குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
ஊரக, வேளாண் மற்றும் பழங்குடியின பிரிவில் குறு வணிகத்துக்கு குறு நிதிக் கொள்கை தற்போதைய அவசியத் தேவையாகும்- திரு. நிதின் கட்கரி
Posted On:
20 JUL 2020 5:01PM by PIB Chennai
குறு/சிறு தொழில்கள்/ மீனவர்கள், படகுக்காரர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், காய்கறி விற்பனையாளர்கள், ஏழைகள், சுய உதவிக் குழுக்கள் போன்ற தொழில்கள் ஆகியவற்றுக்கு நிதி வழங்குவதற்கான கொள்கை அல்லது மாதிரி இப்போதைய அவசியத் தேவை என்று மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில், சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். ‘’எம்எஸ்எம்இ மற்றும் வாழ்வாதார மறுவடிவமைப்பு குறித்த பான் ஐஐடி குளோபல் இ-மாநாடு’’ நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் மீன்பிடித்தல், தேனீ வளர்த்தல், மூங்கில் வளர்ப்பு உள்ளிட்ட மிகச் சிறிய தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் கூறினார். பொருளாதார ரீதியிலும், சமுதாய அடிப்படையிலும் பின்தங்கிய அவர்களுக்கு போதிய நிதி ஆதரவு இல்லாத நிலை உள்ளது என்று அவர் தெரிவித்தார். கடின உழைப்பு, திறமை, நேர்மை ஆகிய நற்குணங்களைக் கொண்டிருந்த போதிலும், நிதிஆதாரம் இல்லாததால், தங்கள் தொழில் மற்றும் வேலையில் மதிப்புக் கூட்டு முறையைக் கையாள முடியவில்லை. சிறிய அளவில் அவர்களுக்கு நிதி, தொழில்நுட்பம், சந்தை ஆதரவு ஆகியவற்றை வழங்கினால், அவர்கள் தங்கள் தொழிலை, வேலையை முன்னேற்றத்துடன் செய்ய முடியும். இதனால், ஊரகப்பகுதி, விவசாயம், பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் நிச்சயம் வேலை வாய்ப்பு அதிகரித்து, நமது உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்திக்கு வலு சேர்க்கும்.
சமுதாய ரீதியாகவும், பொருளாதார அடிப்படையிலும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியுள்ள இத்தகைய தொழில் செய்வோருக்கு நிதி வழங்குவதற்கான மாதிரியை உருவாக்குவதற்கு ஆலோசனைகளை அளிக்குமாறு திரு.கட்கரி கேட்டுக் கொண்டார். இந்த மாதிரி, வெளிப்படையானதாகவும், ஊழலற்றதாகவும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த குறைந்த நடைமுறை இடையூறுகளுடன், சிறு அளவிலான அனுமதியுடனும் இருக்க வேண்டும் என அவர் கூறினார். நிதிஆயோக், நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும் போது, மூங்கில், தேன் உற்பத்தி, மாறுபட்ட எரிபொருள்கள் மற்றும் இதர பிரிவுகளில் ஈடுபடும் ஏராளமான தொழில் துறையினருக்கு இது பெரிதும் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். காணொளிக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பங்களாதேஷ் கிராமிய வங்கி நிறுவனரும், நோபல் பரிசு பெற்றவருமான பேராசிரியர் முகமது யூனூசும் தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
*****
(Release ID: 1640030)
Visitor Counter : 230