மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

சுயசார்புச் செயலி கண்டுபிடிப்பு சவாலுக்கான கடைசி தேதியை அரசு நீட்டிக்கிறது

Posted On: 17 JUL 2020 5:48PM by PIB Chennai

சுயசார்பு இந்தியா செயலியைக் கண்டுபிடிக்கும் புதுமை சவாலுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், சவாலுக்கான உள்ளீடுகளை சமர்ப்பிக்கும் கடைசி தேதியை ஜூலை 26, 2020 வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த சவால் புதுமையான நமது அரசு (MyGov) இணைய முகப்பில் வெளியாகியுள்ளது. இதில் பங்கேற்க ஒருவர் பின்வரும் வலைதளத்தின் மூலம் உள்நுழையலாம். https://innovate.mygov.in/app-challenge/ .

ஜூலை 4 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட சுயசார்பு இந்தியா செயலியைக் கண்டுபிடிக்கும் புதுமை சவால், நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் இளம் தொழில் முனைவோரிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடையாளம் காணப்பட்ட எட்டு பிரிவுகளில் இதுவரை 2353 உள்ளீடுகள் பெறப்பட்டுள்ளன. தனிநபர்களிடமிருந்து 1496 என்ற அளவிலும், பிற அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிலிருந்து சுமார் 857 ஆகியவை இதில் அடங்கும். தனிநபர்களிடமிருந்து பெறப்பட்டவைகளில், சுமார் 788 செயலிகள் பயன்படுத்தத் தயாராக உள்ளன, மீதமுள்ள 708 செயலிகள் வளர்ச்சியாக்கத்தில் உள்ளன. நிறுவனங்கள் சமர்ப்பித்த செயலிகளில், 636 செயலிகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன, மீதமுள்ள 221 செயலிகள் வளர்ச்சியாக்கத்தில் உள்ளன. சமர்ப்பிக்கப்பட்ட செயலிகள் வகை வாரியாக பிரிக்கப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு: வணிகத்தின் கீழ் 380, உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தின் கீழ் 286, இணையக் கற்றலின் கீழ் 339, சமூக வலைப்பின்னலின் கீழ் 414, விளையாட்டுகளின் கீழ் 136, அலுவலகம் மற்றும் வேலையின் கீழ் 238, செய்திக்குக் கீழ் 75 மற்றும் பொழுதுபோக்குக் கீழ் 96 ஆகியவை அடங்கும். மற்ற பிரிவின் கீழ் சுமார் 389 செயலிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தச் செயலிகளில் சுமார் 100 செயலிகளில் 100,000க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள் உள்ளன. இதை அனுப்பிய விண்ணப்பதாரர்கள் தொலைதூர மற்றும் சிறுநகரங்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்து வந்தவர்கள். இது நம்நாட்டில் இருக்கும் திறமையைக் காட்டுகிறது மற்றும் இந்தச் செயலிக் கண்டுபிடிப்பு புதுமைச் சவால் உலகெங்கிலும் உள்ள திறமையானவர்களுக்கு இணையாக இந்தியாவை கட்டியெழுப்புவதற்கு, இந்திய தொழில்நுட்ப உருவாக்குநர்கள், தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்களுக்கு சரியான வாய்ப்பாகும், வலுவான, அளவிடக்கூடிய, பயன்படுத்த எளிதான, பாதுகாப்பான செயலிகளை அடையாளம் காண்பது தான் உண்மையான சவாலாகும்,  மேலும் அந்தச் செயலி ஒரு முறை பயன்படுத்திய பயனர்கள் மீண்டும் அதே செயலியைப் பயன்படுத்த வழிவகுக்கும் வகையில் எளிதான செயல்முறைகளோடு இருக்கவேண்டும்

கடந்த மாதம் காணொளிக் காட்சி மூலம் தொடங்கப்பட்ட புதுமைச் சவாலுக்கு உற்சாகமான வரவேற்புடன், புதுமையான தீர்வுகளை உருவாக்குவதற்கான நமது தொடக்க நிறுவனங்களின் திறனும் நிரூபிக்கப்பட்டுள்ளது, இதில் 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 12 விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முன்மாதிரிகளை உருவாக்கப் பட்டியலிடப்பட்டுள்ளன. சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுகளின் தரத்தைப் பொறுத்தவரை, நடுவர் குழுவினர் இந்தக் கட்டத்தில் பட்டியலை 3 முதல் 5 வரை விரிவுபடுத்த வேண்டியிருந்தது, ஏனெனில் அவர்கள் அனைவருக்கும் முழு அளவிலான தீர்வுகளை உருவாக்குவதற்கான திறன் இருப்பது கண்டறியப்பட்டது. முதல் 3 நிறுவனங்களில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சர்வ் வெப்ஸ், ஹைதராபாத்தைச் சேர்ந்த பீப்பிள்லிங்க் மற்றும் ஆலப்புழாவைச் சேர்ந்த டெக் ஜென்சியா ஆகியவை அடங்கும். முழு அளவிலான தீர்வை உருவாக்க அவர்களுக்கு தலா .20 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. நடுவர் குழுவால் 4 மற்றும் 5 வது இடங்களைப் பெற்ற இரண்டு நிறுவனங்களில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சோல்பேஜ் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஹைட்ராமீட் ஆகியவை அடங்கும். அவர்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் மானியம் வழங்கப்பட்டதுடன், அந்நிறுவனங்களும் முழு அளவிலான தீர்வையும் உருவாக்கி வருகிறது. மேலும், காஜியாபாத்தைச் சேர்ந்த ஏரியா டெலிகாம், ஜெய்ப்பூரிலிருந்து வீடியோமீட், டெல்லியைச் சேர்ந்த வாக்ஸெட்டு மற்றும் சென்னையைச் சேர்ந்த ஜோஹோ ஆகிய 4 நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டிருந்ததாக நடுவர் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது,. இந்த சவால் சரியான ஊக்கமளித்தால் நமது தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகத்தரம் வாய்ந்த தீர்வுகளை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது.

*****



(Release ID: 1639442) Visitor Counter : 215