நிதி அமைச்சகம்

மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் மத்திய மறைமுக வரிகள், தீர்வைகள் வாரியத்தி்ற்கு இடையே இருதரப்புத் தரவுகளைப் பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

Posted On: 21 JUL 2020 12:40PM by PIB Chennai

மத்திய நேரடி வரிகள் வாரியமும், மத்திய மறைமுக வரிகள் மற்றும் தீர்வைகள் வாரியமும், இருதரப்பு தரவுகளைப் பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் திரு.பிரமோத் சந்திர மோடி, மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் தலைவர் திரு.எம்.அஜீத் குமார் ஆகியோர், இருதரப்பு உயரதிகாரிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

2015 ஆம் ஆண்டில் இந்த இருவாரியங்களுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பதிலான இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2015 ஒப்பந்தத்திற்கு பிறகு, ஜி.எஸ்.டி அறிமுகம், ஜி.எஸ்.டி.என். சேர்க்கப்பட்டது, மத்திய கலால் மற்றும் தீர்வைகள் வாரியத்தின் பெயரானது மத்திய மறைமுக வரிகள் மற்றும் தீர்வைகள் வாரியம் என்று மாற்றப்பட்டது உள்ளிட்ட பல முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உட்பட, மாறி விட்ட சூழலைக் கருத்தில் கொண்டு இன்று இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த இரு வாரியங்களுக்கும் இடையே தரவுகளையும், தகவல்களையும், தானியங்கி முறையிலும், தொடர்ச்சியாகவும் பகிர்ந்து கொள்வதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும். வழக்கமான தரவுகள் தவிர, மற்றொரு வாரியத்திற்கு பயன்படுமானால், பிற தகவல்களையும், வேண்டுகோளின் அடிப்படையில் இரு வாரியங்களும் பகிர்ந்து கொள்ளும். இதற்கென தரவுப் பகிர்தல் செயற்குழு அமைக்கப்பட்டு, சீரான கால இடைவெளியில் சந்தித்து இந்த செயல்முறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆராயும்.

கையெழுத்திடப்பட்ட நாள் முதல் நடைமுறைக்கு வரும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் மத்திய மறைமுக வரிகள் வாரியங்களுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒத்திசைவுக்கான புதிய தொடக்கமாக இருக்கும்.

 

*****

 


(Release ID: 1640184) Visitor Counter : 322