூர் மாநில ஆளுனர், முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இம்பாலில் இருந்து கலந்து கொள்கின்றனர்.

2024 ஆம் ஆண்டுக்குள் நம் நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், பாதுகாப்பான குடிநீரை போதுமான அளவில் வழங்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு, ஜல் ஜீவன் இயக்கத்தைத் துவக்கியது. மழைநீர் சேகரிப்பு, நீரை சேமிப்பது, வீடுகளில் பயன்படுத்திய நீரை சுத்திகரிப்பு செய்து திரும்பவும் பயன்படுத்துவது போன்ற பல்வேறு அம்சங்களும் இத்திட்டம் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளன.

ஜல் ஜீவன் இயக்கமானது, குடிநீருக்கான சமூகம் சார்ந்த அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது. விரிவான தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றை முக்கிய கூறுகளாகக் கொண்டது. குடிநீரை ஒவ்வொருவரின் முன்னுரிமையாக முன்னிறுத்தி, இதனை மக்கள் இயக்கமாக உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தியாவில் சுமார் 19 கோடி குடும்பங்கள் உள்ளன. இவற்றில் 24 சதவீதத்தினருக்கு மட்டுமே வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமூகத்தினருடன் இணைந்து 14,33,21,049 குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதே ஜல் ஜீவன் இயக்கத்தின் குறிக்கோளாகும்.

மத்திய அரசு, 1,185 குடியிருப்புகளில் உள்ள 1,42,749 வீடுகளுக்கு, குடிநீர் குழாய் இணைப்புகளை அளிப்பதற்காக மணிப்பூர் மாநிலத்திற்கு நிதியுதவி அளித்துள்ளது. வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித் துறையிலிருந்து கூடுதல் நிதியைப் பெற்று மீதியுள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பினை வழங்க மணிப்பூர் அரசு திட்டமிட்டுள்ளது.

மணிப்பூர் குடிநீர் விநியோகத் திட்டம், கிரேட்டர் இம்பால் பகுதியில் மீதமிருக்கும் வீடுகள், 25 சிறு நகரங்கள், 1,731 கிராமப்புற குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 2,80,756 வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்படும். இந்தத் திட்டம், 2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் என்ற இலக்கை அடைய மணிப்பூர் அரசுக்கு உதவும். புதிய வளர்ச்சி வங்கி அளித்துள்ள கடன் உதவியுடன், ரூ.3054.58 கோடி செலவில் இது செயல்படுத்தப்பட உள்ளது.

********



(Release ID: 1640348) Visitor Counter : 222