சுற்றுலா அமைச்சகம்
சுற்றுலா அமைச்சகத்தின் பிரசாத் திட்டத்தின்கீழ் ‘குஜராத் மாநிலம் சோம்நாத் பகுதியில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும்’ திட்டத் தொடக்க விழாவில் மத்திய சுற்றுலா (தனிப்பொறுப்பு) அமைச்சர் திரு. பிரகலாத் சிங் படேல் காணொலி காட்சி வழியாகக் கலந்து கொண்டார்
Posted On:
16 JUL 2020 7:40PM by PIB Chennai
குஜராத் மாநிலம் சோம்நாத் பகுதியில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும்’ திட்டத்திற்காக இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய சுற்றுலா (தனிப்பொறுப்பு) அமைச்சர் திரு. பிரகலாத் சிங் படேல் குஜராத் மாநில முதல்வர் திரு. விஜய்பாய் ரூபானியுடன் காணொலி வழியாக இணைந்து கொண்டார். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரசாத் திட்டத்தின்கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட ‘குஜராத் மாநிலம் சோம்நாத் பகுதியில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும்’ திட்டம் ரூ. 45.36 கோடி செலவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வாகன நிறுத்தங்கள், சுற்றுலா வசதிகளுக்கான மையம், திடக்கழிவு மேலாண்மை ஆகியவை உலகத் தரத்தில் உயர்தரமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு வழங்கியிருந்த நிதியை முழுமையாகப் பயன்படுத்தி சர்வதேச தரத்தில் இந்த வசதிகளை உருவாக்கியதற்காக திரு. படேல் மாநில அரசிற்கு பாராட்டுதல்களைத் தெரிவித்தார். சுற்றுலாத் துறையின் கீழ் தேவைப்படுகின்ற அனைத்து உதவிகளையும் ஒத்துழைப்பையும் மத்திய சுற்றுலா அமைச்சகம் செய்யும் என்றும் மாநில அரசிடம் அமைச்சர் உறுதி கூறினார்.
தல யாத்திரை மற்றும் பாரம்பரிய தலங்கள் என அடையாளம் காணப்பட்ட பகுதிகளை ஒருங்கிணைந்த வகையில் மேம்படுத்துவது என்ற நோக்கத்துடன் 2014-15 நிதியாண்டில் சுற்றுலா அமைச்சகம் இந்த பிரசாத் (சுற்றுலாத்தலங்களின் புத்துயிர்ப்பு, ஆன்மீகம், பாரம்பரியம் ஆகியவற்றை பெருக்குவதற்கான முயற்சி) திட்டத்தை ஒரு தேசிய இயக்கமாகத் தொடங்கியது. (சாலை, ரயில் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து ஆகியவற்றின் மூலமான) இந்த சுற்றுலாத் தலங்களின் நுழைவுப் பகுதிகள், இறுதிப் பகுதிக்கான தொடர்பு வசதி, தகவல்/விளக்கத்திற்கான மையங்கள், ஏடிஎம்/பணப் பரிமாற்றம், சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையிலான போக்குவரத்து வசதிகள், புதுப்பிக்கத்தக்க மின்சார ஆதாரங்களைக் கொண்டு அந்தப் பகுதிகளின் விளக்கு வசதி, ஒளியூட்டும் வசதி, வாகன நிறுத்த வசதி, குடிநீர், கழிப்பறைகள், பொருட்களை வைக்கும் அறைகள், காத்திருக்கும் அறைகள், முதலுதவி மையங்கள், கைத்தொழில் கூடங்கள், சந்தைகள், நினைவுப் பரிசுப் பொருட்களுக்கான கடைகள், உணவகங்கள், மழைக்காலங்களில் ஒதுங்குவதற்கான நிழற்குடைகள், தொலைத்தொடர்பு வசதிகள், இணைய தொடர்பு வசதிகள் போன்ற அடிப்படையான சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் ஆகியவற்றுக்கான கட்டமைப்பு மேம்பாட்டை மேற்கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
*****
(Release ID: 1639315)
Visitor Counter : 221